ஆலயங்கள் குறித்த ஜெயமோகனின் சமீபத்திய கட்டுரை… வழக்கம்போல எல்லா திசைகளிலும் சுழன்று கத்திவீச முயற்சித்திருக்கிறார். கட்டுரையினைப் படிக்க… https://www.jeyamohan.in/148617/
சில உண்மையான, முக்கியமான கோயில் சார்ந்த பிரசினைகள், பக்தர்களையும் கோயிலில் வழிபடும் எளிய மக்களையும் வசைபாடும் மேட்டிமைவாதம், கூடவே அவரது சமீபத்திய அரசியல் மற்றும் நேருவிய கண்ணோட்டங்களுடன் இணைந்த இந்து இகழ்ச்சிப் பார்வை என்று மூன்றையும் கலந்து கட்டியிருக்கிறார்.
இந்து அறநிலையத்துறை தான் உண்மையில் பெரிய குற்றவாளி, அதைச் சொல்லாதது ஏன் என்று மரபின் மைந்தன் Muthaiah எழுப்பிய கேள்விக்கும் சரியான பதில் தரவில்லை.
கோயில்களின் கட்டுமானத்தில் உள்ளூர் ஆட்கள், இ.அ.துறை இருவருமே இணைந்து நிகழ்த்தும் அழிப்புகள் விஷயத்தில் ஜெ குறிப்பிட்டுள்ள பிரசினைகள் உண்மையானவை. சரியானவை. பெயிண்ட் அடிப்பு கொடூரங்கள், சிற்பங்களை கம்பிகள் கட்டியும் மணல்வீச்சு மூலமும் பல நூறு வழிகளில் சிதைத்தல், கோயில் வளாகத்திற்குள் கண்டமேனிக்கு கடைகளை அனுமதித்தல், கோயில்களை வைத்துப் பிழைப்போர் அதற்கான உரிய ஈட்டுத்தொகை தராமலிருப்பது இத்யாதி.
மத்திய தொல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் பாரம்பரிய கட்டுமானம் பழுதுபடாமல் சரியாக இருப்பது போல, அதைப்பின்பற்றி அதே பாணியில் தமிழகத்தின் பல புராதன கோயில்களை, மாநில தொல்துறை கண்காணித்து சீரமைக்க வேண்டும் என்பது நல்லயோசனை.
ஆட்கள் வராத பழம்பெரும்கோயில்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அவற்றுக்கு மக்களை ஈர்ப்பதும் நல்ல யோசனை.
பிரபலமான கோயில்களில் பக்தர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது போன்றவை நடைமுறையில் எந்த அளவுக்கு ஒத்துவரும் என்பது தெரியவில்லை.
இ.அ.துறை விசேஷ தரிசனம் எண்ற பெயரில் ஏற்கனவே அடித்துவரும் கொள்ளைக்கு நடுவில் மதுரைக் கோயில் போன்ற ஆலயங்களில் ஆயிரம் ரூபாய் கட்டணம் வைத்து தினமும் காலையில் 500, மாலையில் 500 என்ற எண்ணிக்கையில் மட்டும் பக்தர்களை அனுமதிக்கலாம் என்ற யோசனை அப்பட்டமான மேட்டிமைவாதம்.
இதுமட்டும் வெளியில் தெரியவந்தால் தமிழ்நாடு முழுவதும் கலவரம் உண்டாகும்…
கோயில்களை இந்துக்களை விட நாத்திகர்களும், அன்னிய மதத்தவர்களும் சரியாக கவனிப்பார்கள் என்று கூறியிருப்பது (இதற்கு கேரளம் உதாரணமாம்) வக்கிரமான, கண்டனத்திற்குரிய கருத்து. “உன் மனைவியைக் கவனிக்க உனக்குத் திறமையில்லை. எனவே…..” என்று கூறுவதற்கு நிகரான அசிங்கம் இது.
கோயில்கள் முதன்மையாக வழிபாட்டிடங்களே. அதன்பின்பு தான் வரலாற்றுச் சின்னங்கள். இரண்டுக்கும் முரண் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியது முக்கியம். ஆனால் முரண் என்பது ஏற்படுமானால், வழிபாட்டிற்கே முதன்மையான உரிமை தரப்பட்டவேண்டும். இந்த சமன்பாட்டை மாற்றக்கோரும் ஜெ கருத்து நிராகரிப்புக்குரியது.
மற்றபடி, தமிழகத்தின் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்களின் நிர்வாகத்திலும், பராமரிப்பிலும் அரசுக்கு ஒரு முக்கியமான, மையமான பங்கு இருக்கவேண்டும் என்பதே எனது கருத்தும். கோயில்கள் முழுமையாக தனிநபர்கள் அல்லது டிரஸ்டுகளிடம் சென்றால் பலவித சுயநலமிகளும் ஊழல்வாதிகளும் உட்புகுந்து இப்போதிருப்பதையும் விட மோசமான கேள்விகேட்கமுடியாத நிலைமை உருவாகலாம் என்றே நானும் கருதுகிறேன்.
மேலும், கோயில்களின் பல அசையா சொத்துக்களை பொதுநலன் என்றவகையில் ஏற்கனவே எடுத்துக்கொண்டுவிட்ட அரசுக்கு கோயில்களைக் காப்பாற்றும் தார்மீகக் கடமை உள்ளது. கர்நாடகத்தின் தர்மஸ்தலா போல சில இடங்களில், வீரேந்திர ஹெக்கடே போல நேர்மையான, திறமைமிக்க பாரம்பரிய தர்மகர்த்தாக்களின் கீழ் கோயில் மட்டுமல்ல, கோயில் சார்ந்த அந்த பிரதேசமே மிகச்சிறப்பாக பேணப்பட்டு, வளர்ச்சியுறுவதைப் பார்க்கிறோம்.
ஆனால், அதே போல மற்ற இடங்களில் நடக்கும் என்று சொல்வதற்கில்லை. மனித இயல்பு அதற்கு முற்றிலும் நேர்மாறாகவே உள்ளது. கோயில்களை “அரசின் பிடியிலிருந்து விடுவிப்பது” எனும் இயக்கத்தின் நோக்கம், அரசு தனது பொறுப்புகளை உணரச் செய்வதற்காகவும், அப்படிச் செய்யத் தவறும் பட்சத்தில் கோயிலை பொறுப்புடன் நடத்துபவர்களிடம் ஒப்படைக்கவும் தயாராக வேண்டும் என்ற எச்சரிக்கையாகவும் தான் எடுத்துக்கொள்ளவேன்டும். நீதிமன்றமும் அவ்வாறே அதைப்பார்க்கிறது.
// பூரியோ, உடுப்பியோ, இந்தியாவின் புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்றால் அவை மூர்க்கமாக பக்தர்களால் பயன்படுத்தப்பட்டு சீரழிக்கப்படுவதை நாம் காணலாம். அவற்றை ஒரு பூசகக் கும்பல் கைப்பற்றி வைத்து கொள்ளைமையமாக ஆக்கியிருப்பதைக் கண்டு கொதித்துப்போவோம். //
புரியாமல் பேசுவது என்பதற்கான நல்ல உதாரணம் இது. உடுப்பியின் கிருஷ்ணன் கோயில் என்பது உண்மையில் கிருஷ்ண மடம் தான். அதைச் சுற்றியுள்ள அஷ்டமடங்கள் எனப்படும் எட்டு மாத்வ மடங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த மடத்தில் அவர்களது சம்பிரதாயங்களை மிகக்கறாராக (பல சமயங்களில் சாமானிய பக்தர்களுக்கு எரிச்சலூட்டும் வகையில்) கடைப்பிடிக்கிறார்கள் என்பதைத் தாண்டி, அங்கு எந்தக் கொள்ளையும் இல்லை. அதை யாரும் “கைப்பற்றி” வைத்திருக்கவில்லை.
மத்வர் நிறுவிய கோயில் மாத்வ மடங்களின் வசம் தான் உள்ளது. பூரி ஜெகன்னாதர் கோயில், இந்தியாவில் சிறப்பாக பழம்பெருமை மாறாமல் நிர்வகிக்கப் படும் கோயிலுக்கு நல்ல உதாரணம். இன்றும் அங்கு மண்சட்டிகளில் விறகடுப்பில் சமைத்துத் தான் 56 வகையான நிவேதங்கள் பகவானுக்கு அளிக்கப்படுகின்றன. தேவதாசிகளின் நிருத்யம் நடைபெறுகிறது.
பல்வேறு பாரம்பரிய பூசகர் குழுக்களின் (இதில் சபரர் என்ற வனவாசி சமூகத்தினரும் அடக்கம். அவர்களுக்கும் பிரதிஷ்டை மற்றும் விசேஷ நாட்களில் பூஜை உரிமை உண்டு) உரிமைகள் முழுமையாக பேணப்படுகின்றன. ஆம், சாமானிய பக்தர்களை அங்குள்ள பண்டாக்களுக்கும் பூசகர்ளும் நச்சரிப்பது கோயிலின் வழமையுடனேயே கலந்துவிட்ட ஒன்று.
ஆனால் அது உண்மையான பக்தர்களை எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை, மாறாக அந்த எரிச்சலைத் தாண்டி ஜகன்னாதரின் திவ்யரூபத்தில் லயிப்பது தான் அந்தக் கோயிலின் ஆன்மீக அனுபவமே. மற்றபடி ஒரிஸ்ஸா மாநில அரசு முழுவதும், அதன் முதலமைச்சர் உட்பட தங்களை ஜகன்னாதரின் சேவகர்கள் என்று ஒவ்வொரு ரதயாத்திரையிலும் அறிவிக்கின்றர்.
இவ்வளவு அமோகமாக நடக்கும் ஒரு கோயிலில், ஏதோ கொள்ளை நடப்பதாகவும், அதை அத்துமீறலாக யாரோ வைத்திருப்பதாகவும் கூறுவது அபத்தத்தின் உச்சம்.
– ஜடாயு, பெங்களூர்