
- ஜெயஸ்ரீ எம்.சாரி, நாந்தேட்.
இன்று ஆதவனின் கதிர்கள் என் முகத்தில் விழும் முன்னே நான் விழித்துக் கொண்டேன். கொஞ்சம் தென்றலாய் வந்த குளிர்காற்றினையும் ரசித்துக் கொண்டே சுடச்சுட தேநீரும் பருகினேன். யோகா நித்திரையில் மன்னிக்கவும் யோகா முத்திரையில் இருந்து விடுபட்ட என் கணவர்,” இன்னிக்கு அதிசயமாய் சூரியனைப் பார்க்கப் போற, நீ!, வாயேன் வாக்கிங் போகலாம்,” என்றார்.
“எனக்கு ஒரே சீரான பாதைல எல்லாரையும் போல வாக்கிங் போறது என்பது அவ்வளவாக பிடிக்கலை. ஒரு கரடுமுரடான பாதையில, மலைப்பாதை மாதிரி, மேடு பள்ளம் இருக்கிற மாதிரி இடங்களில் தான் எனக்கு வாக்கிங் போகப்பிடிக்கும்,” என்றேன், நான். அப்போதைக்கு தப்பித்துக் கொள்ள நான் நினைத்தேன். உடனே அவர் “வா, மயில் பார்க்க போகலாம். நேத்திக்கு கொஞ்சம் மழை வேற பெஞ்சுது. சேறு, சகதியாய் இருக்கும். போலாம் வா,” என்றார்.
வசமாய் மாட்டிக்கொண்ட நான் மயில் பார்க்க மோட்டர் பைக்கில் கணவருடன் சென்றேன். சாலையில் போகும் போது நான் என் கணவரிடம் “சமீப காலமாக வாக்கிங் போகிறவங்க ஜாஸ்தியாகிட்டாங்க,” என நான் கூற ” புதுசா பார்க்கறவங்களுக்கு அப்படித்தான் தெரியும்” என என் கணவர் என்னை நக்கல் செய்ய நான் அமைதியானேன்.
மெயின் ரோடிலிருந்து பிரிந்து மயில்கள் வாசம் செய்யும் பகுதிக்குள் திரும்பினோம், நாங்கள். சிறிது தூரம் சென்றவுடன் என் கணவர் ஒரு பாழடைந்த கட்டிடத்தைக் காட்டி “அங்கு மயில் ஆடறது பாரு,” என்றார். ஆம்! அந்த வீட்டின் மாடியில் ஒரு மயில் ஆடிக்கொண்டிருந்தது. உடனே நாங்கள் வண்டியை விட்டு இறங்கி கொஞ்சம் புதர்களை தாண்டி அந்த வீட்டின் மாடியை நோக்கிச் சென்றோம்.
அங்கு மாடிப்படிகள் இருந்ததே தவிர மொட்டை மாடிக்கு செல்ல முடியாமல் இரண்டு இரும்பு கம்புகளான தடுப்புகள் இருந்தன. அதனால், மாடிப்படிகளில் இருந்தே மயிலின் ஆட்டத்தை ரசித்தோம். அங்கேயே இருந்த இரண்டு பெண் மயில்களும் எங்களை கண்டவுடன் பறந்துச் சென்றன. உடனே, ஆண் மயிலும் தன் ஆட்டத்தை நிறுத்தி விட்டது.
அதனால், அங்கிருந்து இறங்கி இன்னும் கொஞ்சம் புதரில் நடக்கத் தொடங்கினோம். என்ன ஆச்சரியம்!! இன்னொரு ஆண் மயில் தன் தோகையினை விரித்து அற்புத நடனத்தை எங்களுக்காவே அரங்கேற்றியது போல் இருந்தது. அந்த மயிலின் அருகில் பெண் மயில் கூட இல்லை.
இன்று இயற்கையும், இறைவனும் நம் பக்கமே என எண்ணிக்கொண்டு எங்கள் வாக்கிங்கை தொடர்ந்தோம். மேடு பள்ளங்களை தாண்டி, எங்கள் இருவரின் காலணிகளில் எல்லாம் சகதியான போதும் மயில்களின் அகவலினால் உற்சாகமடைந்து மயில்களின் பின்னாலேயே சென்றோம்.
ஒரு கட்டத்தில் எனக்கு காலும் வழுக்கி, நான் காலணியையும் கழற்றி கையில் வைத்துக் கொண்டு, முள்ளும் குத்தி ஒரு மேட்டினை கடக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்க வர “ஐயோ, எனக்கு தாண்ட முடியுமா! தீயணைப்பு படையினரை தான் கூப்பிட வேண்டுமா?” என நான் என் கணவரை கேட்க, அவரோ,” இப்படி ஒரு ஆளுக்கு எல்லாம் நான் அவர்களுக்கு சொல்ல மாட்டேன்,” என்றார், நக்கலாக.
தட்டு தடுமாறி ஒரு வழியாக மேடு பள்ளத்தை கடந்து வேர்த்து வியர்த்து மயில்களை ரசித்த மகிழ்ச்சியில் நாங்கள் வண்டி வைத்த இடத்தை வந்தடைந்தேன். என் அந்த நிலமையைப் பார்த்த என் கணவர், “இனிமே வாக்கிங்கிற்கு மேடு பள்ளம், சகதி ரோடுல தான் வேணும்னு கேட்பியா?,” – என நினைத்திருப்பாரோ!!
இன்றைய மயில்களை பின்தொடரும் சம்பவமானது எனக்கு ஒரு நல்ல உடற்பயிற்சியானது. அங்கேயே ஒரு குட்டையில் வாத்துகள் நீந்திக் கொண்டிருந்தன. தூக்கணாம் குருவிகளின் கூடுகளும் கண்ணுக்கு விருந்தாயின.
கிளிகள், கிங்ஃபிஷர் பறவை, மரங்கொத்தி, சிட்டுக்குருவிகள், புறாக்கள், வெள்ளை நாரைகள், கறுப்பு நிறத்தில் பெரிய உருவம் கொண்ட பறவைகள் என அவ்விடமே ஒரு சிறிய பறவைகளின் சரணாலயமாய் இருந்தது. என் கட்டை விரலில் குத்திய முள்ளின் வலியும் ஒரு அருமையான வலியை கொடுத்துக் கொண்டிருக்கிறது.