
இந்தியப் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு போன்ற மிக முக்கிய தலைவர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக, போயிங் B747-400 ஜம்போ ரக விமானங்கள்தான் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
20 வருடங்களாக இந்தியத் தலைவர்கள் இந்த விமானங்களையே பயன்படுத்தி வருகின்றனர். நன்கு பயிற்சி பெற்ற விமானிகள் மட்டுமே இந்த விமானங்களை இயக்க முடியும். இதன் பராமரிப்புகளை ஏர் இந்தியா நிறுவனம் கவனித்து வருகிறது. பிரதமர் போன்ற தலைவர்களின் பயணங்கள் முடிந்த பிறகு, அந்த விமானங்கள் வணிக ரீதியாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த 747 ரக விமானங்களில், அமெரிக்கா போன்ற நீண்ட தூர நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்றால் போதுமான எரிபொருள் நிரப்ப முடியாது, அதனால் வளைகுடா நாடுகளில் நிறுத்தி எரிபொருள் நிரப்பி விட்டு மீண்டும் அங்கிருந்து பயணத்தைத் தொடரவேண்டும் அதனால் பிரதமர், குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு கேள்விக்குறியான ஒன்றாகயுள்ளது. மேலும் நேரமும் விரயம் ஆகிறது.
இவற்றைத் தடுக்க அதிநவீன வசதிகளுடன் கூடிய போயிங் 777 ரக விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்து, அதற்காக 2018-ம் ஆண்டு இரண்டு விமானங்கள் ஆர்டர் கொடுக்கப்பட்டன. அந்த விமானங்கள் தற்போது அமெரிக்காவின் டல்லாஸில் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் ஏர் ஃபோர்ஸ் ஒன், அதிநவீன விமானங்களும் இங்குதான் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதே இடத்தில் தற்போது இந்தியப் பிரதமரின் புதிய விமான கட்டமைப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றது.

போயிங் 777 ரக விமானங்களில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்றால் எரிபொருள் நிரப்புவதற்காக வேறு இடங்களில் நிறுத்த வேண்டிய அவசியமில்லை. அந்த அளவுக்கு இதன் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இதில், ஆலோசனை கூடம், தகவல் தொடர்புகளுக்காகப் பெரிய இடம், அதிநவீன பாதுகாப்பு அறைகள், கண்காணிப்பு ரேடார்கள், ஏவுகணை தாக்குதலைக் கண்டறிந்து அதை முறியடிக்கும் வசதி போன்ற பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் ஒரு நட்சத்திர விடுதி அளவுக்கு விமானம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இந்த புதிய விமானத்தின் பராமரிப்பு பணிகளையும் ஏர் இந்தியா நிறுவனம் தான் மேற்கொள்ளவுள்ளது. தற்போதைக்கு இந்த விமானத்தைப் பிரதமர், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் போன்றவர்கள் மட்டுமே பயன்படுத்தவுள்ளனர்.
மேலும், அவர்கள் பயன்படுத்திய பிறகு இது வணிக ரீதியிலான சேவைக்கு பயன்படுத்தப்படாது எனக் கூறப்பட்டுள்ளது. இந்த விமானங்களின் மதிப்பு சுமார் 190 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் பல லட்சம் கோடி ரூபாய் ) என மதிப்பிடப்பட்டுள்ளது. பிரதமரின் அதிநவீன விமானங்கள் வரும் 2020- ம் ஆண்டுக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.