கரும்பு கொள்முதல் விலை போதாது: ராமதாஸ்

 கரும்பு கொள்முதல் விலை போதாது; உழவர்கள் வயிற்றில் அடிக்கக் கூடாது என்று பாமக நிறுவுனர்  ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

2015&16 ஆம் ஆண்டிற்கான கரும்புக் கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.2850 வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இந்த விலை கரும்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்த விலை கசக்குமே தவிர ஒருபோதும் இனிக்காது.

நீலகிரியில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய நான், நடப்பாண்டில் கரும்பு அரவைப் பருவம் தொடங்கி 3 மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் இதுவரை கரும்புக்கான கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவிக்காதது உழவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என கூறியிருந்தேன். மாலையில் கரும்புக்கு கொள்முதல் விலையை ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். ஆனால், அவ்விலை உழவர்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்கும் என்று தோன்றவில்லை. 2011 ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் இருந்தே ஜெயலலிதா அரசு உழவர்களுக்கு செய்து வருவது துரோகம் மட்டுமே. 2011&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் அதிமுக ஆட்சிக்கு வந்தால்  ஒரு டன் கரும்புக்கு ரூ.2500 கொள்முதல் விலை வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் அந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு ஒரு டன் கரும்புக்கு ரூ.2100 மட்டுமே கொள்முதல் விலையாக அறிவித்தார். அடுத்தடுத்த ஆண்டுகளிலும் ஜெயலலிதாவின் துரோகங்கள் தொடர்ந்தன.

பொதுவாக மத்திய அரசு அறிவிக்கும் நியாயவிலையுடன் தமிழக அரசின் சார்பில் ரூ.650 பரிந்துரை விலை சேர்த்து கரும்புக்கான கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும். ஆனால், 2013 ஆம் ஆண்டில் மாநில அரசின் பரிந்துரை விலையை 650 ரூபாயிலிருந்து ரூ.550 ஆகவும், 2014 ஆம் ஆண்டில் 450 ரூபாயாகவும் குறைத்து விவசாயிகளின் வயிற்றில் அதிமுக அரசு அடித்தது. இதனால் கடந்த ஆண்டில்  ரூ.2850 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டிய கரும்பு விலை ரூ.2650 ஆக அறிவிக்கப்பட்டது. அதன்பின் நடப்பாண்டில் பரிந்துரை விலையில் குறைக்கப்பட்ட தொகையில் ஒரு பாதியை ஏற்றி ஒரு டன்னுக்கு ரூ.2850 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலோட்டமாக பார்ப்பதற்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொள்முதல் விலை ரூ.200 உயர்த்தப்பட்டிருப்பது போல தோன்றினாலும் உண்மை அதுவல்ல.  கடந்த 5 ஆண்டுகளில் மாநில அரசின் பரிந்துரை விலை ஒரு பைசா கூட உயர்த்தப்படவில்லை. மாறாக 2011&ஆம் ஆண்டுக்கு முன் இருந்ததை விட ரூ.100 குறைக்கப்பட்டிருப்பது தான் உண்மை.

2011&ஆம் ஆண்டிலிருந்து இதுவரை கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் ஆதார விலை ரூ.850 உயர்த்தப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா அளித்த வாக்குறுதியின்படி 2011&ஆம் ஆண்டில் கரும்பு கொள்முதல் விலை ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டிருந்தால் இப்போது கரும்புக்கான விலை டன்னுக்கு ரூ.3350 ஆக உயர்ந்திருக்கும். இது விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் விலை இல்லை என்றாலும் கூட ஓரளவு லாபம் கிடைக்கும் விலையாக இருந்திருக்கும். ஆனால், இந்த விலை கிடைக்காமல் போனதற்கு முழுக்க முழுக்க ஜெயலலிதா தான் காரணம். இப்போதும் கூட கொள்முதல் விலையாக ரூ.2850 அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், சர்க்கரை ஆலைகள் எவ்வளவு கொடுக்கும் என்பது தெரிய வில்லை. கடந்த ஆண்டு ஒரு டன்னுக்கு ரூ.2250 மட்டுமே கொடுத்த சர்க்கரை ஆலைகள் மீதமுள்ள தொகையை தராமல் நிலுவையில் வைத்துள்ளன. இந்த ஆண்டில், கடந்த ஆண்டை விட குறைவாக ரூ.2150 மட்டும் தான் தர முடியும் என்று சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் கூறியிருப்பதாக தெரிகிறது.

கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் மேற்கொண்ட மதிப்பீட்டின்படி, 2013-&14 ஆம் ஆண்டில் ஒரு டன் கரும்பு உற்பத்தி செய்ய ரூ.2120 செலவாகிறது. அதன்பின் இரு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அது ரூ.2600 ஆக வைத்துக் கொண்டாலும் கூட லாபமாக 50%, அதாவது ரூ.1300 வாகன வாடகை ரூ.100 சேர்த்து ஒரு டன்னுக்கு ரூ.4,000 கொள்முதல் விலை நிர்ணயிப்பது தான் சரியானதாக இருக்கும்.  எனவே, ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலையாக ரூ.4,000 நிர்ணயித்து அந்தத் தொகை முழுமையாக விவசாயிகளுக்கு வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். அத்துடன் ஏற்கனவே உள்ள நிலுவைத்தொகையையும் உடனடியாக பெற்றுத்தர வேண்டும்