சரோஜா மாமி இன்று வெளி நாட்டிலிருந்து போன் செய்தாள். இது வழக்கமான ஒன்றுதான். பத்து நாளைக்கு ஒரு தடவை வரும் அன்புத் தொல்லை. மதியம் சாப்பிட்ட பின் நல்ல தூக்கம் ஒன்று போட்டு எழுந்து இந்தியாவுக்கு கால் செய்து அவர்கள் அழைக்கையில் நமக்கு இங்கு மதிய உணவு நேரம்.
முதலில் அங்குள்ள தனக்குப் பரிச்சயமான பிற இந்தியர்களைப் பற்றிய குறை நிறைகளை ஒலிபரப்பி விடுவாள். பின்னர் ஒரு வாரமாக மாமி செய்த சமையலை ஒப்பித்தல் நடக்கும்.
அடுத்த ஒரு வாரம் செய்யப் போகும் சமையலையும் பட்டியல் போட்டு விடுவாள். இதில் மாவரைத்தது, ஊறுகாய் போட்டது சகலமும் அடங்கும்.
பாவம் அவர்களுக்கு இது ஒரு வடிகால் போலும். அவர்களிடமிருந்து சில சமையல் வகைகளைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இதன் மூலம் கிடைப்பதும் உன்மைதான்.
வெளிநாட்டிலிருந்து போன் என்றால் லேசில் வைக்க மாட்டர்கள். ஒரு ஸ்கீமில் கொஞ்சம் டாலர் கட்டி கார்டு வாங்கிக் கொண்டால் ஒரு கால் என்றால் அன்லிமிடெட் நேரம் பேசலாம் அங்கு. அவ்வாறு பேச ஆரம்பித்தால் நிறுத்த மனம் வராது அவர்களுக்கு. இங்கு நம் பாடு திண்டாட்டம்தான்.
‘கத்திரிக்காய் சாப்பிட்டவன் கத்திரிக்காய் ஏப்பம்தான் விடுவான்’ என்று ஒரு சொலவடை உண்டு. அது போல் அவரவர் எந்த வேலையில் ஈடுபட்டு எந்த நினைப்பில் இருக்கிறார்களோ அது தான் அவர்கள் பேச்சிலும் வெளிப்படும்.
உயர்ந்த நூல்களைப் படிப்பதும், ஆன்மீக பிரவசனங்களைக் கேட்பதும் சாதனை செய்வதும் வழக்கமாகக் கொண்டவர்களிடம் போனிலோ நேரிலோ பேசும் போது பல நல்ல விஷயங்களை அவர்களிடமிருந்து அறிந்து கொள்ளலாம். நேரம் நல்ல விதமாகக் கழியும்.
அதை விடுத்து அடுத்தவர் நேரத்தையும் வீணாக்கிக் கொண்டு வீட்டுக் கதை பேசினால் யாருக்கு என்ன லாபம்? ஒரு வேளை பேசுபவருக்கு மனச் சுமை குறையலாம். அல்லது தன் பெருமைகளைச் சொல்லிக் கொண்ட திருப்தி ஏற்படலாம். எதிர் முனையில் போனைக் கையில் பிடித்துக் கேட்பவரின் நிலையையும் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
அடுத்தவர் வீடுகளுக்குச் சென்று அரட்டை அடிக்கும் பழக்கம் ஒரு காலத்தில் இருந்தது. தற்போது அந்த வம்பு வழக்குகளின் நேரங்களை டிவி நெடுந்தொடர்கள் பிடித்துக் கொண்டு விட்டன.
அவ்வப்போது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் கோயில் வாசலிலோ கடை கண்ணிகளிலோ கால் கடுக்க நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். இப்போது அதுவும் குறைந்து போய் போனில் அரட்டை அடிக்கும் பழக்கம் பிடித்துக் கொண்டுள்ளது.
போன் பேசும் மரியாதை என்று ஒன்று உண்டு. போனில் அழைப்பவர், தான் சொல்ல வந்ததைச் சொல்லி முடித்த பின், கேட்பவர் பதில் பேசவேண்டும். அதற்காக நான்தான் போன் செய்தேன்; அதனால் நான்தான் பேசுவேன்; நான் முடிக்கும் வரை நீ கேட்கத்தான் வேண்டும் என்று அடம் பிடிப்பது தகுமா?
வெகு நேரம் போனைக் காதில் வைத்துக் கேட்பதால் காது சூடாகி வலி எடுக்கிறது. கேட்கும் செவிப் புலன் இதனால் பழுதடையும் அபாயமும் உள்ளது.
பிறர் கேட்பதற்காகத்தானே பேசுகிறோம்! அவர்களுக்கு நம் பேச்சைக் கேட்க விருப்பம் உள்ளதா இல்லையா? என்ற நுண்ணுணர்வோடு கவனித்துப் பேசுவது மிகவும் அவசியம் அல்லவா? பேசும் வாய் நம்முடையது என்றாலும் கேட்கும் காது அவர்களுடையதல்லவா?
போனில் பேசுபவர்கள் கொஞ்சம் கருணை காட்டலாமே! ப்ளீஸ்!
– ராஜி ரகுநாதன்




