உலகையே அச்சுறுத்திக் கொண்டு வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, உலக நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் ஏன் அவ்வளவு பெரிதாக இல்லை என்று ஆச்சரியப் பட்டு கட்டுரைகள் எழுதி வருகின்றன சர்வதேச ஊடகங்கள்.
கிழக்கு மேற்கு என்று எந்த இடமும் விடாமல், சிறிய நாடுகள் எல்லாம் பெரிதாக பாதிப்பைச் சந்திக்கும் போது, மக்கள் நெருக்கமும், 1.3 பில்லியன் என்ற மிகப் பெரும் மக்கள் தொகையும் கொண்ட இந்தியாவில் அவ்வளவாக கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கப் படுவது எப்படி என்ற ஆச்சரியம் கலந்த கேள்வியை ஊடகங்கள் எழுப்புகின்றன! இது குறித்து நியுயார்க் டைம்ஸில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது.
‘கொரோனா’ வைரஸ் பாதிக்கப் பட்ட நாடுகளின் பட்டியலில் சீனாவுக்கு அடுத்து இத்தாலி உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தகவல் படி, இத்தாலியில் இதுவரை 2,503 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் பிப்.21ல் ‘கொரோனா’ வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று. வைரஸ் பரவத் தொடங்கிய மூன்றே வாரத்தில் மார்ச் 12ஆம் தேதி இந்த எண்ணிக்கை 12,462 ஆக அதிகரித்தது.
இதில் 10 சதவீதம் பேர் ஐ.சி.யூ.,வில் உள்ளனர். 5 சதவீதம் பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மார்ச் 12இல் 12,462 பேருக்கு பாதிப்பு இருந்தது. இது மார்ச் 16ல் 24,747 என அதிகரித்தது. 5 நாட்களில் பாதிப்பு இரண்டு மடங்கு என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் வூகானில் ‘கொரோனா’ தொற்று ஏற்பட்டு, ஜன. 21ல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 251 ஆக இருந்தது. இதை அடுத்து, அந்த நாடு உடனடியாக வூகான் பகுதியை தனிமைப்படுத்தியது. வைரஸ் பரவலை பெருமளவு தடுத்தது.
தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் உத்தியை இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பின்பற்றவில்லை என்று கூறப் படுகிறது.
அதுபோல், இப்போது இந்தியாவிலும், வைரஸ் தொற்றுப் பரவல் கட்டுப் படுத்தப் படும் முறைகள் குறித்து உலக நாடுகள் ஆர்வத்துடன் உற்று நோக்குகின்றன.
வெளிநாட்டில் இருந்து வருபவர்களை சோதித்து, உரிய மருத்துவ வசதி, முகாமுக்கு அனுப்பி, தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து இந்திய அதிகாரிகள் பெருமளவு பணி செய்கின்றனர். நெருக்கடியான கட்டத்தில் எப்படி பணி செய்வது என்பதைப் பாராட்டி பிரதமர் மோடியும் தனது டிவிட்டர் பதிவில் இதனைக் குறிப்பிட்டார்.