திமுக தலைவர் கருணாநிதி 2 ஜி ஊழலில் பெட்டி பெட்டியாக பணம் பெற்று அறிவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் 2 ஜி ஊழலிருந்து கருணாநிதியை காப்பாற்றவே சாதிக்பாட்சா கொலை செய்யப்பட்டிருப்பது, தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் வைகோ தெரிவித்துள்ளதாவது :-
சாகித் பால்வாவிடமிருந்து வந்த பெரும்பாலான பணம் ஸ்டாலினிடம்தான் கொடுக்கப்பட்டது. மேலும் சாதிக் பாட்ஷாவுக்கு கிடைத்த பணத்தின் பெரும் பகுதி ஸ்டாலினுக்கு தரப்பட்டது. ஸ்டாலின் குறித்து சிபிஐக்கு சாதிக் பாட்ஷா அறிக்கை கொடுத்துள்ளார்.
நீரா ராடியா- கனிமொழி தொலைபேசி உரையாடலில் சாதிக் பாட்ஷாவின் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக திருச்சியை சேர்ந்த பிரபாகரன் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மையே. 2011ல் அரியலூரில் வைத்து இதே பிரபாகரன் என்னை சந்தித்து இந்த தகவல்களை கூறினார்.
கொலையை, தற்கொலை என்று மறைத்து நாடகம் நடந்து வருகிறது. காவல்துறை உயர் அதிகாரி ஜாபர்சேட்டுக்கும் தொடர்பு இருக்கிறது.திருச்சியில் பிரபாகரன் அளித்த தகவலின் அடிப்படையில் சாதிக்பாட்சா கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரபாகரன் ஏற்கனவே இந்த தகவலை சிபிஐயிடம் தெரிவித்ததாகவும், ஆனால் அதனை கேட்காமல், அவரை சிபிஜ அதிகாரி அருணாச்சலம் மிரட்டியதாகவும் வைகோ குற்றம் சாட்டினார். எனவே சாதிக் பாட்சா மரணம் குறித்தும் சிபிஐ விசாரிக்க வேண்டும். அப்போதுதான் உண்மை வெளியே வரும் என்றார்.திமுக தலைவர் கருணாநிதியை காப்பாற்றவே சாதிக்பாட்சா கொல்லப்பட்டதாகவும் அவர் புகார் கூறினார்.
இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும் வைகோ செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.



