
முனைவர் கு.வை பாலசுப்பிரமணியன் –
ஐ.சி.சி. டி20 போட்டி – இறுதி ஆட்டம்
ஆஸ்திரேலியா கோப்பை வென்றது
நியூசிலாந்து பரிதாப தோல்வி
இன்று துபாய் இண்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஐ.சி.சி. டி20 கோப்பையை வென்றது. பூவாதலையா வென்ற ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியை மட்டையாடச் சொன்னது.
முதல் பத்து ஓவர்களை நியூசிலாந்து அணி சரியாக விளையாடவில்லை. இந்த ஐ.சி.சி. டி20 போட்டியில் நியூசிலாந்து அணி முதல் பத்து ஓவர்களில் எடுத்த குறைவான ஸ்கோர் (57/1) இதுதான். நான்காவது ஓவரின் கடைசி பந்தில் தொடக்க வீரர் டரில் மிட்சல் (8 பந்தில் 11 ரன்) ஆட்டமிழந்தார். மார்டின் குப்டில் (35 பந்தில் 28 ரன்) 12ஆவது ஓவரின் முதல் பந்தில் அவுட்டானார். உண்மையாகச் சொல்லப்போனால் அணித்தலைவர் கேன் வில்லியம்சனைத் தவிர யாரும் சரியாக ஆடவில்லை.
அவர் 48 பந்தில் 85 ரன் எடுத்தார். அதில் 3 சிக்ஸ், 10 ஃபோர் அடங்கும். அவர் ஆட்டமிழக்கும்போது 13 பந்துகள் பாக்கியிருந்தன, ஒருவேளை அவர் அந்த 13 பந்துகளை ஆடியிருந்தால் அவர் சதமடித்திருக்கலாம்; நியூசிலாந்து அணி 200 மேல் எடுத்திருக்கலாம்.
இருபது ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி நாலு விக்கட் இழப்பிற்கு 172 ரன் எடுத்தது. 20 ஓவரில் 173 என்பது கொஞ்சம் கடினமான இலக்குதான்.
ஆனால் ஆஸ்திரேலிய அணி அதனை சுலபமாக எடுத்தது. தொடக்கத்திலிருந்தே அந்த அணி வீரர்கள் நன்றாக ஆடினார்கள். பத்து ஓவர் முடிவில் ஒரு விக்கட் இழப்பிற்கு அந்த அணி 82 ரன் எடுத்திருந்தது.
வார்னர் 38 பந்துகளில் 53 ரன்; மிட்சல் மார்ஷ் 50 பந்தில் 77 ரன்; கிளன் மேக்ஸ்வெல் 18 பந்தில் 28 ரன் எடுத்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவரில் இலக்கை எட்டி ஆட்டத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக வெல்கிறது. ஆட்டநாயகனாக ஆஸ்திரேலிய அணியின் மிட்சல் மார்ஷ் அறிவிக்கப்பட்டார்.
இந்த ஐ.சி.சி 2021 போட்டியின் நாயகனாக ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் அறிவிக்கப்பட்டார்.