திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரத்தில், சின்னசாமி ஐயருக்கும் லக்ஷ்மி அம்மாளுக்கும் 1882-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி பிறந்த சுப்பிரமணியன் தன்னுடைய 11-ஆவது வயதில் எட்டயபுரம் சமஸ்தானத்த்துப் புலவர்கள் கூடிய சபையில், தன்னுடைய கவிபாடும் திறமைக்காகப் “பாரதி” என்கிற பட்டத்தைப் பெற்றார்.
பின்னர் 1898-ஆம் ஆண்டு அவருடைய ததையார் காலமான பிறகு அவருடைய அத்தை குப்பம்மாள் என்கிற ருக்மிணி அம்மாள் மற்றும் அவரின் கணவர் பிரம்மஸ்ரீ கிருஷ்ணன் சிவன் ஆகியோரின் ஆதரவில் காசி மாநகரில் 1902-ஆம் ஆண்டு வரை கல்வி கற்று வளர்ந்தார்.
அதன் பின்னர் எட்டயபுரம் மன்னரின் அழைப்பின் பேரில் மீண்டும் தமிழகம் வந்த சுப்பிரமணிய பாரதி, சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, தன் பாட்டுத் திறத்தினால் விடுதலைத் தீயை நாடெங்கும் பரப்பினார். நாட்டு மக்களின் பேராதரவைப் பெற்று மஹாகவி சுப்பிரமணிய பாரதியாராகத் தமிழகத்திலும் பாண்டிச்சேரியிலுமாகத் தன் வாழ்நாளை விடுதலைப் போராட்டத்திலும் பத்திரிகை உலகிலும் கழித்தார்.
இறுதியாக மூன்று வாரங்கள் ஆங்கிலேயரால் சிறைப்பிடிக்கப்பட்ட பாரதியார், சிறையிலிருந்து விடுதலை ஆன பிறகு, சில நாட்கள் நோய்வாய்ப்பட்டு, தன்னுடைய 39-ஆவது வயதில் 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் உயிர் நீத்தார்.
1902-ஆம் ஆண்டு காசியிலிருந்து எட்டயபுரம் மன்னருடன் தமிழகம் திரும்பினாலும், அதன் பிறகு அவர் காசிமாநகருடனான தன்னுடைய தொடர்பை விட்டுவிடவில்லை. அவ்வப்போது அங்கே போய் வந்து கொண்டிருந்தார். ஆகவே, பாரதியாரின் வாழ்வில் காசி மாநகரம் ஒரு பெரிய பங்கை ஆற்றியுள்ளது.
பாரதியார் கல்வி கற்றதும், அவருக்குள் தேசபக்தி கனலாக எழுந்ததும், தேச விடுதலை, சமூகச் சீர்திருத்தம், பெண்கள் முன்னேற்றம் போன்ற கருத்துருவாக்கங்கள் ஏற்பட்டதும் காசி மாநகரில்தான். தேசத் தலைவர்கள் பலரை அவர் சந்தித்ததும் அங்கே தான். ஹிந்தி, சம்ஸ்க்ருதம் போன்ற பல மொழிகளை அவர் கற்றதும் அங்குதான். ஆகவே, பாரதியார் காசியில் வாழ்ந்த நாட்களைப் பற்றி அறிந்துகொள்வது நன்மை பயக்கும்.
நான் சமீபத்தில் (ஜூலை 14 முதல் 23 வரை) என் அருமை நண்பர் திரு.ஜெயகுமார் ஸ்ரீனிவாசன்குடும்பத்தினருடன் காசி யாத்திரை மேற்கொண்ட போது, காசியில் உள்ள பாரதியாரின் இல்லத்திற்குச் சென்று அங்கே இருக்கும் அவருடைய உறவினர்களைச் சந்தித்தேன். மதிப்பிற்குரிய நண்பர் இசைக்கவி ரமணன் மற்றும் அவருடைய மனைவி திருமதி அனுராதா ரமணன் ஆகியோரின் ஆலோசனைப்படி, பாரதியாரின் மருமகன் பேராசிரியர் திரு.கிருஷ்ணன் சிவன் அவர்களைச் சந்தித்துப் பேட்டியும் கண்டேன். என்னுடன் என் நண்பர் திரு.ஜெயகுமார் ஸ்ரீனிவாசனும் பேட்டியில் கலந்துகொண்டார். காமிராவில் வீடியோவும் புகைப்படங்களும் எடுத்தது அவர் தான். பாரதியாரின் மருமகன் பேராசிரியர் கிருஷ்ணன் சிவன் பாரதியாரின் காசி வாசம் பற்றிப் பல விஷயங்களையும் தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்.

நமஸ்காரம். உங்களுக்கும் மஹாகவி பாரதியாருக்குமான உறவு முறை பற்றிச் சொல்லுங்களேன்
என் பெயர் .கிருஷ்ணன். என் தந்தையார் கேதார்நாத் சிவன். என் தாயார் லக்ஷ்மி அம்மாள் பாரதியாருடைய தங்கை. பிரம்மஸ்ரீ கிருஷ்ண சிவன் என்னுடைய தாத்தா. அவருடைய மனைவியான என் பாட்டி ருக்மிணி அம்மாள், பாரதியாரின் சொந்த அத்தை ஆவார். என் தாயார் லக்ஷ்மி அம்மாள் தந்தை கேதார்நாத் சிவன் திருமணம், பாரதியார் (14) செல்லம்மாள் (7) திருமணம், என் பெரியப்பா சுஜி விஸ்வநாத சிவன் செல்லாம்மாளின் அக்கா பார்வதி திருமணம் ஆகிய மூன்று திருமணங்களும் ஒரே நாளில், அதாவது 1887-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27-ஆம் தேதி நடந்தன. இந்தத் திருமணங்களை மகாராஜா இராமநாதபுரம் சேதுபதி அவர்களுடைய பிரதினிதிகள் வந்து நடத்திக்கொடுத்தார்கள்.
ஏனென்றால் எங்கள் குடும்பமானது, அதாவது எனது தாத்தா க்ருஷ்ண சிவன் அவர்களின் தகப்பனார் மீனாட்சி வல்லபர், பாரதியாரின் தாத்தா சிவலிபுலி சுப்பய்யர் (புலி சுப்பய்யர் என்று அழைப்பார்கள்), ஆகியோர் அந்தக் காலகட்டத்தில் சத்துணவுக்கூடங்கள் நடத்திக்கொண்டு இருந்தார்கள். இராமேஸ்வரம் போகும் யாத்ரீகர்களுக்கெல்லாம் தொடர்ந்து அன்னதானம் செய்து கொண்டிருந்தார்கள். அதனால் ராமநாதபுரம் சேதுபதியின் பிரதினிதிகள் வந்திருந்து மூன்று கல்யாணங்களையும் நடத்திக்கொடுத்தார்கள்.
உங்கள் குடும்பத்தினர் எப்போது, எதனால் காசிக்குக் குடி பெயர்ந்தார்கள்?
அப்போது, எங்கள் தாத்தா மற்றும் அவருடைய அப்பா காலத்தில், எங்களுக்கு நிறைய வயல்கள் இருந்தன. எட்டையாபுரத்திலிருந்து தூத்துக்குடி போகும் வழியில் ஒரு சின்ன கிராமம் மாகுளம். அதில் 12 மனைகள் எங்களுடையது. குளம், கிணறு எல்லா வசதிகளும் இருந்தன. வயல்கள் இருந்தன. திடீரென்று 1857- 1858களில் வயல்கள் எல்லாம் உலர்ந்து போய் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு வறட்சியானது. அப்படிக் கஷ்டப்பட்ட காலத்தில் மீனாட்சி வல்லபரோட அண்ணா கேதார் வெங்கடேஸ்வர சிவன் என்பவர் பிரம்மசாரியாக இருந்தார். அவர் காசிக்கு மாட்டு வண்டியில் ஏறிக்கொண்டும் கால்நடையாகவும் எப்படியோ வந்து சேர்ந்தார். ப்ரிட்டிஷார் காலத்தில் ஏதோவொரு பாசஞ்சர் இரயில் தான் செல்லுமாம். எப்படியோ ஒரு வழியாக வந்து சேர்ந்தார்கள்.
உங்கள் முன்னோர்கள் இங்கே வந்தபோது கட்டிய வீடுதானா இது?

ஆமாம். நிறைய பணம் இருந்தது அவர்களிடம். இங்கேயே நாலு இடத்தில் சின்ன சின்ன மனை வாங்கிக் கட்டினார்கள். ஆங்கிலேயர் காலத்தில், வீடு கட்டினால் அந்த இடத்தில் ஒரு கோவிலையும் கட்டிப் பூஜை நடந்தால் தான் வரி விலக்கு என்று ஒரு கட்டளை இருந்தது. ஆகையால் வீட்டுடன் சேர்த்துச் சிறிய கோவிலையும் கட்டி, “சிவமடம்” என்று பெயர் வைத்தார். அப்போது அவர் என்ன செய்தார் என்றால் சித்தேஸ்வரன், சித்தேஸ்வரி என்று இரண்டு மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்தார்.
வாருங்கள் கோவிலைப் பார்ப்போம்
(அந்த வீட்டின் பெரிய கூடத்தில் இடது பக்கம் அமைக்கப்பட்டுள்ளது அந்தச் சிறிய கோவில் போன்ற சன்னிதி. அம்பாளுக்கு சித்தேஸ்வரி என்றும் ஸ்வாமிக்கு சித்தேஸ்வரர் என்றும் நாமகரணம் சூட்டியுள்ளனர். சன்னிதிக்கு வெளியே முதுகில் சர்ப்பத்துடன் கூடிய நந்தி உள்ளது)

சிருங்கேரி மடத்துப் பெரியவா சந்திரசேகர பாரதி ஸ்வாமிகளிடம் எங்கள் அப்பாவிற்கு நல்ல அறிமுகம் உண்டு. அந்த காலத்தில் அவர் பால்யத்தில் ஆச்சார்யப் பதவிக்கு வந்தபோதிலிருந்து அறிமுகம். அவர் இந்த வீட்டிற்கு வந்து இந்தக் கோவிலில் பஞ்சாக்ஷரப் பிரதிஷ்டை பண்ணியிருக்கிறார்.
நாங்களெல்லாம் முதலில் சிருங்கேரி மடத்து சிஷ்யர்களாக இருந்தோம். அப்புறம் 1934க்குப் பிறகுதான் காஞ்சி மடத்து சிஷ்யர்களாக ஆனோம். 1934ல் காஞ்சிப் பெரியவர் இங்கு வந்தார். பாதபூஜை, பிக்ஷை எல்லாம் இந்த வீட்டில் நடந்தது. அப்போது இந்த அம்பாளுக்குக் காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை பண்ணி வைத்தார்.

இது தான் சித்தேஸ்வரப் பிரதிஷ்டை உள்ளே கிரமப்படி, நடராஜர், சிவகாமி, ரஜத கணபதி, மந்திரலிங்கம் ஆகியவை இருக்கின்றன. இப்படி நந்திகேஸ்வரர் மேல் நாகர் இருப்பது போன்ற காட்சியை நீங்கள் எங்கும் பார்க்க முடியாது. காசியில் கூட எங்கும் பார்க்க முடியாது. அவ்வளவு அழகாகச் செய்து வைத்திருக்கிறார்கள். இதன் தாத்பரியம் என்னவென்றால் சிவனும் பார்வதியும் ஒன்றாக இருக்கும் போது நாகர் ரகசியமாக வெளிவந்து விடுகிறார் என்று பெரியவா சொல்லிப் புரிந்து கொண்டிருக்கிறேன்.
வைகாசி மாதம் கங்கா தசரா திருவிழாவின்போது த்ரிதியை தினத்தன்று தான் அம்பாள் பிரதிஷ்டை நடந்தது. பஞ்சமி திதியன்று சுவாமியின் பிரதிஷ்டை. நாங்கள் அந்தக் காலத்தில் உற்சவம் நடத்தும்போது ஊரில் இருக்கும் எல்லா பக்தர்களையும் அழைத்து அவர்களுக்குப் பிரசாதம் கொடுத்து மரியாதை செய்வோம். சங்கீத வித்வான்கள் யார் வந்தாலும் அவர்களுக்கும் மரியாதை செய்வோம். பஜனைகள், பததி, சங்கீத ரூபத்தில் தான் செய்வோம். அப்படியெல்லாம் மகிமையாக பூஜைகள், பஜனைகள் என்று விமர்சையாக நடந்து கொண்டு இருந்தது.
மஹாபெரியவா வந்தபோது அம்பாளுக்கு ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்தார் என்று சொன்னேன் அல்லவா? அப்போது, பெரியவா எனக்குப் பூணல் போடச் சொல்லி உத்தரவு கொடுத்தார். அதன்படி எங்கள் அப்பா உடனே எனக்குப் பூணல் போட்டார். அப்புறம் 1957ல் எங்கள் அப்பா இங்கே கும்பாபிஷேகம் செய்தார். இதன் மூலம் 1957லிருந்து இந்த கோவிலில் பூஜை நடந்து வருகின்றது என்பது உறுதி ஆகின்றது. அடுத்த கும்பாபிஷேகம் இனிமேல்தான் நடக்கணும்.
எங்கள் குடும்பத்தில் எல்லோருமே சங்கீத வித்வான்கள். நான் மிருதங்கம் வாசிப்பேன்.நான் 1942லிருந்து மிருதங்கம் வாசித்து கொண்டிருக்கிறேன். செம்பை வைத்தியநாத பாகவதரிலிருந்து, காசிக்கு வரும் பெரிய பெரிய வித்வான்களுக்கு எல்லாம் வாசித்திருக்கிறேன். கடைசியில் A. சுப்ரமணியம் வந்திருந்தார் ஒரு 4 வருடங்களுக்கு முன்னால் அவரோடு ஒரு சபை பண்ணினோம். நான் தமிழ்ச்சங்கத்தின் பிரதிநிதி என்கிற முறையில் சபாபதியாக உட்கார்ந்தேன். அப்போது, “மாமா நீங்க எனக்கு வாசிக்கணும்” என்றார். அப்புறம் பாண்டிச்சேரியில் சென்று கடைசிக் கச்சேரி செய்தேன்.
நான் தனியாக இருந்ததால் குடும்பத்தைக் காப்பாற்ற உத்யோகம் சென்று விட்டேன். பனாரஸ் பல்கலைக் கழகத்தில் M.Com படித்துவிட்டு அங்கேயே வேலைக்குச் சென்றேன். மதன்மோகன் மாளவ்யாஜி ஒரு செளகரியம் செய்து வைத்திருந்தார். அது என்னவென்றால் படிக்கும் போதே வேலை செய்யலாம். அப்படிப் படித்துக்கொண்டே வேலையில் இருந்தேன். பின்னர் அங்கேயே தொடர்ந்து ஒரு பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றேன். மிருதங்க வித்வானாக percussaion departmentக்கு பொறுப்பாக இருந்து 1988ல் ஓய்வு பெற்றேன். எனக்கு இப்போது 91 வயதாகிறது.
பாரதியார் முதல் முறை எப்போது காசிக்கு வந்தார்? அப்போதைய குடும்பச் சூழ்நிலை எப்படி இருந்தது?

1898ம் வருஷம் எங்கள் தாத்தா சின்னசாமி அய்யர், அதாவது பாரதியாரின் தகப்பனார், இறந்த சமாச்சாரம் கேட்டு எங்கள் பாட்டி ருக்மணிஅம்மாள் (சின்னசாமியின் அக்கா) இங்கேயிருந்து எங்கள் பெரியப்பாவைக் கூட்டிக்கொண்டு எட்டையபுரம் சென்று செய்யவேண்டிய இறுதிச்சடங்குகளை முடித்துவிட்டு பாரதியார், எங்கள் அம்மா, பாட்டி, பாகீரதி பாட்டி(பாரதியாரின் பாட்டி) எல்லோரையும் கூட்டிக்கொண்டு காசிக்கு வந்தார். அப்போது பாரதியாருக்கு வயசு 16.
பாரதியார் இங்கேயே தங்கி கல்வி கற்றாரா? பள்ளி, கல்லூரியில் படித்தாரா?
எங்கள் தாத்தா இங்கேயுள்ள ஜெய நாரயண் இண்டெர் காலேஜில் 9ம் வகுப்பில் பாரதியாரைச் சேர்த்து விட்டார். எங்கள் அப்பாவும் சேர்ந்து படித்தார். 9 மற்றும் 10-ஆம் வகுப்புகள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அன்னி பெஸண்ட் அம்மையாரின் மத்திய ஹிந்து கல்லூரியில் (Central Hindu College) 1900-ஆம் நுழைவுத் தேர்வு எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அந்த நுழைவுத் தேர்வை நடத்தியது அலஹாபாத் பல்கலைக்கழகம், பிறகு மத்திய ஹிந்து கல்லூரி பனாரஸ் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமாகி விட்டது.
பாரதியார் இங்கே அன்னி பெஸண்ட் அம்மையார், மதன்மோகன் மாளவ்யா போன்றவர்களைச் சந்தித்துள்ளார் என்று படித்திருக்கிறோம். அதைப் பற்றிச் சொலுங்களேன்.
பாரதியார் இங்கே மத்திய ஹிந்து கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் தான் மதன்மோகன் மாளவியா அவர்கள் பல்கலைக்கழகம் (Benares Hindu University) கட்டுவதற்கு எல்லோர் இடத்திலும் வீடு வீடாகப்போய், நிதியுதவி கேட்டுக்கொண்டிருந்தார். ராஜாக்களிடம் பிச்சை எடுத்து இந்த ஒரு புண்ணிய காரியத்தைச் செய்தார். அவர் அலஹாபாத்தைச் சேர்ந்த பிராம்மணர். வக்கீலாக இருந்தார். காங்கிரஸிலும் உறுப்பினராக இருந்தார்.
பாரதியார் தினமும் மாலை சுமார் 4 மணிக்கு தியாசாபிகல் சொசைட்டிக்கு போவார். அது இவர் படித்த பள்ளியிலிருந்து ஒரு பர்லாங்க் தூரத்தில்தான் இருந்தது. அங்கிருந்த நூலகத்தில் ஷேக்ஸ்பியர், ஷெல்லி, பைரன், வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் போன்ற ஆங்கில எழுத்தாளர்கள், கவிஞர்கள் நூல்களையெல்லாம் படித்துக்கொண்டு இருப்பார். அங்கே அவர் தலைப்பாகைக் கட்டிக்கொண்டு, கருப்புக் கோட்டு போட்டுக் கொண்டு, வேஷ்டி கட்டிக்கொண்டு அடிக்கடி வருவதை அன்னி பெஸண்ட் அம்மையார் பார்த்துள்ளார்.

ஒரு நாள் அவ்வாறு நூலக வளாகத்தில் நடந்து வரும்போது திடீரென்று ஜன்னல் வழியாகப் பாரதியாரைப் பார்த்துவிட்டு, இந்தப் பையன் தினம் வருகிரானே என்று எண்ணி, “இங்க வா? நீ யார்?” என்று கேட்டார்கள்.
“நான் சுப்ரமணிய பாரதி. ஹனுமான் காட்டில் என் அத்தை இல்லத்தில் இருக்கிறேன். எனக்கு பெரிய கவிகள் பற்றியும், வரலாற்று ஆராய்ச்சியாளர்களைப் பற்றியும் , நாடககாரர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஆசை. அப்புறம் தேசத்திற்காகவும் ஏதாவது செய்யலாம் என்கிற ஆசையும் மனதில் இருக்கிறது. ஆங்கிலேயர் செய்வதெல்லாம் பிடிக்கவில்லை. எப்படி அவர்களை விரட்டுவது என்கிற சிந்தனையும் உள்ளது. அவர்களை விரட்டுவதற்கு நான் 9ம் வகுப்பிலிருந்தே 8 மாணவர்களை வைத்துக்கொண்டு ஒரு இளைஞர் காங்கிரஸ் (youth congress) அமைப்பை நடத்தி வருகிறேன். அதற்கு நான் தான் தலைவனாக இருக்கிறேன். அதில் எங்களுடைய திட்டம் என்னவென்றால், எப்படி ஆங்கிலேயனைத் திசை திருப்புவது என்பது தான். அவனுடைய சொந்தப் பொருட்களில் எதை நஷ்டம் செய்தால் அவன் அதை உணர்வான் என்று செயல்பட வேண்டும். நாம் பயத்தைக் காட்ட கூடாது. முதல் அடி வைத்துவிடவேண்டும். First hit and then defend என்கிற வழிமுறை தான் சிறந்தது.” என்று விவரமாகப் பதில் கூறியுள்ளார். அதைக் கேட்ட அன்னி பெஸண்ட் அம்மையார் மிகவும் இம்ப்ரஸ் ஆகிச் சிரித்துக்கொண்டார்.
பாரத தேசம் என்று பெயர் சொல்வார், மிடிப் பயங்கொல்லுவார், துயர்ப் பகை வெல்லுவார், என்கிற பாடல் இந்த எண்ணத்திலிருந்து வந்த கவிதை தான்.
அப்புறம் இவர் பெசண்ட அம்மையாரிடம், “நான் மதன்மோகன் மாளவியா அவர்களைச் சந்திக்கவேண்டும். எப்படி ஒரு ஏழை பிராம்மணர் இவ்வளவு பெரிய காரியம் செய்கிறார் என்று தெரிந்து கொள்ளவேண்டும்” என்று கூறினார்.
பெசண்ட் அம்மையாரும் மாளவியா பற்றி பாரதிக்குச் சொல்லி, அவரைச் சந்திக்கப் பாரதியாருக்கு நேரம் வாங்கிக் கொடுத்தார். பாரதியாரும் மாளவியாவைச் சந்திக்கச் சென்றார். மாளவியா பாரதியாரைப் பார்த்து, “நீ யாருப்பா?” என்று வினவி இருக்கிறார்.
அப்போது பாரதியார், “நான் ஒரு சரஸ்வதி பூஜை அன்று உங்களைப் பற்றிப் பேசலாம் என்றிருக்கிறேன். நீங்கள் வித்யயைப் பிரதானமாகக் கொண்டு செல்வதால் நீங்கள் சரஸ்வதியைத் தான் முக்கியமாக வைத்துக்கொள்ளவேண்டும்” என்று சொல்லிவிட்டுத் திரும்பி வந்துவிட்டார்.

1899-ல் சரஸ்வதி பூஜை வந்தபோது சீதாராம் சாஸ்திரி தலைமை தாங்கினார். இன்னும் வித்வான்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் எங்கள் தாத்தா, “பாரதி! சரஸ்வதி பற்றி ஏதாவது நாலு வார்த்தை சொல்லுடா; உனக்குத்தான் எல்லா பாஷையும் தெரியுமே! உன்னால் முடிந்தால் இரண்டு மூன்று பாஷையில் கூடச் சொல்லு” என்றாராம். அப்போது பாரதி இந்தியிலும் இரண்டு வாக்கியம் சொன்னாராம். தமிழிலும் சொன்னாராம். அதில் தான் அவர், “வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள். வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்” என்று கூறியுள்ளார். அந்தப் பாடலை இந்த சன்னிதானத்தின் படியில் அமர்ந்துதான் compose பண்ணினார். அதனுடைய கடைசி பத்தியில் தான், “நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்! நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்! அதுவும் அற்றவர் வாய்சொல் அருளீர்” என்றாராம். சரஸ்வதி பற்றிப் பேசும்போது இது எதற்கு என்று கேட்டார்களாம். அப்பொழுது பாரதி, “சரஸ்வதியை மையமாக வைத்துக்கொண்டு ஒரு ஏழை பிராம்மணன் மாளவியா என்கிற மகான் செய்யும் காரியத்தைப் பற்றி அங்கு சென்று சொல்லப்போகிறேன்”, என்றாராம்.
நல்லது. மதன் மோகன் மாளவியாவை பாரதியார் சந்தித்தது பற்றிச் சொல்லுங்கள்
சொல்கிறேன். அப்புறம் அடுத்தப்படியாக மாளவியாவை நேரில் பார்த்தபோது, “காசியில் ஹிந்து சர்வகலாசாலா சங்கம் கட்டும்போது பல மாளிகைகள் ஹிந்து சிற்பக்கலைப்படி இருக்கவேண்டும். நவீன பாடசாலைக்கு உரிய லட்சணங்கள் குறையக்கூடாது. ஆனால் சிற்பத்திருமேனி சுதேசி விஷயமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு கட்டிடத்தின் மேலும் கோபுரம், அதன் மேல் சிகரங்கள் என்று இருக்கவேண்டும். அந்தச் சிகரங்களைப் பார்த்த மாத்திரத்திலேயே மாணவர்களுக்கு நம் தேசத்தின் பண்பாடு என்ன, நம்முடைய கலாச்சாரம் என்ன என்று தெரியவேண்டும், புரிந்து கொள்ளவேண்டும். சிற்பிகளில் தமிழ்நாட்டு ஸ்தபதிகள் முக்கியமானவர்கள் வங்கத்திலே ஏற்பட்ட மகா கீர்த்தியுடன் சோபிக்கும் நவீன சாஸ்திரங்களின் நாயகராகிய ரவீந்தரநாத் தாகூரின் சகோதரர் அபனீந்திரநாத் தாகூர் அவர்கள் தமிழ்நாட்டிலும் பல உயர்ந்த ஸ்தபதிகள் இருப்பதாக புகழ்ந்து பேசி இருக்கிறார். அவர்களைக் கூப்பிட்டு நீங்கள் செய்யலாம்”, என்று சிபாரிசு செய்கிறார். தமிழ் ஸ்தபதிகளை கூப்பிட்டுச் செய்யவேண்டும் என்கிற யோசனை வந்ததே பாரதியினுடைய பெரும் நோக்கத்தை காண்பிக்கிறது. மாளவியாவும் அதைச் சரி என்று ஏற்றுக்கொண்டுள்ளார். இப்போதும் நாம் சென்று பார்த்தோமானால் ஒவ்வொரு கட்டிடத்தின் மேல் கூரையிலும் கோபுரம் கட்டி சிகரம் வைத்துள்ளதைப் பார்க்கமுடியும். இது பெரிய மகத்துவம் இல்லையா?

இந்த பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் கட்டி முடிக்கும் வரை பாரதி இருந்தாரா?
இருந்தார். தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் போய் வந்துகொண்டிருந்தார். 1916ல் பனாரஸ் பல்கலைக்கழகம் கட்டி முடித்து விட்டார்கள்.
பாரதியாருடைய ‘வெள்ளைத்தாமரை பூவில்’ என்கிற கவிதை மதுரையில் இருந்து வந்துகொண்டிருந்த ‘ஞான பானு ’ என்கிற இதழில் வெளிவந்தது. அப்பாடலின் விளக்கத்தை பாரதியார் சுதேசி மித்திரன்பத்திரிகையில் கட்டுரை வடிவில் வெளியிட்டார். அதை இங்கேயும் அனுப்பி வைத்தார். அதைப் பார்த்து இங்கே அனைவரும் சந்தோஷப்பட்டார்கள். அதன் பிறகு 1905-ல் மாளவியாவே இவரை அழைத்தார். பாரதியார் வந்தவுடன் மாளவ்யாஜி அவரிடம், “சுதேசி மித்திரனில் சேர்ந்துவிட்டாய் என்று கேள்விப்பட்டேன். சந்தோஷம்” என்றார்.




சிஙà¯à®•தà¯à®¤à®®à®¿à®´à®©à¯ சிறபà¯à®ªà¯à®•ள௠நினைகà¯à®• நினைகà¯à®•த௠தெவிடà¯à®Ÿà¯à®µà®¤à®¿à®²à¯à®²à¯ˆ; படிகà¯à®•ப௠படிகà¯à®•த௠தெவிடà¯à®Ÿà¯à®µà®¤à®¿à®²à¯à®²à¯ˆ !