
திருப்புகழ் கதைகள் பகுதி 60
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
அனிச்சம் கார்முகம் (திருச்செந்தூர்) திருப்புகழ்
திருப்புகழில் ராமாயணம் அயோத்யா காண்டம்
கம்பரின் கைகேயி, ராமனிடம், ‘‘பரதன் ஆள வேண்டும். நீ காட்டுக்குப் போக வேண்டும். பதினான்கு ஆண்டுகள் ஆனதும் திரும்பி வர வேண்டும் – என அரசர் கூறினார்’’ என்றாள். அதற்கு ராமர், ‘‘அம்மா! இதை அரசர் என்ற முறையில் அப்பா சொல்ல வேண்டுமா? தாங்கள் சொன்னாலே போதுமே! நான் மறுத்தா பேசப் போகிறேன்?’’ என்று பதில் சொன்னார். இதை அருணகிரிநாதர் ‘பளிச்’சென்று சொல்கிறார். ‘அரசர் சொன்னார்’ என்று அருணகிரி நாதரின் கைகேயி சொல்லவில்லை. ‘‘ராமா! நான்தான் சொல்கிறேன். நீ காட்டுக்குப் போ!’’ என்கிறாள்.
எனதுமொழி வழுவாமல் நீயேகு கான்மீதி
லெனவிரகு குலையாத மாதாவு நேரோத
இசையுமொழி தவறாம லேயேகி மாமாது …… மிளையோனும்
இனிமையொடு வருமாய மாரீச மானாவி
குலையவரு கரதூஷ ணாவீரர் போர்மாள
இறுகிநெடு மரமேழு தூளாக வேவாலி …… யுயிர்சீறி
அநுமனொடு கவிகூட வாராக நீராழி
யடைசெய்தணை தனிலேறி மாபாவி யூர்மேவி
அவுணர்கிளை கெடநூறி யாலால மாகோப …… நிருதேசன்
அருணமணி திகழ்பார வீராக ராமோலி
யொருபதுமொர் கணைவீழ வேமோது போராளி
அடல்மருக குமரேச மேலாய வானோர்கள் …… பெருமாளே.

(குனகியரு) திருப்புகழ் 1153, பொதுப்பாடல் என்னுடைய பேச்சு தவறாமல் நீ காட்டுக்குப் போவாயாக என்று வஞ்சகம் குறைவுபடாத மாதாவாகிய கைகேயியும் எடுத்துச் சொல்ல, சொன்ன சொல் தவறாமல், லக்ஷ்மி போன்ற சீதையும் தம்பி இலக்குமணனும் விருப்பமுடன் கூட வர காட்டுக்குப் போன இராமனைப் பற்ரிக் குறிப்பிட்ட அருணகிரியார், மீதமுள்ள இராமாயணக்கதையும் பின்வருமாறு கூறுகிறார்.
காட்டிடை வந்த மாய மானாகிய மாரீசன் உயிர் துறக்க, போருக்கு வந்த கர, துஷணர்கள் முதலிய வீரர்கள் கொல்லப்பட, உறுதியாக இருந்த மராமரங்கள் ஏழும் ராமபாணத்தால் துளைபட, வாலியின் உயிர் மடிய, அனுமனோடு குரங்குகளும் கூடிவர கடலாகிய நீரை அணையிட்டு அடைத்து, அந்த அணை மீதில் ஏறிச் சென்று பெரிய பாதகனாகிய இராவணனுடைய ஊராகிய இலங்கைக்குப் போய் அரக்கர்களுடைய கூட்டம் எல்லாம் மாளப் பொடி செய்து, ஆலகால விஷம் போல பெரிய கோபத்துடன் வந்த அரக்கர் தலைவனான இராவணனுடைய சிவந்த இரத்தினங்கள் விளங்குவதும், கனத்ததுமான மகுடங்கள் ஒரு பத்தும் ஒரே அம்பால் அற்று விழும்படி தாக்கிய போர் வீரனான திருமாலின் வலிமை நிரம்பிய மருகனே – என அடுத்து வரும் அடிகளிலும் பாடிவிடுகிறார்.
அருணகிரிநாதரின் திருப்புகழ் தரும் ராமாயணத்தில் ‘அயோத்யா காண்டம்’ இங்கு முடிந்து, இனி ஆரண்ய காண்டம் தொடங்குகிறது.
அங்கே, முக்கியமான கட்டத்துக்கு தண்டகாரண்யம் என்னும் தண்டக வனத்துக்கு நம்மை அழைத்துப் போகிறார். அதனை நாளைக் காணலாம்.