
விநாயக சதுர்த்தி: ஆன்மீக கேள்வி பதில்
கேள்வி: ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தில் அம்பாளின் புன்னகையில் இருந்து கணபதி தோன்றியதாக உள்ளது. இதன் பொருள் என்ன?
பதில்: கணபதியின் தோற்றத்திற்கு தொடர்பான பல கதைகள் புராணங்களில் உள்ளன. இவற்றை உபாசனை ரகசியங்கள் என்று கூறுவர். இவை சாதாரண கதைகளோ வரலாறுகளோ அல்ல. உபாசனையின் முக்கியத்துவத்தை குறிப்பிடுவதற்கு ஒவ்வொரு கதையும் தோன்றியது. புராண கதைகள், மந்திர குறியீடுகள், யக்ஞ சங்கேதங்கள், யோகக் குறியீடுகள் ஜோதிடக் குறியீடுகள் அனைத்தும் இவற்றுள் உள்ளன.
ஸ்ரீவித்யா உபாசனையில் கணபதி பற்றி கூறுகையில் அம்பாளின் சிரிப்பில் இருந்து கணபதி தோன்றிய அம்சம் விவரிக்கப்பட்டுள்ளது.
காமேஸ்வர முகாலோக கல்பிதஶ்ரீ கணேஸ்வரா மகாகணேச நிர்பின்ன விக்ன யந்த்ர பிரகர்ஷிதா
-என்று லலிதா சகஸ்ரநாமத்தில் இரு நாமங்கள் உள்ளன.
லலிதா பரமேஸ்வரி பண்டாசுரனோடு போர் புரிகையில் விசுக்கிரன் என்ற பண்டாசுரனின் அமைச்சனும் சகோதரனும் ஜெய விக்ன சிலா யந்த்ரம் என்ற விக்ன யந்திரத்தை தன் க்ஷுத்ர பிரயோகத்தால் உருவாக்கி சக்தி சேனைகளின் மீது ஏவினான். அதனை உடைத்து எறிவதற்கு அம்மனின் சிரிப்பில் இருந்து கணபதி அவதரித்தார் என்று பிரம்மாண்ட புராணம் கூறுகிறது.
அந்தச் சிரிப்பு எப்படி பட்டது? அங்கிருந்த சிவகாமேஸ்வரனைப் பார்த்து லலிதா பரமேஸ்வரி புன்னகை புரிந்தாள். அதாவது கணவரைப் பார்த்ததும் அம்மனுக்கு ப்ரீத்தி பாவனை ஏற்பட்டது. சிவனின் பதில் புன்னகையால் அது மேலும் அபிவிருத்தியானது. அம்பாளின் புன்னகையில் இரு பாவனைகள் உள்ளன.
சுவாமியைப் பார்த்ததும் ஏற்பட்ட அன்பு. சுவாமியின் பதில் புன்னகையைப் பார்த்ததும் ஏற்பட்ட பேரன்பு. பரஸ்பர பிரேமை பாவனை புன்னகை வடிவில் வெளிப்பட்டது. அந்த புன்னகையில் சிவன் சக்தி என்ற இரு தத்துவங்களும் இணைந்து உள்ளன. அந்த புன்னகையில் இருந்து கணபதி அவதரித்தார். அதனால் சிவ, சக்திகளின் ஏக சொரூபம் கணபதி.
புன்னகை எப்போதும் ஆனந்தத்திற்கு குறியீடு. அதனால் கணபதி ஆனந்த மூர்த்தி. நவரசங்களில் ஹாஸ்ய ரசத்திற்கு அதிபதி கணேசர். ஏனென்றால் துயரம் துன்பம் என்பவையே தடைகள். இந்த விக்னங்களை விலக்கி மகிழ்ச்சி அளிப்பதே கணபதியின் வடிவத்தில் உள்ள பொருள்.
கணபதி என்றாலே ஆனந்த சொரூபம். கணபதி சிவனின் கோபத்தைக் கூட விலக்கி விடக் கூடியவர். பராசக்தியான சித் சக்தியின் ஆனந்த தத்துவமே கணபதியாக வெளிப்பட்டது என்ற குறியீட்டு அர்த்தமே இந்த கதையின் தாத்பரியம்.
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்