கரூரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்காக, அப்பாவிகள் இருவரை செந்தில் பாலாஜியின் குண்டர் படை அடித்து உதைத்தது
ஜோதிமணிக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட செந்தில் பாலாஜி உடன் வந்த திமுக.,வினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸின் ஜோதிமணி வாக்கு கேட்டு கரூர் அருகே வந்த போது, ஈழத் தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆரத்தி தேவையா என்று ஒருவர் கேட்க, அவர் மீது திமுக., குண்டர் படை கொலை வெறித்தாக்குதல் நடத்தியது. இதை அடுத்து, இருவர் கவலைக்கிடமான நிலையில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
கரூர் மக்களவைத் தொகுதியின் தி.மு.க கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஈசநத்தம், ஆண்டிப்பட்டி கோட்டை, லிங்கமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் வாக்குகள் சேகரித்த போது தி.மு.க வினர் சிலர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
அப்போது, அருகே நின்றிருந்த அதிமுக தொண்டர் திருமூர்த்தி என்பவர் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு ஆரத்தி தேவையா என்று கேட்டுள்ளார். இதை அடுத்து அவரைக் கவனித்த திமுக மற்றும் மதிமுக நிர்வாகிகள், அவர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்!
தொடர்ந்து பெரியசாமி என்ற இளைஞர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியைப் பார்த்து, நீங்க இப்போ அதிமுக.,விற்கு வாக்குகள் கேட்கிறீர்களா? திமுக.,விற்கு வாக்குகள் கேட்கிறீர்களா என்று கேட்டுள்ளார். மேலும், செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்று, நன்றி சொல்லக் கூடவரவில்லை என்று அவர் முணுமுணுத்துள்ளார். இதை அடுத்து, திமுக., குண்டர்களால் அவரும் கட்டம் கட்டப் பட்டார். அவர் மீதும் கொலை வெறித் தாக்குதல் நடத்தபட்டது,
இவர்கள் இருவரும் கவலைக்கிடமான நிலையில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டனர்.
இந்தச் சம்பவம் நடந்த போது, அருகில் இருந்த செய்தியாளர்கள், இந்த கொலை வெறித் தாக்குதல்களையும் தங்கள் செல்போன்களில் படம்பிடித்துள்ளனர்.. அதை கவனித்து விட்ட திமுக., ரௌடிகள், நிருபர்களின் செல்போன்களை பறித்து வைத்துக் கொண்டனர். எதற்காக நாங்கள் அடிப்பதை படம் எடுக்கின்றீர்கள் என்று கோபத்துடன் கத்தியவாறே, கேமிராக்களையும் பிடுங்கினர்.
பின் அதில் பதிவாகியிருந்த ஒளிப்பதிவுகளை அழித்தனர். ஒரு நிருபரின் செல்போனை பிடிங்கிக் கொண்டு, அதை ரீசெட் செய்து, அதில் இருந்த தகவல்களை எல்லாம் அழித்துவிட்டு, பிறகு செல்போனை திருப்பிக் கொடுத்துள்ளனர். உடன் இருந்த செய்தியாளர்களுக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதையெல்லாம் கவனித்த தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜியும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும் அந்த அடிதடி காட்சிகளைக் கண்டு ரசித்தனர். செய்தியாளர்கள் தாக்கப் படுவதையும் தடுக்க முற்படவில்லை.
ஆனால், அதை விட அதிர்ச்சிகரமாக, மைக் பிடித்து வாகனத்தில் ஏறி நின்ற ஜோதிமணி, கேள்வி கேட்ட அந்த அப்பாவி நபர், கையில் கத்தி வைத்துக் கொண்டிருந்தார் என்றும், எத்தனை பேர் என்னைத் தாக்க வந்தாலும், அதைக் கண்டு அசரமாட்டேன், பயப்பட மாட்டேன் என்றெல்லாம் பொதுவில் பேசி, கேவலமான அரசியலைச் செய்து கொண்டிருந்தார். .
அதனை படம் பிடித்த திமுக., சார்பு ஊடகங்கள், அவற்றையே செய்தியாக்கி, உடன் அடிவாங்கிய செய்தியாளர்களுக்குக் கூட உதவி செய்யாமல், ஜோதிமணி கூட்டத்தில் கத்தியுடன் ஒருவர் பிடிபட்டதால் பரபரப்பு என்று செய்தியை அவர்கள் நோக்கில் எழுதி, தங்கள் ஊடகங்களுக்கு அனுப்புவதில் குறியாக இருந்தனர்.
இந்தச் சம்பவங்களையெல்லாம் கண்ட அப்பகுதி மக்கள், செந்தில் பாலாஜி மற்றும், ஜோதிமணியுடன் வந்தவர்களை சபித்தனர்.