திமுக., முன்னாள் எம்.பி., வசந்தி ஸ்டான்லி மரணம்; ஸ்டாலின் அஞ்சலி!

சற்றுமுன் சென்னை தமிழகம் நெல்லை

vasanthistanley - 2026

திமுக.,வின் முன்னாள் எம்.பி., வசந்தி ஸ்டான்லி நேற்று இரவு காலமானார். அவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியாா் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பிறந்த வசந்தி ஸ்டான்லி திமுக., சார்பில் கடந்த 2008-2014ல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். உடல் நலக் கோளாறை அடுத்து, இவருக்கு கடந்த 14ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின் உடலில் தொற்று ஏற்பட்டதால், மீண்டும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல், நேற்று இரவு 11 மணி அளவில் அவர் காலமானதாக மருத்துவமனை தெரிவித்தது.

நேற்று காலமான அவரது உடல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அவரது உடல் பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை வசந்தி ஸ்டான்லியின் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள வசந்தி ஸ்டான்லி உடலுக்கு தனது மனைவியுடன் சென்று ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், வசந்தி ஸ்டான்லியின் மறைவு குறித்து அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவரது மறைவு திமுக.,வுக்கு பேரிழப்பு. கவிஞர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை பெற்றவர் அவர் என்று கூறினார் ஸ்டாலின்.

வசந்தி ஸ்டான்லியின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. பல சவால்களை தனித்து நின்று சமாளித்தவர். நல்ல பேச்சாளர். எதையும் எதிர்த்து போராடக்கூடியவர். தோழி. அவரது மறைவு மகளிர் அணியின் சகோதரிகளுக்கும் எனக்கும் பெரிய இழப்பு… என்று கூறியிருக்கிறார் கனிமொழி.


அதிமுக.,வின் மாநிலங்களவை உறுப்பினர் வா.மைத்ரேயன், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில்… முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருமதி வசந்தி ஸ்டான்லி அவர்கள் நேற்று இரவு காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. 2008 – 14 ல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அவர் என் மீது பாசம் கொண்டவர். அவை நடவடிக்கைகள் மற்றும் விவாதங்கள் குறித்து பலமுறை ஆலோசனை கேட்பார். கட்சிக்கு அப்பாற்பட்டு அனைவரோடும் நன்கு பழகக் கூடியவர். பாசத்தோடு அண்ணா, அண்ணா என்று அழைப்பார். கடந்த ஏப்ரல் 18 தேர்தல் நாளன்று மதியம் என்னோடு பேசினார். சமீபத்தில் தனக்கு நடைபெற்ற அறுவைசிகிச்சை பற்றி குறிப்பிட்டு சில விளக்கங்களை கேட்டறிந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவர் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும் மனவேதனையையும் தருகிறது. அவரது ஆன்மா இறைவன்திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்… என்று குறிப்பிட்டுள்ளார்.

1 thought on “திமுக., முன்னாள் எம்.பி., வசந்தி ஸ்டான்லி மரணம்; ஸ்டாலின் அஞ்சலி!”

  1. இவர் தி.மு.க.வில் இருந்தாலும், ஒரு நல்ல பெண்மணி, மனித நேயம் மிக்கவர் என்று அனைவராலும் பாராட்டப்பெற்றவர், அவரது இழப்பு அவரது குடும்பத்துக்கு ஈடு செய்ய முடியாதது, அவரது ஆன்மா இறைவனின் திருவடிகளில் அமைதி பெற கடவுளை praarthikkiren.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.