திருப்பூர் மாவட்டத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் பிடிபட்ட ரூ.570 கோடி பணத்தை எண்ணுவதற்காக அவை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தற்போது கூறப்படுகிறது
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர்- செங்கபள்ளி இடையே 3 கண்டெய்னர் லாரிகளில் 196 பண்டல்கள் கொண்ட ரூ.570 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு முறையான ஆவணங்கள் இல்லை. இந்த நிலையில் 18 மணிநேரம் கழித்து பாரத ஸ்டேட் வங்கி தங்களுக்கு சொந்தமான பணம் என்றும், கோவையில் உள்ள வங்கி தலைமை அலுவலகத்தில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த பணத்தை விடுவிக்க தேர்தல் ஆணையம் இன்னும் அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில் ரூ.570 கோடி விவகாரத்தில் தொடர்ந்து மர்மங்கள் நிலவி வருகிறது. பொதுவாகவே ஒரு வங்கியில் இவ்வளவு பணம் வைத்திருக்க சாத்தியம் இல்லை.
அதேநேரம் அதிகளவில் பணத்தை எடுத்து செல்லும்போது எந்த வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறது. அதை ஓட்டி செல்லும் டிரைவரின் புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை ஆகியவை வைத்திருக்க வேண்டும். மேலும் அந்த வாகனத்தில் சீருடை அணிந்து போலீசாரும் பாதுகாப்புக்காக செல்ல வேண்டும். பணம் எடுத்து செல்லும் வாகனங்கள் பூட்டி சீல் வைத்திருக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறைகள் ஏதும் பின்பற்றப்படவில்லை.
அதோடு இல்லாமல் பணத்தை எங்கிருந்து எங்கு எடுத்து செல்கிறோம் என்பதற்கும் முறையான ஆவணங்கள் இல்லை. அவர்கள் காட்டிய ஆவணத்தில் தேதி தவறாகஉள்ளது. மேலும் பணத்துடன் வந்தவர்களிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குபின் முரணாக தெரிவித்தனர். பொதுவாக வங்கியில் இருந்து பணம் அனுப்பினால் அனுப்பப்படும் வாகனத்தில் ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருக்கும்.
வங்கி அலுவலகத்தில் இருந்து கொண்டே அந்த வாகனங்களை கண்காணிக்க முடியும். நடுவழியில் அந்த வாகனம் நின்றால் வங்கியில் இருந்தே அதை பார்த்து எதற்காக நிறுத்தப்பட்டது என்று கேள்வி எழுப்பலாம். ஆனால் 3 கண்டெய்னர் லாரிகளும் பிடிப்பட்டு கலெக்டர் அலுவலகத்தில நிறுத்தப்பட்ட 18 மணிநேரம் கழித்தே வங்கி நிர்வாகத்தினர் சொந்தம் கொண்டாடியுள்ளனர்.ரூ.570 கோடி என்னும் இவ்வளவு பெரிய பணத்தை ஐதராபாத்தில் உள்ள ஸ்டேட் வங்கியில் இருந்தோ அல்லது பெங்களூரில் உள்ள ஸ்டேட் வங்கியில் இருந்தோ வாங்கியிருக்கலாம்.
மேலும் பணம் ஏற்றி சென்ற கண்டெய்னர்களுக்கு பாதுகாப்புக்காக தமிழ்நாட்டை போலீசை பயன்படுத்தாமல் ஆந்திர போலீசாரை வரவழைத்தது ஏன் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.ரூ.570 கோடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முழுமையான விசாரணை நடத்திய பிறகே பணத்தை விடுவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே 3 கண்டெய்னர் லாரிகளில் உள்ள பணத்தை எண்ணுவதற்காக அவை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வருமான வரித்துறையினர் முன்னிலையில் கண்டெய்னர் லாரிகளின் பூட்டு திறக்கப்பட்டு அதில் இருக்கும் பணம் எண்ணப்படுகிறது. பறிமுதல் செய்த ரூ.570 கோடி விவகாரத்தில் தொடர்ந்து மர்மம் நிலவி வருகிறது.



