திருப்புகழ் கதைகள் பகுதி 74
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இருகுழை எறிந்த – திருச்செந்தூர்
பகீரதப் பிரயத்தனம்
கபில முனிவர் சாங்கிய யோகம் என்ற யோக நூலைத் தந்தவர். திருமாலின் அவதாரம் எனக் கருதப்படுபவர். அம்ஸுமானின் வேண்டுதலைக் கேட்டு கபில முனிவர் ”எனக்கு எவரிடமும் கோபமில்லை, உன் தாத்தாவின் யாகக்குதிரையை கொண்டுசெல்வாயாக.
கங்கை நீர் பட்டாலன்றி உன் சிறிய தந்தைகள் முக்தியடய மாட்டார்கள்” என்றார். கபிலர் இவ்வாறு கூறியதும் அம்ஸுமான் அவரை வலம் வந்து வணங்கி விட்டு குதிரையைப் பிடித்துச் சென்றான். சகர மன்னர் அந்த குதிரையை வைத்து யாகத்தை செய்து முடித்தார்.
அதன் பின் பேரன் அம்ஸுமானை அரசனாக்கி விட்டு கானகம் சென்று தவம் செய்து இறைவனடி சேர்ந்தார். அம்ஸுமான் சில காலம் ஆட்சி புரிந்தார். அதன் பின் தன் மகன் திலீபனுக்கு முடிசூட்டிவிட்டு காடு சென்று கங்கையை வரவழைக்க தவமிருந்தான். தன் லட்சியம் நிறைவேறாமல் காலம் கடந்த பின் இறந்து போனான்.
அம்ஸுமான் மகன் திலீபன் தன் மகன் பகீரதனை அரசனாக்கி விட்டு தந்தையை போலவே கங்கையை கொண்டுவரும் முயற்சியில் இறங்கினான். கடுந்தவம் புரிந்து கொண்டிருந்த போது அவன் ஆயுளும் முடிந்துவிட்டது. பகீரதன் வயோதிகம் வரும் முன் நேராக காடு சென்று மிகக்கடும் தவம் செய்தான். அவன் தவத்தால் மகிழ்ந்து கங்காதேவி பிரத்யட்சமானாள். ”உனக்கு வேண்டிய வரத்தை கேள்” என்றாள். “தேவி நீங்கள் பூலோகத்திற்கு வந்து என் மூதாதயர்களை கடைத்தேற்ற வேண்டும்” என்றார்.
அதற்கு தேவி கூறினாள். – “அப்பனே நான் வருவதாக இருந்தால் நான் வானகத்திலிருந்து பூமியை நோக்கி பாய்ந்து வரும்போது என்னை எவராலும் தாங்க இயலாது. மேலும் ஒரு விஷயம். நான் பூமியில் பெருக்கெடுத்து ஓடும்போது பாவிகளும் தூராத்மாக்களும் என் நீரில் மூழ்கி தம் பாவங்களை கழுவிக்கொள்வார்கள். அந்த பாவங்களை நான் எங்கே போய் தொலைப்பேன் “என்றாள்.
பகீரத மன்னன் அதற்கு பதிலாக ”தேவி வானகத்திலிருந்து நீங்கள் பாய்ந்து வரும்போது உங்களை தாங்கிக்கொள்ள எல்லாம் வல்ல சிவபெருமான் இருக்கிறார். நீங்கள் கவலைப்பட வேண்டாம். கங்கை நீர் அசுத்தமாகாது. ஏனெனில் இக பர லோகங்களில் சுக போகங்களை துறந்த பற்றற்ற தர்மாத்மாக்களும், பிரம்மத்தை அறிந்த ஞானிகளும் பரோபகாரம் செய்யும் நல்லவர்களும், பகவானின் தூய பக்தர்களும் கங்கை நதியில் நீராடினால் அந்த பாவப்பட்ட நீர் தூய்மை ஆகிவிடும்.
ஏனெனில் இவர்கள் இதயத்தில் எங்கும் நிறைந்த நாராயணன் குடிகொண்டுள்ளார்” என்று பகீரத ராஜா கூற கங்கை பூமிக்கு வர சம்மதித்தாள். பின்னர் பகீரதன் சிவபெருமானை நினைத்து தவமிருந்தார். ஆஷுதோஷ் என்று புகழ் பெற்ற சிவபெருமான் பிரத்யட்சமானார். பகீரதன் தாங்கள் என் மூதாதையர் உய்வதற்காக கங்காதேவியை தாங்கிக்கொள்ள வேண்டும் என்றார். சிவபெருமான் அப்படியே ஆகட்டும் என்றார்.
கங்கை நீர் அசுர வேகம் கொண்டு வானகத்திலிருந்து பாய்ந்து வந்து சிவபெருமானின் சிரசில் விழுந்தது. கங்கையின் கர்வத்தை போக்க சிவபெருமான் கங்கை நீரை அடக்க தன் ஜடா முடியை எடுத்து இறுக்கமாக கட்டிக்கொண்டார். ஜடாமுடியில் கங்கை வெளியேற முடியாமல் உள்ளே சுற்றி திரிந்தது. பகீரத மன்னன் சிவபெருமானை துதி செய்தான். சிறு தாரையாக வெளியில் விட கேட்டுக்கொண்டான்.சிவபெருமான் அவ்வாறே செய்தார்.
பகீரத மன்னன் ஒரு தேரில் ஏறிக்கொண்டான். மன்னர் தேரில் வழி காட்ட கங்கை நீர் பின்னால் பிரவாகமெடுத்து வந்தது. நாடு, நகரம், காடு, கிராமம்,அனைத்தையும் புனிதமாக்கிக்கொண்டு வந்தது.
வழியில் ஜஹ்னு என்ற பேரரசன் யாகம் செய்து கொண்டு இருந்தான். கங்கை அவ்வழியாக வந்தபோது யாகசாலைகள், யாகமும், வழிபாடு தலத்தையும் கங்கை நீரால் மூழ்கடித்து அழித்தது. அதனால் கோபமடைந்த ஜஹ்னு தன் யோகசக்தியால் கங்கை நீரை ஒரு சொட்டாக்கி குடித்து விட்டான். இதை கண்ட பகீரத மன்னன் அவரை சமாதானப்படுத்தி விஷயத்தை கூறினார். அரசன் ஜஹ்னு சமாதானமடைந்து கங்கை நீரை காது வழியாக வெளியில் விட்டான். நாம் ஆசமனீயம் செய்யும்போது இதனால்தால் மூன்று முறை நீரைக் குடித்து மந்த்ர பூர்வமாக காதின் நுனியைத் தொடுகிறோம். இதன் காரணமாக கங்கைக்கு ஜாநவி என்ற பெயரும் உண்டு.
பகீரதன் தேரில் பின்னால் சென்ற கங்கை நீர் பகீரதன் மூதாதயர் சாம்பலாக கிடந்த இடத்தில் நீரோட்டமாக பாய்ந்து சென்று அந்த சாம்பலை நீரில் மூழ்கடித்தது. உடனே சகர புத்திரர்கள் தேவ உரு பெற்று உயிர்த்தெழுந்து தேவலோகம் (வானுலகம்) சென்றடைந்தனர். பகீரதன் அயோத்தியா திரும்பி நல்லாட்சி புரிந்தான்.
இராமாயணத்தில் இராமனுக்கு இந்தக் கதையை விசுவமித்திரர் சொல்லுவார். ஸ்ராத்த காலத்தில் இந்த சர்கத்தை, பிராமணர்கள் போஜனம் செய்யும்போது படிப்பது ஒரு காலத்தில் வழக்கமாக இருந்தது.