
மும்பை:
ரிலையன்ஸ் ஜியோவின் அட்டகாச அதிரடி ஐடியாவால், ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஐடியாவுக்கு ரூ.404 கோடி கடந்த நிதியாண்டில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது!
தொலைத்தொடர்பு நிறுவனமான ஐடியா நிறுவனம் 2016- 2017 ஆம் நிதியாண்டில் ரூ.404 கோடி நஷ்டமடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. ஜியோ சேவை தொடங்கப்பட்டது முதல் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இதில் ஐடியாவும் ஒன்று.
இந்நிலையில், 2016- 2017 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை ஐடியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், இதுவரை இல்லாத அளவுக்கு வருமானம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதே நேரம் கடந்த 2015-16ம் நிதியாண்டில், இந்நிறுவனம் ரூ. 2,714 கோடி லாபம் ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
நிதியாண்டு 2017ன் நான்காவது காலாண்டில் மொத்த நஷ்டம் ரூ.325.6 கோடி என்றும், வருமானம் 13.7 சதவீதம் குறைந்துள்ளது என்றும் ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது.



