சென்னை சேமிப்பு கிடங்கில் ரூ.1.65 கோடி செம்மரக்கட்டைகள் கொள்ளை

சென்னை மாதவரத்தில் உள்ள மத்திய அரசு சேமிப்பு கிடங்கில் கன்டெய்னரில் பாதுகாத்த ரூ.1.65 கோடி செம்மரக் கட்டைகள் கொள்ளை இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சென்னை மாதவரம் மேம்பாலம் அருகே மத்திய அரசின் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு கடந்த 2015-ம் ஆண்டு வெளிநாட்டுகளுக்கு கடத்தப்படவிருந்த ரூ.1.65 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகளுடன் பறிமுதல் செய்த கன்டெய்னர் லாரிக்கு சீல் வைத்து சுங்க இலாகா அதிகாரிகள் பாதுகாத்து வந்தனர்.
இந்நிலையில், இந்த கிடங்கில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்த கன்டெய்னர் லாரியின் சீல்லை இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ம கும்பல் உடைத்து, அதில் வைத்திருந்த பல லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து மாதவரம் போலீசில் சேமிப்பு கிடங்கின் மேலாளர் புகார் அளித்தார்.
இப்புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து தீவீர விசாரணை நடத்தி வருகின்றார் . இதனையடுத்து அந்த கிடங்கில் கன்டெய்னர் லாரியில் பாதுகாத்து வைத்திருந்த செம்மரக் கட்டைகளை கணக்கிடும் பணி நடைபெறுகிறது. அப்பணிகள் முடிந்ததும் எவ்வளவு கட்டைகள் கொள்ளை போயின என்பதும், இக்கொள்ளையின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்த விபரங்கள் தெரியவரும். இந்த கிடங்கில் கன்டெய்னர் லாரியில் இருக்கும் செம்மரக் கட்டைகளை 24 மணி நேரமும் பாதுகாக்கும் பணியில் காவலர்கள் இருந்துள்ளனர். இத்தகைய பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி செம்மரக் கட்டைகள் கொள்ளை போனதில் காவலாளிகள், கிடங்கு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் தொடர்பு இருக்கலாம் என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.



