திட்டமிட்டபடி உத்தமவில்லன் வெளியாகும்: ரமேஷ் அரவிந்த்

சென்னை: எதிர்ப்புகள் வந்தாலும், திட்டமிட்டபடி உத்தமவில்லன் படம் வெளியாகும் என்று கூறியுள்ளார் ரமேஷ் அரவிந்த். கமலஹாசன் நடித்து, ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள திரைப்படம் உத்தமவில்லன். இதில் இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாகக் காட்சிகள் இருப்பதாகவும், அவற்றை நீக்கிவிட்டு படத்தை வெளியிட வேண்டும் என்றும் இந்து மத அமைப்புகள் புகார் கொடுத்துள்ளனர். இந்தக் குற்றச்சாட்டை மறுத்து அப்படத்தின் இயக்குனர் ரமேஷ் அரவிந்த் விளக்கம் அளித்துள்ளார். அவர் இதுகுறித்துக் கூறியபோது, உத்தமவில்லன் படத்தில் யாருடைய மனதையும், மத உணர்வுகளையும் புண்படுத்தும் காட்சிகள் எதுவும் இல்லை. 8–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு நாடகக் கலைஞருக்கும் தற்கால கலைஞருக்கும் இடையிலான வாழ்க்கை சார்ந்த படமாகவே இது இருக்கும். இந்தப் படத்தைப் பார்த்து தணிக்கைக் குழுவினர் ’யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். திட்டமிட்டபடி படம் வெளியாகும் என்றார்.