ஏமாந்த இலவு காத்த கிளிகளை மீண்டும் ஏமாற்ற திட்டம் போடும் அரசியல் கட்சிகள் !

Published:

ஆட்சி கட்டிலில் அமர தேர்தல் நடைபெறும் காலங்களில் மீண்டும் மீண்டும் ஏமாந்து கொண்டே இருக்கும் இலவு காத்த கிளிகளை எப்படியெல்லாம் ஏமாற்றலாம்.என்ன திட்டம் போட்டால் இலவு காத்த கிளிகள் மீண்டும் ஏமறுவதற்குத் தயாராகும் என்பது அரசியல் கட்சிகளுக்கு நன்றாகவே தெரியும்!

ஆட்சிக்கு வந்தால் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்ய மூத்த குடிமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் இப்போது அமர்ந்திருக்கும் அஇஅதிமுகவின் 2011ஆ்ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் இந்த வாக்குறுதி இடம் பெற்றிருந்தது.

மூத்த குடிகளுக்கு வாயெல்லாம் பல். இலவசத்தில் ஊறிப்போனதின் – ஊசிப்போனதின் விளைவு. அக் கட்சி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதும் கட்சியினரைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சி இவர்களுக்கே. அளித்த வாக்குறுதிகளில் சில ஒன்றன் பின் ஒன்றாக நடைமுறைக்கு வந்தபோது தங்களுக்கான அறிவிப்பு அடுத்து வந்து விடும் என்று இலவு காத்த கிளி போல் காத்திருந்த இலவச எதிர்பார்ப்பாளர்கள் நம்பினர்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

ஆனால் ‘குடி’மக்கள் மீது காட்டிய அக்கறையை மூத்த குடியினர் மீது அரசு காட்டாததைக் கண்டு வெம்பினர். வாக்களித்தவர்கள் வைத்தனர்; வசை பாடினர்.

சட்டப் பேரவைக் கூட்டத்தில் ஆளும், எதிர்க் கட்சியினர் யாரும் இது குறித்து வாயைத் திறக்கவில்லை. பொதுவுடமை பேசும் புண்ணியவான்கள் கூட மவுனிகளாக வலம் வந்தனர். எந்தக் கூட்டணியில் இடம் பெறுவது, எத்தனை இடங்கள் பெறுவது? ஒருத்தர் கழுத்தறுத்தால் அடுத்து யாரிடம் ஓடுவது என்ற சிந்தனையில் மூழ்கி விட்டனர் போலும்!

 

நாணயமில்லாமல் கடன் சுமையினால் அரசு அல்லாடுவதாகக் கூச்சலிடும் எதிர்க்கட்சியினர், மூத்தோர் விஷயத்தில் அரசு நாணயம் இல்லாமல் நடந்து கொண்டதை கண்டு கொள்ளாததைக் காணும் போது, மூத்தோரை அவமதிப்பதில் கட்சி பேதம் ஏதுமில்லை என்பது வெட்டவெளிச்சமானது.

 

நா நயமாகப் பேசுவோருக்கு நாணயம் முக்கியமே தவிர நாணயமல்ல என்பதை மூத்தோர்கள் உணர்ந்து கொண்டனரா என்பதும் கேள்விக்குறியே! ஏமாந்த இலவு காத்த கிளிகளும், மீண்டும் ஏமறுவதற்குத் தயாராகவே இருக்கும் என்பது அவற்றுக்கும் தெரியும்!

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

வரும் தேர்தலையொட்டி இன்னும் எத்தனை விதமாக மூத்த குடிமக்கள் உள்ளிட்ட அனைத்து வாக்காளர்களையும் அரசியல் கட்சிகள் முட்டாளாக்கப் போகின்றன என்பதைக் காண சில மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும்.

– ராமச்சந்திரன் முத்துசாமி –
  மூத்த பத்திரிக்கையாளர்

Related articles

Recent articles

spot_img