ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு விதித்துள்ள விதிமுறைகள் !

 
தமிழகத்தில் பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை மீண்டும் நடத்த
மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை சார்பில் இன்று 07-01-2016 தேதியிட்டு வெளியிடப்பட்டுள்ள அனுமதி அளித்து வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியுள்ளதாவது :-.
 
1960 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விலங்குகளுக்கு எதிரான வதைச் சட்டத்தின் படியும், இதைத் தொடர்ந்து கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி கரடிகள், குரங்குகள், புலிகள், சிறுத்தைகள், சிங்கங்கள் மற்றும் காளைகள் ஆகிய விலங்குகளை காட்சிப்படுத்தவோ, அவைகளை பயிற்றுவித்து எவ்வித நிகழ்ச்சிகளையோ நடத்தக் கூடாது.
நாட்டில் சில குறிப்பிட்ட சமூகங்களின் நிகழ்வுகளிலும், சில பராம்பரிய நிகழ்ச்சிகளிலும் காளைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, மகாராஷ்டிரம், கர்நாடகம், பஞ்சாப், ஹரியாணா, கேரளா மற்றும் குஜராத் மாநிலங்களில் மாட்டுவண்டி பந்தயம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் காளைகளைப் பயன்படுத்துவதற்கு கீழ்கண்ட விதிமுறைகள் வகுக்கப்படுகின்றன.
1. ஆண்டுதோறும் நடைபெறும் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற வேண்டும்.
2. மாட்டுவண்டி பந்தயங்கள் குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டுமே நடத்த வேண்டும். இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் நடத்தக்ககூடாது. ஜல்லிக்கட்டை பொருத்தவரையில், காளை அவிழ்த்துவிடப்படும் இடத்திலிருந்து 15 மீட்டர் தொலைவுக்குள் அடக்க முயற்சிக்க வேண்டும்.
3. இந்நிகழ்ச்சிகள் ஈடுபடுத்தப்படும் காளைகள் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளால் சோதனை செய்யப்பட வேண்டும். அவைகள் நல்ல உடல் நலத்துடன் இருத்தல் வேண்டும். மேலும் எவ்வித போதை பொருள்களும் அளிக்கக் கூடாது.
4. நிகழ்ச்சிகளின் போது, விலங்குகள் உரிமைகள் குறித்து உச்சநீதிமன்றம் மே 7, 2014 ஆம் ஆண்டு வகுத்துள்ள 5 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
மேலும், நிகழ்ச்சியின் போதும், நிகழ்ச்சிக்கு தயாராகும் போதும் காளைகள் துன்புறுத்தப்படவில்லை என்பதை மாவட்ட அளவிலான விலங்குகள் வதைக்கு எதிரான குழுவும், விலங்குகள் நல வாரியமும் கண்காணிக்க வேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.