டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்த சபாநாயகா் விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

சற்றுமுன் சென்னை தமிழகம்

டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்த சபாநாயகா் விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
ttv dinakaran - 2026
டிடிவி தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவருக்கு சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. சபாநாயகர் தனபால் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.
கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி டிடிவி. தினகரன் ஆதரவாளர்களான கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகிய எம்எல்ஏக்கள் மீது, அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்தார்.

இந்த புகார் மீது 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.இதன் அடுத்த கட்டமாக 3 எம்எல்ஏ-க்கள் மீதான நடவடிக்கைக்கு தடைகோரி, அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தின சபாபதி மற்றும் கலைச்செல்வன் ஆகியோர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சபாநாயகரின் நோட்டீசுக்கு நீதிபதிகள் தடை விதித்தனர்.மேலும், சபாநாயகர் தனபால் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.
“அரசுக்கும், சபாநாயகருக்கும் எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தவர்கள் நாங்கள். ஆட்சிக்கோ, கட்சிக்கோ எதிராக நாங்கள் செயல்படவில்லை. அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்று பாடுபட்ட எங்களுக்கான பரிசே சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ்” என்று ரத்தின சபாபதி தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்ற டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் ரத்தின சபாபதி மற்றும் கலைச்செல்வன் தர்மம் வென்றுள்ளதாக கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.