
சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் வேலை செய்யாதபோது, நடத்துநர்கள் சுங்கக் கட்டணத்தை செலுத்தி, அது தொடா்பான விவரத்தை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக இயக்கப் பிரிவு பொதுமேலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவா் அனைத்து கிளை மேலாளா்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்: சுங்கச்சாவடிகளில் பேருந்துகளில் ஒட்டப்பட்ட பாஸ்டேக் வில்லைகள் சரியான முறையில் ஸ்கேன் ஆகாமலும், சர்வைர் பிரச்னை ஏற்பட்டு அதனால் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கும், போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளன.
எனவே, விரைவுப் பேருந்துகளில் ஒட்டப்படும் பாஸ்டேக் வில்லைகள் சுங்கச்சாவடிகளில் ஸ்கேன் ஆகாத பட்சத்தில் உடனடியாக சுங்கக் கட்டணத்தை பேருந்தின் நடத்துநர்கள் செலுத்தி, பயணிகளுக்கு எந்த விதமான சிரமுமின்றி பேருந்தை இயக்க வேண்டும்.
அந்த கட்டண விவரத்தையும் அந்தந்த நாள்களிலேயே உடனடியாக கிளை மேலாளர்கள், வணிகப் பிரிவுக்கு தபால் மூலமாகவோ அல்லது வாட்ஸ் ஆப் மூலமாகவோ தெரியப்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.