ஓர் எழுத்தாளர் இன்னோர் எழுத்தாளரிடம் தம் நாவலுக்கு அணிந்துரை கேட்டார். ஒரே ஒரு நிபந்தனையின் பேரில் அந்த அணிந்துரை கேட்கப்பட்டது. நிபந்தனை என்ன தெரியுமா?
`நீர் என் நண்பர். ஆகையால் உரிமையுடன் கேட்கிறேன். இந்த நாவல் படுமட்டம் என்று தாறுமாறாக நாவலைப் பற்றித் தாக்கி அணிந்துரை எழுதித் தாருங்கள். அதிகபட்ச அளவு தாக்க வேண்டும். அதை முகப்பில் வெளியிட்டால் என் இமேஜ் உயரும். இப்படித் தாக்கியிருக்கிறானே, அப்படி என்னதான் நாவலில் இருக்கிறது என்று பார்ப்பதற்காக நாலுபேர் வாங்குவார்கள்!`
இதைக் கேட்ட அந்த எழுத்தாளர் கடும் சீற்றமடைந்தார். `புத்தகத்தைக் கொடுத்துவிட்டுப் போ. படித்துவிட்டுப் புத்தகம் எப்படி இருக்கிறது என்று தான் அணிந்துரையில் எழுதுவேன். அதில் உள்ள நல்லதைப் பாராட்டி, சரியில்லாத இடங்களைத் தாக்கி எழுதுவேன். உனக்குப் புத்தகம் விற்க வேண்டும் என்பதற்காகத் தாறுமாறாக எழுதவெல்லாம் என்னால் முடியாது!`
அணிந்துரை கேட்டவர், `நீயெல்லாம் ஒரு நண்பனா, என் எழுத்தைத் தாக்கித் தகர்த்து எனக்குப் புகழ்வருமாறு செய்யாத உன் நட்பும் ஒரு நட்பா! பிழைக்கத் தெரியாத, பொறாமை பிடித்த முட்டாளே!` என்று புத்தகத்தைப் பிடுங்கிக் கொண்டு போய்விட்டார். (அந்த எழுத்தாளர் பெரிய பிடுங்கி என்றுதான் தன்னைப் பற்றி எப்போதும் சொல்லிக்கொள்கிறார்!) இப்போது அவர்கள் நிரந்தர விரோதிகள்.
என் இளைய நண்பர் ஒருவர் எழுதியிருக்கும் நூல் ஒன்றை வாங்கி வாசித்தேன். அதில் ஒரு முன்னுரை. ஆசிரியரே எழுதியதுதான். தான் எந்தெந்த வகைகளில் எல்லாம் எப்படியெல்லாம் கெட்டலைந்தோம் என்று விலாவாரியாக எழுதியிருந்தார். சாமியாராகக் காவி கட்டிக்கொண்டு தான் செய்த அட்டூழியங்கள் பற்றியும் பட்டியல் இட்டிருந்தார். மட்டமான கடந்த கால ஒழுங்கீன வாழ்க்கை.
அந்த நண்பர் அத்தனை குணக்கேடு கொண்டிருந்தவரா என்று என் மனம் வியப்பில் ஆழ்ந்தது. அவரிடம் `என்னய்யா, இவ்வளவு மோசமாக எழுதிக் கொண்டிருக்கிறாய் உன்னைப் பற்றி? இதெல்லாம் உண்மையா?` என்று கேட்டேன்.
`சார். சார். அதையெல்லாம் நம்பி நான் மோசமான வாழ்க்கை வாழ்ந்ததாக முடிவு கட்டிவிடாதீர்கள். நான் எல்லோரையும் போல் சராசரியான வாழ்க்கை வாழ்ந்தவன் தான். ஆனால் இப்படியெல்லாம் கெட்டு அலைந்ததாக எழுதுவதுதான் இப்போதைய பாணி. இப்படி எழுதிக் கொண்டால்தான் அந்த எழுத்தாளரைப் பற்றி கவனிக்கிறார்கள்!` என்றார் அவர்.
பெரும் செல்வந்தர் ஒருவரிடம் தன் நூலுக்கு அணிந்துரை கேட்டு வாங்கப் போனார் ஓர் எழுத்தாளர். அந்தச் செல்வந்தருக்குப் பாவம் எழுத்தும் தெரியாது. இலக்கியமும் தெரியாது. ஆனால் தன் பெயர் நூலில் வரும் என்பதில் அவருக்கு ஏக குஷி. `நீயே அணிந்துரை எழுதிக் கொண்டு வாய்யா. நான் கையெழுத்துப் போட்டுத் தருகிறேன்!` என்றார் அவர்.
அப்படியே செய்தார் எழுத்தாளர். எழுத்தாளர் தம் நூலுக்குத் தாமே எழுதிய அணிந்துரையைத் தான் எழுதியதாக வாசித்து மிகுந்த பெருந்தன்மையுடன் ஆமோதித்து அங்கீகரித்தார் செல்வந்தர்.
பிறகு அவர் இரண்டு கையெழுத்துப் போட்டுக்கொடுத்தார். ஒன்று அணிந்துரை அவர் எழுதினார் என்பதற்கான ஒப்புதல் கையெழுத்து. இன்னொன்று அவரது செக் புத்தகத்தில் ஒரு பெருந்தொகையை எழுத்தாளருக்கு என எழுதி அவர் இட்ட கையெழுத்து.
`இதுவும் ஒரு பிழைப்பா?` என்று அந்த எழுத்தாளரிடம் நான் கோபித்துக் கொண்டபோது, `ஏறக்குறைய புத்தகச் செலவு முழுவதும் காசோலையாக வந்துவிட்டதே. நான் எழுதிய அவரது அணிந்துரையை விளம்பரம் போல் வைத்துக்கொள்ள வேண்டியதுதான்!` என்றார் அவர் மனநிறைவுடன்!
*சுந்தரராமசாமி தன் மனத்திற்குப் பிடித்த நூலாக இருந்தாலன்றி அணிந்துரை எழுத ஒருபோதும் ஒப்புக் கொண்டதில்லை. ஜெயகாந்தன் தன் முதல் சிறுகதைத் தொகுதி தவிர, தனது வேறு எந்த நூலுக்கும் தன் முன்னுரை தவிரப் பிறர் அணிந்துரையை வெளியிட்டுக் கொண்டதில்லை.
வல்லிக்கண்ணன் ஏராளமான அணிந்துரைகளை வாழ்த்துரைகள் போல் வாரி வழங்கினார். இளைஞர்களை உற்சாகப் படுத்துவதற்காகத் தாம் அவ்விதம் செய்வதாக அவர் விளக்கமும் சொன்னார்.
சில எழுத்தாளர்கள் தாங்கள் விரும்பிக் கேட்டு வாங்கிய அணிந்துரையை அது தங்களைப் பற்றிச் சிறப்பாகச் சொல்லவில்லை என்று கருதி வெளியிடாமல் விட்டுவிட்ட சந்தர்ப்பங்களும் தமிழில் பல உண்டு.
அதிக எண்ணிக்கையிலான அணிந்துரைகளை அண்மைக் காலத்தில் எழுதியவர் சிலம்பொலி செல்லப்பன் என்று சொல்லலாம். அவரின் அணிந்துரைகள் தொகுக்கப்பட்டு புத்தகங்களாக வந்துள்ளன.
நிர்பந்தத்தின் பேரிலும் ஓயாத வற்புறுத்தலின் பேரிலும் எழுதப்படும் அணிந்துரைகள் அவற்றைப் படிக்கும்போதே பல்லிளிக்கின்றன. மனமொப்பித் தாமே விரும்பி ஓர் எழுத்தாளர் இன்னோர் எழுத்தாளருக்கு அணிந்துரை எழுதினால் அதன் சுவாரஸ்யமும் கம்பீரமும் தனி தான்.
அப்படி என்ன அணிந்துரை தமிழில் வந்திருக்கிறது என்று கேட்டால் உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்லலாம். ஜெயகாந்தனின் `ஒருபிடிசோறு` என்ற முதல் சிறுகதைத் தொகுதிக்கு தி.ஜ. ரங்கநாதன் தாமே விரும்பி எழுதிய அணிந்துரை அது.
- திருப்பூர் கிருஷ்ணன்