
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த புளியரையில், கேரள மாநில எல்லைப் பகுதியில் புகழ்பெற்ற எஸ் வளைவு கடந்து ரயில்வே பாலத்தை அடுத்து வரும் போது, வாகனங்கள் திக்கித் திணறி தடுமாறும். காரணம், சாலையில் உள்ள மரணப் பள்ளங்கள்.
பல நாட்களாக இந்தப் பள்ளங்களைச் சரி செய்யுமாறு பலரும் கோரிக்கைகள் விடுத்து வந்தனர். இந்நிலையில், இந்தப் பள்ளங்களை மூடுவதற்கு போலீஸார் தாங்களாவே முயற்சி மேற்கொண்டனர்.
செங்கோட்டை காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார், புளியரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தினேஷ் பாபு ஆகியோரது முயற்சியால் ரயில்வே பாலத்திற்கு கீழ் உள்ள சேதமடைந்த சாலைகள் பொதுமக்கள் உதவியுடன் செப்பனிடப் பட்டன. அங்கே காங்கிரீட் தளங்கள் அமைத்து ரூபாய் 60,000 மதிப்பில் முக்கியமான சாலைப் பகுதியில், இரண்டு இடங்களில் செப்பனிடும் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது.
கேரளத்துக்குச் செல்வதற்காக இந்தச் சாலையைப் பயன்படுத்தி வரும் பொதுமக்கள் போலீசாரின் இந்த நடவடிக்கையைப் பாராட்டினர்.



