~ கட்டுரை: கமலா முரளி
ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நல அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு (UNICEF & UNWomen ) இயக்கங்களும் மிக அக்கறையுடன் பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கான முயற்சிகளில் ஈடுபட்டன.
கனடா நாட்டின் பிளான் இண்டர்நேஷனல் பிரிவு, “பெண்குழந்தைகளுக்கான தேசிய தினம்” அனுசரிக்க அனுமதி கோரியது.
இதையடுத்து, கனடா நாட்டின், பெண்கள் முன்னேற்றத் துறை அமைச்சர் ’ரோனா அம்புரோஸ்’ ஐக்கிய நாடுகளின் பொதுக்குழுவில் ( UN General Assembly) சர்வதேச பெண்குழந்தைகளின் தினம் அனுசரிப்பதற்கான வரைவுத் திட்டத்தைச் சமர்ப்பித்தார். 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் பொதுக்குழு ”அக்டோபர் 11 ஆம் நாளை சர்வ தேச பெண்குழந்தைகள் தினமாக” அறிவித்தது.
ஒவ்வொரு வருடமும் ஒரு கருப்பொருளைச் சார்ந்து, சர்வதேச பெண்குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
பெண்குழந்தைகளின் வாழ்வில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்த , கள ஆய்வுகளின் அடிப்படையில், திட்டங்கள் உருவாக்கப்பட்டு, அதற்கான நிதியும் அளிக்க அரசுகள் அளிக்க வேண்டுமென ஐ.நா சபை வலியுறுத்துகிறது. தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பும் பெறப்படுகிறது.
நான் சிறுமியாக இருப்பதால்….
ஆம்! இப்படி ஒரு இயக்கம் ! “நான் சிறுமியாக இருப்பதால்…” [ Because I Am a Girl ] என்ற இந்த இயக்கம் ப்ளான் இண்டர்னேஷனல் ( Plan International ) என்ற பன்னாட்டு , அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் மகத்தான திட்டமாகும்.
- பெண்குழந்தைகளின் கல்விக்கு முன்னுரிமை கொடுத்தல் வேண்டும்.
- பெண்குழந்தைகளுக்குத் தரமான கல்வி அளித்தல் வேண்டும்.
- பெண்குழந்தைகளின் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
- குழந்தைத் திருமணம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.
- கல்விக் கூடங்களில் பெண் குழந்தைகளுக்குச் சாதகமான சூழல் அமைய வேண்டும்.
இவையே , பிளான் இண்டர்நேஷனல் அமைப்பால் 2007 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட, “ Because I Am a Girl “ இயக்கத்தின் நோக்கமாகும்.
“நான் சிறுமியாக இருப்பதால்” என்ற இயக்கத்தின் மூலம் உலகில், பெண்குழந்தைகளுக்கான வாய்ப்புகள், சம உரிமை, கல்வி, பாதுகாப்புச் சூழல் போன்றவற்றின் உண்மை நிலை ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது.
உலகின் பல நாடுகளிலும், பிரபலமான மகளிரும் ‘எம்மா வாட்சன்’ போன்ற புகழ் பெற்ற சிறுமியரும், இந்த இயக்கத்தின் நோக்கங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தலைப்பில் பெண்குழந்தைகளின் நிலை, தேவையான முன்னேற்றம் குறித்து ஆய்வுகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி ஆண்டறிக்கை தயார் செய்தது.
பெண்குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், வறுமையின் கோரப்பிடி,வாய்ப்பு இழப்பு குறித்த கருத்துகள் உலக அளவில் பதிவு செய்யப்பட்டன. மாதவிலக்கு நாட்கள் பற்றிய புரிதல், மாத விலக்கு நாட்களில் பேணப்பட வேண்டிய தூய்மை போன்றவையும் பதிவு செய்யப்பட்டன.
பெண் குழந்தைகளைப் போற்று ! கல்வி புகட்டு !
பேட்டி பசாவோ! பேட்டி படாவோ!(BBBP YOJANA)
இந்தியாவில் பெண்குழந்தைகளுக்கான நலத்திட்டப்பணிகளை மேலும் தரம் உயர்த்தத் துவங்கப்பட்டது தான் “பேட்டி பசாவோ ! பேட்டி படாவோ !” திட்டம்.
பெண்குழந்தைகளைக் கொல்வது, குழந்தைத் திருமணம், கல்வி வாய்ப்பு இல்லாமை, கல்வியில் ஏற்றத்தாழ்வு’ போன்ற சிக்கல்களைக் களைவதே இத்திட்டதின் நோக்கம்.
சர்வதேச பெண் குழந்தைகள் தினம், 2021 : கருப்பொருள்
அக்டோபர் 11,உலக பெண்குழந்தைகள் தினம் ! இந்த ஆண்டின் கருப்பொருள் ,”கணினித் தலைமுறை : நம் தலைமுறை “ ( Digital Generation : Our Generation ).
கணினித் தொழில் நுட்ப அறிவினைப் பெறுவதில் பெண்குழந்தைகள், குறிப்பாக கிராம மற்றும் ஊரகப் பகுதி பெண்குழந்தைகளுக்கான சிக்கல்களைக் களைதல், இணையத் தொடர்பு பெறுதல், தொழில்நுட்ப சாதனங்கள் பெறுவதில் பெண்குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்தல், முக்கியமாக, இணைய வழியில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு இவையே இந்த ஆண்டின் முக்கிய அம்சங்கள்.
ஜெனரேஷன் ஈக்வாலிட்டி ஃபோரம்
இது தொடர்பாக,இந்த ஆண்டின் துவக்கத்திலேயே, “சமவாய்ப்புள்ள தலைமுறை” அமைப்பு ( Generation Equality Forum) துவங்கப்பட்டு பல நாடுகளின் தலைவர்களும் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றுள்ளது. கணிணி தொழில் நுட்பத்தில் பெண்குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் தொழிநுட்பங்களை உருவாக்குதல் மற்றும் சாதனங்கள் உற்பத்தி செய்தல் போன்றவை வலியுறுத்தப்பட்டுள்ளது. இது ஒரு மிக முக்கியமான முன்னெடுப்பு ஆகும் !
நகை மதிப்பு :
மனைவி பற்றிய எள்ளலான துணுக்குகளையே “நகை” உணர்வாக எழுதுவது ஒருபுறம் ! நகைக்கடைகள் பெண்களுக்கான பிரத்யேகக் கடை போல விளம்பரங்கள் ஒருபுறம் ! ஆனால், பெண்குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வுகள் அதிகமாதலை நகைப்புடன் எடுத்துக் கொள்ள முடியாதே ! ஒரு செய்தி என கடந்து செல்ல முடியாதே ! பெண்குழந்தைகளுக்கு பொதுவெளியிலும், இணைய வழியிலும் பாதுகாப்பு, அமைதியான வாழ்வு உறுதி செய்யப்படும் நாளே நாம் ”புன்னகை” பூக்கக்கூடிய நாள் !
சிறு பெண்குழந்தையின் பூ முகத்தில் “நகை” மலரட்டுமே !