ஜன.22 துவங்கி ஒரு மாதம் நடக்கிறது சகோதரி நிவேதிதை ரத யாத்திரை!

ஆன்மிகச் செய்திகள் உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் தமிழகம்

சுவாமி விவேகானந்தரின் சிஷ்யை சகோதரி நிவேதிதையின் 150வது பிறந்த தினத்தை முன்னிட்டு ரத யாத்திரை நடத்தப் படுகிறது.

சகோதரி நிவேதிதை, மகாகவி பாரதியின் மானசீக குருவாக விளங்கியவர். நிவேதிதையை சந்தித்த பின்னர் மகாகவி பாரதி தன் பெண்ணியப் பார்வையை மேம்படுத்திக் கொண்டார். அவரது 150வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இரண்டு லட்சம் மாணவியரிடையே தேச பக்தியை ஊட்டும் விதமாக, ஜனவரி 22ல் ரத யாத்திரை துவங்குகிறது.

அயர்லாந்தைச் சேர்ந்த மார்கரெட் எலிசபெத் நோபிள் 1895ல் சுவாமி விவேகானந்தரை சந்தித்தார். சுவாமியின் ஆன்மிக அறிவுரைகளில் ஈடுபட்டு, அவரது சிஷ்யையானார். பின்னர் சகோதரி நிவேதிதை என தன் பெயரை மாற்றிக் கொண்டார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்களுக்கு வழிகாட்டி, பெண் கல்வி, இந்திய கலை கலாசார பாரம்பரிய பாதுகாப்புக்காகப் போராடினார். இளைஞர்களிடம் தேசிய சிந்தனையை விதைத்தார். அவரது 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாணவியரிடையே இந்திய கலாசாரம் மற்றும் தேச பக்தியை ஊட்டும் விதமாக தமிழகத்தில் ரத யாத்திரை நடத்தப்படுகிறது.

இது குறித்து இந்த யாத்திரை விழா அமைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக பாஜக., பொதுச் செயலருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘பெண்ணே நீ மகத்தானவள்’ என்ற தலைப்பில் ராமகிருஷ்ண மடம் மற்றும் சாரதா மிஷன் அமைப்புகள் நடத்தும் இந்த யாத்திரை, ஜன. 22ல் கோவையில் துவங்குகிறது.

27 மாவட்டங்களில் உள்ள பெண்கள் கல்லுாரிகள், பள்ளிகளுக்குச் செல்கிறது. செல்லும் வழியில் உள்ள பொது இடங்களில் தேசபக்தி, பெண் கல்வி தொடர்பான பிரசாரம் நடைபெறும். இவற்றில் சுகி சிவம், பாரதி பாஸ்கர் உள்ளிட்ட பலர் பேசுகின்றனர். இதற்காக ராமநாதபுரம் ராணி லட்சுமி சேதுபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்புக் குழுவில், ரமேஷ் பிரபா, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த ரத யாத்திரை, 3,000 கி.மீ. பயணித்து இரண்டு லட்சம் மாணவியரை சந்தித்த பின், பிப். 22ல் சென்னையில் நிறைவு பெறுகிறது. நிறைவு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்” என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.