தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உச்ச நீதிமன்றம் விதித்த தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன. இந்த நிலையில், மத்திய அரசின் உத்தரவுக்கு தடைவிதிக்கக்கோரி விலங்குகள் நலவாரியம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்த மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதித்தது. தடையை கண்டித்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் போராட்டங்கள் நடந்தன.
நேற்று ஜல்லிக்கட்டு நடைபெறாததால் பாலமேட்டில் ஏராளமானோர் கருப்புச்சின்னம் அணிந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று வாடிவாசல் முன்பு குவிந்தனர். அங்கு ஜல்லிக்கட்டு தடையை நீக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பெண்கள் ஒப்பாரி போராட்டம் நடத்தினார்கள். விலங்குகள் நல அமைப்பின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன. வாடிவாசல் பகுதியில் இரும்பு தடுப்புகள் அமைத்து துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ரகசிய கேமராக்களும் பொருத்தப்பட்டு இருந்தன. இதே போன்று, அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் முற்றுகை போராட்டம் நடத்தினர். ஜல்லிக்கட்டு நடைபெறவேண்டி சில நிமிடம் அமைதி வழிபாடு நடத்தினர். வாடிவாசல் பகுதியில் இருந்து பஸ் நிலையம் வரை கருப்பு கொடியுடன் அணிந்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்கள். அந்த பகுதி முழுவதும் கருப்பு கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நேற்று 5-வது நாளாக அரசு பேருந்துகள் ரத்து செய்யப்பட்டன. அழகர்கோவில் அருகில் உள்ள பொய்கைக்கரைப்பட்டியில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாலமேடு அருகே உள்ள ராஜாக்கள்பட்டியில் சிலர் ஜல்லிக்கட்டு காளைகளை கயிற்றில் கட்டி தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தினர். இதை பார்ப்பதற்காக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் திரண்டனர்.
இதேபோல் மேலும் சில பகுதிகளிலும் காளைகளை ஆங்காங்கே அவிழ்த்துவிட்டனர். காவல் துறையினர் அவர்களை விரட்டி அடித்தனர். அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாக்குழுவினருடன் ஊர் பொதுமக்கள் இணைந்து வாடிவாசல் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காளைகளுடன் வந்தவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். தங்கள் மாடுகளை குளிப்பாட்டுவதற்காக கொண்டு செல்வதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல் துறையினர் தடியடி நடத்தி அவர்களை விரட்டினர்.
இதுதொடர்பாக 10 பேரை காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள். அவனியாபுரம் பகுதியில் ஒரு நகர பேருந்து மீது கல் வீசப்பட்டதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. தஞ்சையை அடுத்த வல்லம் பகுதியில் ஜல்லிக்கட்டு பேரவையினர் கருப்பு கொடி பேரணி நடத்தினர். இதில் 10-க்கும் மேற்பட்ட காளைமாடுகள், குதிரை, ரேக்ளா வண்டிகளும் கலந்து கொண்டன. பேருந்து நிலையத்தில் அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டியில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கசிநாயக்கன்பட்டியில் மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் கலைந்து போகும்படி கூறினார்கள். அங்கிருந்து ஊருக்குள் சென்ற அவர்கள் தடையை மீறி எருது விட்டு வீரவிளையாட்டில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு போல், சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மஞ்சுவிரட்டும் பிரசித்தி பெற்றதாகும்.
நேற்று சிங்கம்புணரியில் தடையை மீறி சுற்றுவட்டார கிராம மக்கள் அலங்கரிக்கப்பட்ட காளைகளுடன் வந்து அவற்றை அவிழ்த்துவிட்டனர். காளைகளின் கழுத்தில் கட்டப்பட்டு இருந்த துண்டு, ரூபாய் நோட்டு மாலை, கரும்பு ஆகியவற்றை எடுக்க மாடுபிடி வீரர்களும் களத்தில் இறங்கினர். இதேபோல் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று காளைகளின் கழுத்தில் கரும்பு, ரூபாய் நோட்டு மாலைகள் அணிவித்து அவிழ்த்துவிட்டனர். ஏராளமான கிராமங்களில் நேற்று மாலை 3 மணிக்கு மேல் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் தடையை மீறி நடந்தன.
நூற்றுக்கணக்கான காளைகள் இதில் பங்கேற்றன. மாடுபிடி வீரர்கள் மாடுகளை பிடிக்க போட்டி போட்டு களத்தில் இறங்கினர். மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர். காரைக்குடி அருகே உள்ள கோவிலூரில் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து மாடுகளை அவிழ்த்துவிட்டனர். இதேபோல், வேலூரை அடுத்த சாத்துமதுரை பகுதியிலும் காளை விடும் திருவிழா உற்சாகமாக நடந்தது .இதனால் விருதம்பட்டு பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
இதனால் காளைகள் சாலையில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் காட்பாடி, விருதம்பட்டு திடலில் நேற்று மாலை காளை விடும் திருவிழா நடந்தது. காளைகளை ஓடவிட்டு அதன் பின்னே இளைஞர்கள் விரட்டிக்கொண்டு ஓடினர். பெரும்பாலான காளைகள் சீறிப்பாய்ந்து இளைஞர்களை கீழே தள்ளிவிட்டு வேகமாக ஓடிவிட்டன. இந்த காளை விடும் விழாவை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர்.



