கோடை விடுமுறை முடிவடைந்து பெரும்பாலான இன்று பள்ளிகள் திறக்கப் பட்டன. இதை அடுத்து மாணவர்கள் உற்சாகமாக பள்ளிகளுக்குச் செல்ல காலை முதலே குவிந்தனர்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்படலாம் என்று சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தகவல்கள் பரவிக் கொண்டிருந்தன. இதனால் மாணவர்களும் பெற்றோரும் குழப்பத்தில் தவித்தனர்.
அவர்களது குழப்பத்துக்கு தெளிவு கிடைக்கும் வகையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ‘மாணவர்கள் கல்வி நலனை கருத்தில் கொண்டு, திட்டமிட்டப்படி ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்’ என்று அறிவித்தார்.
ஏற்கெனவே தேர்தலை முன்னிட்டு முன்னதாகவே தேர்வுகள் வைக்கப்பட்டு விடுமுறை விடப் பட்டது. இதனால் கோடை விடுமுறை நாட்கள் அதிகரித்தது.
இந்நிலையில் சுமார் 50 நாட்கள் கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், பெரும்பாலான தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இன்று வகுப்புகள் தொடங்கியவுடனேயே விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள் வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்படும் வேளையில், ஒரு சில தனியார் பள்ளிகள் வரும் 7-ஆம் தேதி வெள்ளிக்கிழமையிலும், சில தனியார் பள்ளிகள் 10-ஆம் தேதி திங்கள் கிழமையிலும் திறக்கப்படும் என்று அந்தந்த பள்ளி நிர்வாகம் சார்பில் பெற்றோர்களுக்கு கைபேசியில் குறுந்தகவல் அனுப்பியுள்ளன.
இன்னும் சீருடைகள் வழங்கபப்டுவதற்கு தயாராகாத நிலையில் கடந்த வருட சீருடைகளையே அணிந்து வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




