நேர்மையற்ற முறையில் பணிநியமனம் பெறுவோரிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது என்று கருத்து தெரிவித்தது உயர் நீதிமன்ற மதுரை கிளை.
நேர்மையற்ற முறையில் பணி நியமனம் பெறும் ஊழியர்களிடம் பொதுமக்கள் நேர்மையை எதிர்பார்க்க முடியாது என கருத்து தெரிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை! மேலும், கடைநிலைப் பணியாளர்களை எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்களை அரசு பிறப்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
தேனியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான உதயகுமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தனக்குப் பின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்த சேகர் என்பவருக்கு சிபாரிசு அடிப்படையில் காமயகவுண்டன்பட்டி பஞ்சாயத்து யூனியனில் இரவுக் காவலர் பணி கிடைத்துள்ளது. எனவே சேகரின் பணி நியமனத்தை ரத்து செய்து எனக்கு அந்தப் பணியை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணி, மிகத் தாமதமாக இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது, எனவே சேகரின் பணி நியமனத்தை ரத்து செய்ய முடியாது! என்று கூறினார்.
நேர்மையற்ற முறையில் நியமனம் பெறும் அரசு ஊழியர்களிடம் நேர்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்!? திறமையற்ற நிர்வாகம் என்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு கரு புள்ளியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை என்று கூறிய நீதிபதி, கடைநிலை பணியாளர்களை எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதலை தலைமைச் செயலர் பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இந்த வழக்கை ஜூலை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.




