12/10/2019 10:29 AM
இலக்கியம் நீயும் நானும்: கோபால்தாசனின் கவிதை நூல் விமர்சனம்!

நீயும் நானும்: கோபால்தாசனின் கவிதை நூல் விமர்சனம்!

-

- Advertisment -
நீயும் நானும் : கவிஞர் கோபால் தாசன் எழுதிய கவிதை நடையிலான சிறுகதை நூலுக்கு எழுதிய முன்னுரை: அறிமுக உரை!
***
சென்ட்ரலில் மையம் கொண்ட மனப் புயல்!
 
நீயும் நானும் – ஏதோ ஒரு சிறு கவிதைக்கான தலைப்பாக நினைத்துத்தான் படிக்கத் தொடங்கினேன். சிறு கதையைக் கூட குறுநாவலாக சுவாரசியமாகச் சொல்ல முடியும் என்று கவிஞர் கோபால்தாசன் இதில் நிரூபித்திருக்கிறார்.
அவளும் அவனும் ஏதோ ஒரு சூழலில் சந்திக்கிறார்கள். முதல் சந்திப்பு முழுதாக இழுத்துச் செல்கிறது. காதலா நட்பா என்று திகைக்க வைக்கும் பேச்சுக்கள். முடிவு அந்த இணைக் கதாபாத்திரங்கள் வாயிலிருந்தே வெளிப்பட்டு விடுகிறது ஒரு கட்டத்தில்!
இது ஒரு காதல் கவிதை என்று எடுத்தவுடனே தோன்றுகிறது. கதாபாத்திரங்களின் பெயரை எங்குமே சொல்லாமல், நான், அவள் என்று கவிஞரே தன்னை முன்னிலைப் படுத்தி அவளை அறிமுகப் படுத்தி கவிதையை அத்தியாயமாக நகர்த்துகிறார்.
சினிமாக் கதாசிரியர்களைப் போல் காட்சிகளை ஒவ்வொரு கட்டத்திலும் விளித்து, அத்தியாயத்தில் விரித்து சொல்லாடல்களை சுவைகுன்றாமல் வெளிப்படுத்துகிறார் கவிஞர்.
காதலர்கள் என்றால்…? எப்போதும் செல்போன் பேச்சுதான்! அடையாளம் அப்படி ஆகிவிட்டது. சாலையில் நடக்கும்போதும், படுக்கையில் புரளும்போதும், காலையில் விழிக்கும்போதும், பேச்சு பேச்சு.. பேச்சுத்தான்! இப்படி ஒரு அடையாளத்தை நவீன தொழில்நுட்ப உலகு வழங்கியிருக்கும்போது… அப்படி என்னதான் பேசுவார்கள் இருவரும்!? எனக்குள் மட்டுமல்ல… காதலின் சுவை அறியா எவருக்குள்ளும் எழும் கேள்விதான் அது!
இந்தக் கேள்விக்கான பதிலை உரைநடைக் கவிதையாக கோபால்தாசன் காட்டி விடுகிறார். ஒவ்வொரு கட்டத்திலும் செல்போன் சிணுங்கலில் அவளின் சிணுங்கல் மொழியும், வாடா போடா ஒருமைப் பேச்சும், எப்படி காதலை வெளிப்படுத்துகிறது என்பதை இதில் உணர முடிகிறது. இது கற்பனையா, அனுபவமா என்பதை இந்தக் கவிதை வசனங்களைப் படிக்கும் ஒவ்வொருவரும் நிச்சயம் கவிஞர் கோபால்தாசனிடம் கேட்கத்தான் செய்வார்கள். கவிதைக்கு அனுபவமும் ரசனையும் தேவை. நிகழ்வின் அனுபவத்தை ரசித்து நோக்கக் கற்றுக் கொண்டால் கவிதைப் பூ மலரும். கோபால்தாசனின் இந்தக் கதாபாத்திர வெளிப்பாடும் அனுபவத்தையே காட்டுகிறது.
குறுகிய கால நட்புக்கு ரயில் சிநேகிதம் என்பார்கள். இங்கும் அப்படித்தான்..! அவனுக்கும் அவளுக்குமான முதல் பார்வை உள்ளூர் ரயிலில் தொடங்கி அத்யாயத்தின் இறுதியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் நிற்கிறது.
இந்த ரயில் சிநேகம், ஒரு அக்டோபர் 2ல் அறிமுகமாகி, இன்னொரு நாள் சந்திப்பில் முகவரி கேட்டு, போரூர்ப் பேருந்தின் நெருக்கடியில் மீண்டும் கண் கலந்து, பேருந்துக்காகக் காத்திருப்பில் கடந்து மீண்டும் மீண்டும் வலுவில் அமைத்துக் கொள்ளும் சந்திப்புகளில் வளர்கிறது.
பேருந்தில் அருகருகே இருக்கையில் அமர்ந்து கொள்ளும் அன்னியோன்னியம் அடுத்த கட்டம். வழக்கம்போல் செல்பேசி எண் கேட்டுப் பெறுவதும், போரடிக்கும்போது மிஸ் மிஸ்டு கால் கொடுப்பதுமாக நகர்கிறது வாழ்க்கை.
உன் பிறந்த தேதி எதுவெனக் கேட்பதும், எப்படியும் நீங்க சின்னவங்கதான்.. அதுக்காக அண்ணா தங்கச்சின்னெல்லாம் பாச மழை கொட்டி நெஞ்சை நக்குற சென்டிமெண்ட் எல்லாம் வேண்டாம் என்று அவன் சொல்வதும்… காதலின் கருத்தைப் புகல்கிறதா அல்லது வெறும் நட்புத்தானா என்ற நெருடலை விதைக்கிறது.
சேலை, சுடிதார் என்று அவளின் தோற்றத்தில் இவன் மனம் காணாமல் போகும் அடுத்த கணம், இவன் ஒரு பெண்ணை ரசிக்கும் கவிஞனா, இல்லை அவளைக் காதலில் கண்டு நெஞ்சில் தேக்கும் நிலையில் உள்ளானா என்ற சஞ்சலத்தை வாசகனுக்கு அளிக்கிறது.
உன் தோற்றமும் கோபமும் உனக்கு சம்பந்தமில்லாமல் இருக்கிறதே என்று அவன் கேட்க… குடும்பச் சொத்து அது என்று அவள் சொல்லிச் சிரிக்க, அவளின் பின்னணியில் ஏதோ ஒரு சோகம் உள்ளதை அங்கே கவிஞர் கோடிடுகிறார்.
அடுத்தடுத்த காட்சிகளில் அவள் தன் குடும்பத்தைப் பற்றிச் சொல்கிறாள்.. அநாதையாக விடப்பட்ட பெண் தான் என்றும், சித்தியின் தயவில் வளரும் சோக நிலையையும் புரிய வைக்கிறாள். அவன் மனம் அங்கே இரங்கித் தவிக்கிறது.
மாநகரப் பேருந்தின் பயணங்களில் எத்தனையோ காட்சிகள் தினந்தோறும். அதில் ஒரு காதல் ஜோடிக்குள் என்ன வார்த்தைப் பரிமாறல் இருக்கும் என்பதை ஒரு பஸ்பயண பிரேக் காட்சியில் காட்டுகிறார். மறுநாள் பஸ் பயணம். இடையில், அலுவலகம் வா என அழைத்தேன். வரேன் என்றாய். விளையாட்டுக்கு என்றேன். சீரியஸ் என்றாய். எழுந்தேன். நீயும் எழுந்தாய். பஸ் பிரேக் போட்டதில் நீ என் மார்பில் விழுந்தாய். என் கால் உன் செருப்பினடியில் மாட்டிக் கொண்டது. கத்தினேன். பஸ்ஸே திரும்பிப் பார்த்தது என்று காட்சிப் படுத்துகிறார்.
கவிதைப் புத்தகம் வழங்கலும் வார்த்தைப் பரிமாறல்களுமாய் சென்ற சிநேகம், திடீரென ஒரு நாள் வாடா போடா என்ற அவளின் ஒருமைப் பேச்சில் தொடர… அங்கே நட்புறவின் நெருடலை நாமும் உணர்கிறோம்.
ஓட்டலில் ஒன்றாகக் காபி குடித்தல், எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்ற அவளின் திடீர் தாக்குதல், அதற்கு அவனின் பதில், இரவில் செல்பேசியின் செல்லச் சிணுங்கல்.. உனக்குக் கல்யாணம்னா எனக்கு என்ன? உனக்கு என்ன வேண்டும்? என்ற அவனின் கேள்விக்கு, எனக்கு நீதான் வேண்டும் என்று ஒற்றை வாக்கியத்தில் அவள் சொன்ன பதிலால் தூக்கம் கெடல்… என்று காட்சிகள் நகர்கின்றன.
மறுநாள் மௌனப் போராட்டம். பின்னர் பீச்சுக்குப் போலாமா என்ற கேள்வி! அவித்த வேர்க்கடலையுடன் பேச்சு… அடுத்தது சினிமா, பரிசுப் பொருள் பரிமாறல் என்று தொடரும் வழக்கமான காதல் காட்சிகள்.
மணிக்கணக்கில் நீளும் செல்போன் பேச்சுகள்… பஸ்ஸில் புறப்பட்டது முதல் வீட்டுக்குச் சென்று குளித்து சாப்பிட அமர்ந்தது வரை எனத் தொடரும் பேச்சு.
– இவற்றைக் காட்சிப் படுத்தும் விதம், திரைக்கதையாக நம் மனக்கண்ணில் விரிகிறது.
டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு குறித்து அவன் எழுதிய கவிதையை அவள் சிலாகித்துச் சொல்ல… அவனுக்குள் ஒரு கிறுகிறுப்பு..! கவிஞனாயிற்றே! அவன் விரும்பும் அவளே பாராட்டினால்..!
மழைநாளில் ஒற்றைக் குடையில் நனைந்தபடி செல்லும் காட்சியில் அவளின் பேச்சு…
ஒருநாள், “நீ கல்யாணம் பண்ணிக்கக் கூடாதா?” என்று அவன் கேட்டபோது, ‘என் சுதந்திரம் பறிபோகும்” என்ற அவளின் பதில்..! இங்கேதான் இருவரின் எண்ணமும் ஒரே புள்ளியில் மையம் கொள்வது அவனுக்குத் தெரிகிறது.
இருவரும் மகாபலிபுரம் போகிறார்கள். பிச்சைக்காரன் ஒருவன் வருகிறான். அவள் பிச்சை போடாமல், “எங்க ஆபீஸில் வாட்ச்மேன் வேலை காலி.. நீ வருகிறாயா” என்று கேட்க அவன் நகர்ந்தான் என்ற படி ஒரு பிச்சைக்காரனின் மன இயல்பை காட்சிப் படுத்துகிறார்.
கவிதைத் தொகுப்புகள் குறித்த பேச்சும், மண்டையில் கொட்டு வைத்தலும் என அவளின் செல்லச் சிணுங்கல்களைக் காட்டும் கவிஞர், அவள் தனது பேஸ்புக் கவிதையை ரசித்த விதத்தையும், ஒரு முறை தங்களுக்கு இடையிலான உறவு காதலா? நட்பா? என்ற கேள்விக் கணைக்குள் சிக்குவதை அவன் உணர்வையும் கூறுகிறார்.
அவளிடம் அவன் இதைக் கேட்க, அவளும் அதையே சொல்கிறாள். தங்கைகள் கல்யாணம் முடியணும்; குடும்ப பாரம் இருக்கு. பின்னர் பார்க்கலாம் என்கிறாள்.
அவளின் ஒரே துணை சித்தப்பா இறந்து போனதும் அவனை வீட்டுக்கு அழைத்து உதவச் சொன்னதும்… இப்படியாக நகரும் காட்சி ஒரு கட்டத்தில் நிறைவை சந்திக்கிறது.
அப்போது அவன் சொல்கிறான்…
ஒருதலைக் காதலில் இருக்கும்
வலியை விட
இருதலைக் காதலில் இருக்கும் வலி
அதிகம்…
காதலித்துப் பழகி, பலர் இல்லை இல்லை… நட்புதான் இது! என்று கழற்றிவிடும் நாளில், ஆமாம்.. நானும் காதலித்தேன் எல்லாமே காதலை மையமாகக் கொண்டுதான் என்று சொல்லிவிட்டு, கடமை என்று கைவிட்டுச் செல்லும் அவளை நினைத்துக் கொண்டே நாளைக் கடத்தலாம் என்று அவன் இருக்க…
ஒருதலையாய்க் காதலித்துப் பிரிந்தவன் ரணத்தை விட, இருதலையாய்க் காதலித்துப் பிரிந்தவர் ரணம்… சொல்லி மாளாது என்று அவன் தேற்றிக் கொள்கிறான்.
சென்ட்ரல்… மையம் கொள்கிறது காதல்.. விட்டுப் பிரியும் காதலி… முதல் முறையாகக் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுகிறாள். ரயில் நகர்கிறது.
ரயில் பயணத்தில் இருவராய் பயணம் செய்யத் தொடங்கி ரயில் நிலையத்தில் ஒருவராய் ஊருக்கு ஏற்றி விடும் அந்தக் காட்சியில் உண்மையாய்க் காதலித்தவன் வேதனை உள்ளத்தில் வெளிப்படுகிறது.
ஆணோ, பெண்ணோ.. கடமை என்று வரும்போது, காதலுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா என்ற சிந்தனையை கவிஞர் விதைக்கிறார்.
ஒற்றை வரியில் சொல்லி விடலாம்தான் இந்தக் காதல் கதையை. ஆனால், கவிதையின் வீச்சும், இரு உள்ளங்களின் பேச்சும் ரசனை உள்ளோருக்கு அற்புத அனுபவத்தைத் தருகிறது. காதல் – ஓர் அனுபவம். அதை அனுபவித்தவர்க்கே அதன் வலிவும் வலியும் தெரியும். இரு உள்ளங்களில் எழும் எண்ணங்களின் இணைப்பு காதலாகத் துளிர்விடும்போது, அது கல்யாணத்தில் முடிந்தால் வெற்றி என்றோ, பிரிவில் முடிந்தால் தோல்வி என்றோ சொல்ல இயலாது. ஒருவருக்கு ஒருவர் உண்மையாக நேசிக்கும் உள்ளக் கலப்பே காதல்தான். கவிஞர் கோபால்தாசனின் இந்தக் கவிதைத் தொகுப்பும் இதனை ஆழமாகப் பதியவைத்துவிடுகிறது.
நண்பர் கோபால்தாசனுக்கு வாழ்த்துகள்.

அன்பன்,

செங்கோட்டை ஸ்ரீராம்

(பத்திரிகையாளர் – எழுத்தாளர்)
- Advertisement -
- Donate via PayTM -
Tamil Dhinasari News..! We are in the path of protecting our Hindu dharma! Please consider supporting us to run this Tamil web portal continuously.
-Advertisement-

சினிமா:

-Advertisement-
-Advertisement-
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you

%d bloggers like this: