கடந்த 1996-1997ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சசிகலா, அதிமுக முன்னாள் எம்.பி. டி.டி.வி. தினகரன், பாஸ்கரன், ஜெ.ஜெ. டிவி தரப்பு ஆகியோர் அன்னியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கப் பிரிவு 6 வழக்குகளை பதிவு செய்தது. இந்த வழக்குகளின் விசாரணை, சென்னை எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாடுகளில் இருந்து நவீனக் கருவிகள் வாங்கியது, வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்தது, வெளிநாட்டு நிறுவனங்களில் பணப் பரிவர்த்தனை செய்தது ஆகியவை தொடர்பானவை இந்த வழக்கு ஆகும்.
18 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த 6 வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி, சசிகலா, தினகரன் தரப்பினர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதி தட்சிணாமூர்த்தி விசாரித்தார்.
இந்த இரு வழக்குகளிலும் போதிய முகாந்திரம் இல்லாததால் தினகரனை விடுவிப்பதாக அவர் உத்தரவிட்டார். இதன் மூலம் தினகரன் மீது அமலாக்கப் பிரிவு பதிவு செய்த இரு வழக்குகளும் முடிவுக்கு வந்தன. சசிகலா மீது தொடரப்பட்ட ஒரு வழக்கும் முடிவுக்கு வந்தது.



