Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: அதல விதல முதல் – பழநி!

திருப்புகழ் கதைகள்: அதல விதல முதல் – பழநி!

thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 138
அதல விதல முதல் – பழநி
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –


முரசு

முரசு என்பது ஓர் தோற்கருவியாகும். தோலால் போர்த்தப்பட்ட கருவிகள் தோற்கருவிகள் என்று அழைக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் செய்தி அறிவிக்கத் தோற்கருவிகளே பயன்படுத்தப்பட்டன. போர்ப்பறைகளாகவும், இறைவழி பாட்டுக்கருவியாகவும், அரசாணைகளைத் தெரிவிக்கவும், இசை நிகழ்ச்சிகளுக்கும் இக்கருவிகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.

உடுக்கை, உறுமி, கஞ்சிரா, கிணை, தண்ணுமை, தவில், பம்பை, பறை, மிருதங்கம், முரசு போன்ற தோற்கருவிகள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன. இவை கருங்காலி, செங்காலி, வேம்பு, பலா, உலோகம், மண் போன்றவற்றால் செய்யப் படுகின்றன. ஆவின் தோல், ஆட்டுத்தோல், காளையின் தோல் போன்றவற்றால் செய்யப்படுகின்றன. தோல்களை இறுக வளைத்துக்கட்ட தோல் வார்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

சங்ககாலத் தோற்கருவிகளுள் முரசு முக்கிய இடம் பெற்றுள்ளது. இது அரசர்களுக்குரிய மதிப்புறு தோற்கருவியாக விளங்கியதை சங்க இலக்கிய குறிப்புகள் வழி உணர முடிகிறது. போர்க்களத்திலும், அரண்மனைகளிலும் முறையே உணர்ச்சிகளையும், அறிவிப்புக்களையும் முரசு அரைந்து வெளிப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு செயல்களுக்கும் உரிய அடிப்படையில் முரசு பல வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தன. போர்முரசு, கொடைமுரசு, மணமுரசு என வினைக்கு ஏற்ப ஓசை மற்றும் தகவமைப்பில் மாறுபட்டிருந்தன. முரசத்திற்குப் பலி வழங்கல் பண்டைய மரபு. திணையரிசியைக் குருதியில் தோய்த்து முரசுக்குப் பலியாக்குவர். “எறிமுரசு, சிலைத்தார் முரசு, இடிமுரசு, தழுங்குகுரல் முரசு, உருமிசை முரசு என்ற அடைகளினால் முரசம் ஒரு போரொலித் தாளமுடையது அன்றிப் பண்ணிசைக்கும் கருவி அன்று” என்று பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.

காரைக்காலில் உள்ள கோயில் ஒன்றில் மாங்கனித் திருவிழா அமோகமாக நடக்கும். மாங்கனித் திருவிழா என்பது அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வாழ்வில் ஒரு மாங்கனி தொடர்பாக நிகழ்ந்த மறக்க முடியாத நிகழ்வினை இன்றளவும் நினைவுகூறும் வகையில் காரைக்காலிலுள்ள சுந்தரம்பாள் உடனுறை சோமநாதர் கோயில் சார்பில் நடத்தப்படும் திருவிழா ஆகும். இத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம், பௌர்ணமி அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாங்கனித் திருவிழாவின் போது சுவாமி தேர் வீதி உலா வருகையில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, வீட்டு மாடிகளில் நின்றுகொண்டு இறைவன் மீது மாங்கனிகளை வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். காரைக்காலம்மையார் எழுதிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் தமிழ் இசைக் கருவிகள் பட்டியலை ஒரே பாடலில் அழகாகக் கொடுத்திருக்கிறார்:

துத்தங்கைக் கிள்ளை விளரி தாரம்
உழைஇளி ஓசைபண் கெழும பாடிச்
சச்சரி கொக்கரை தக்கை யோடு
தகுணிதம் துந்துபி டாளம் வீணை
மத்தளம் கரடிகை வன்கை மென்றோல்
தமருகம் குடமுழா மொந்தை வாசித்து
அத்தனை விரவினோ டாடும் எங்கள்
அப்பன் இடம்திரு வாலங் காடே”

இதில் குரல், துத்தம், கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன ஏழு ஸ்வரங்களாகும். சச்சரி, கொக்கரை, தக்கை, தகுணிதம் கரடிகை, வங்கை, மெந்தோல், டமருகம், குடமுழா என்பன தோல் கருவிகள். அல்லது தாளம் எழுப்பும் கருவிகள். துந்துபி என்பது ஊதும் கருவியாகும்.

பத்துப் பாட்டில் ஒன்றான மலைபடு கடாம் என்ற நூலில் கூத்தர் கொண்டு சென்ற வாத்தியங்களின் பட்டியல் வருகிறது:

திண்வார்விசித்த முழவோடு ஆகுளி
நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்
மின்னிரும் பீலி அணிதழைக் கோட்டொடு
கண்ணிடை வகுத்த களிற்றுயிர்த் தூம்பின்
இளிப்பயிர் இமிரும் குறும்பரத் தூம்பொடு
விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ
நடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை
கடிகவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி
நொடிதரு பாணிய பதலையும் பிறவும்
கார்க்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப
நேர்சீர் சுருக்கிய காய கலப்பையீர்
(மலைபடுகடாம். வரிகள் 1-14)

இவ்வரிகளில் முழவு, ஆகுளி, பாண்டில், கோடு, தூம்பு, குழல், தட்டை, எல்லரி, பதலை முதலிய கருவிகளைக் காண்கிறோம். குழலும் கோடும் தூம்பும் துளைக் கருவிகள். முழவு, முரசு, பறை, பதலை, துடி போன்றன தோல் கருவிகள். யாழ் என்பது நரம்புக் கருவி. பாண்டில் என்பது கஞ்சக் கருவி. (ஜால்ரா போன்றது).

சங்க இலக்கியங்களில் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம், பொருநராற்றுப்படை ஆகிய இலக்கியங்கள் இசை தொடர்பான, யாழிசை, தாள இசை தொடர்பான கலைஞர்கள் பற்றிய செய்திகளைச் சொல்கிறது. பொருநராற்றுப்படையில் வருகின்ற பொருநர், ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் எனப் பலவகையினர். இந்தப் பாடலில் வருபவன் தடாரி என்னும் பறையைக் கொட்டு பவன். தடாரி என்பது கஞ்சிரா, பறை என்பவற்றைப் போன்ற ஒர் இசைக்கருவி: தாளவாத்தியம்.

arunagiri muruga peruman
arunagiri muruga peruman

முரசுகள் மூன்று வகைப்படும் என்பதனை கலித்தொகை வழியாக அறியலாம்.

முரைசு மூன்று ஆள்பவர் முரணியோர் முரண்தப,
நிரை களிறு இடைபட, நெளியாத்த இருக்கை போல்
(கலித்தொகை, பாடல் 132, வரிகள் 4-5)

இப்பாடலுக்கு உரை வகுத்தோர் ‘முரசு மூன்றாவன, வீரமுரசு, தியாக முரசு, நியாய முரசு’ என்று விளக்குவர். பகை நாட்டுப் போருக்குப் படையெடுத்துச் செல்லும்முன், நீராட்டப்பெற்ற முரசினைச் செந்தினையைக் குருதியோடு கலந்து தூவி வழிபட்டு, பின்னர் குறுந்தடி கொண்டு ‘இயவர்’ கையால் முழக்குவர் என்ற குறிப்பு பதிற்றுப்பத்துப் பாடலில் காணப்படுகிறது. அப்பாடலடிகள்

உருவச் செந்தினை குருதியோடு தூஉய்
மண்ணுறு முரசம் கண்பெயர்த்து இயவர்
கடிப்புடை வலத்தர் தொடித்தோள் ஓச்ச
(பதிற்றுப்பத்து, பாடல் 19, வரிகள் 6-8)

என்பதாகும். இங்கு முரசினை முழக்கும் வீரர் வயவர் என அழைக்கப்பட்டுள்ளனர்.

Most Popular

உரத்த சிந்தனை :

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

18,079FansLike
375FollowersFollow
52FollowersFollow
74FollowersFollow
1,948FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

மக்கள் பேசிக்கிறாங்க

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

Ak 61: தொடங்கியதா ஷூட்டிங்..?

அஜித் இரண்டாம் முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை என்ற படத்தில்...

நம்ப மாட்டோம்… இது நீங்க இல்ல… பெயிண்டிங்!

உங்க ஆத்துக்கார் அரண்மனை4 உங்கள வச்சி எடுக்கலாம் போலயே.. குண்டு குஷ்புதான் தமிழர்களின் ஃபேவரைட் ப்யூட்டி

புஷ்பா பட பாடலுக்கு இரயிலில் இளைஞரின் அட்டகாசம்! வைரல்!

புஷ்பா திரைப்படப் பாணியில் மும்பை உள்ளூர் ரயிலில் ஒரு இளைஞர் நடந்துக் கொண்டது பயணிகளுக்கு...

அகண்டா: ஓடிடி ரீலிஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா' படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி...

Latest News : Read Now...