சென்னையில் பஸ் டே கொண்டாடிய விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேரை சஸ்பெண்ட் செய்து கல்லூரி முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோடை விடுமுறை முடிந்து கலை கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் சென்னை செனாய் நகர் புல்லா அவென்யூவில் 40எ என்ற மாநகர பேருந்தை பயச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிறைபிடித்தனர்.
பேருந்தின் முன்பக்கம் பேனர் கட்டிய மாணவர்கள் பேருந்தில் ஏறிக்கொண்டதோடு மட்டுமின்றி பேருந்தின் மேற்கூரையில் ஏறிக்கொண்டு அட்டகாசத்தில் ஈடுபட்டனர். அப்போது பேருந்தின் முன்னே பைக்கில் கூச்சல் எழுப்பிக்கொண்டே சென்ற மாணவர்கள் திடீரென பிரேக் போட பேருந்து ஓட்டுனரும் பிரேக் போட்டார். இதனால் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து ரகளை செய்த 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தடார் என்று கீழே விழுந்தனர்.
அதேபோல் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சென்னை மெரினா சாலையில் 60 எண் கொண்ட பேருந்தில் அட்டகாசம் செய்தபோது 10 க்கும் மேற்பட்டவர்களை அண்ணா சதுக்கம் போலீசார் மடக்கி பிடித்தனர். அதேபோல் அயனவரத்தில் பேருந்து நாள் கொண்டாட பேனருடன் நின்றிருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



