கொள்முதல் விலை உயர்த்தி வழங்கக் கோரி கரும்பு விவசாயிகள் மறியல்: 108 பேர் கைது

மதுரை:
கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கக் கோரி மதுரையில் மறியலில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள் 108 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த இப் போராட்டத்தில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.பழனிசாமி தலைமை வகித்தார். போராட்டம் குறித்து அவர் கூறியபோது,

கரும்பு சாகுபடி அதிக செலவு ஏற்படக்கூடியது. நாடு முழுவதும் ஏறத்தாழ 5 கோடி விவசாயிகள் கரும்பு விவசாயத்தை நம்பியுள்ளனர். நாடு முழுவதும் 530 சர்க்கரை ஆலைகள் உள்ளன. சர்க்கரை ஆலைகளுக்கு சர்க்கரை உற்பத்தியில் மட்டுமின்றி மதுபான உற்பத்திக்கான மொலாசஸ், காகித ஆலைக்கான சர்க்கரை கழிவு, எத்தனால், மின்உற்பத்தி என உபதொழில்கள் மூலம் வருவாய் கிடைக்கிறது. அதேநேரம் கரும்பு சாகுபடிக்கான செலவு அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ற விலை கிடைப்பதில்லை. மேலும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

உற்பத்திச் செலவுக்கு மேல் குறைந்தபட்சம் 50 சதவீதம் என்ற நியாயமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரை ஏற்கப்படவில்லை. சர்க்கரை ஆலைகளின் லாபத்தில் விவசாயிகளுக்கு பங்குத் தொகை அளிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. நிலுவைத் தொகையை வழங்கவும், கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் நஷ்டத்துக்கான காரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரியும், கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கவும் வலியுறுத்தி இப் போராட்டம் நடத்தப்பட்டது என்றார்.

இந்த மறியலில் ஈடுபட்ட 108 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.