
திருப்பதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தெற்கு மண்டல கவுன்சிலின் 29வது கூட்டத்துக்கு முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு திருமலை திருப்பதி கோயிலில் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
அமித் ஷா திருப்பதி கோவிலுக்கு சென்ற போது ஆந்திர பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, உடன் சென்றதாக கோயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்த அமித் ஷாவுக்கு, ஆலயத்தை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) உயர் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக விமான நிலையத்தில் தரையிறங்கியதும், ஷா புனிதமான ஆலயத்தில் தெய்வீக அருளைப் பெற, உடனடியாக சாலை வழியாக அருகிலுள்ள திருமலை மலைகளுக்குச் சென்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், தரிசனம் செய்ததாக அதிகாரி கூறினார்.
புனிதமான ஏழு மலைகளில் பிரார்த்தனை செய்த பிறகு, ஷா உடனடியாக திருப்பதியில் உள்ள தாஜ் ஹோட்டலுக்கு புறப்பட்டார், அங்கு ஞாயிற்றுக்கிழமை தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெறும் என்று மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாக, இங்குள்ள ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அமித் ஷாவுக்கு, ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, உற்சாக வரவேற்பு அளித்தார்.
திருப்பதியில் நவ.13,14,15 ஆகிய தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது. மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென்மாநில முதலமைச்சர்கள் கூட்டம் நடைபெறுவதையொட்டி விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இன்று, நவம்பர் 14ம் தேதி தென்மாநில முதல்வர்கள் ஆலோசனை கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநில முதல்வர்களும், அந்தமான், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்களும் பங்கேற்க உள்ளனர்.