இ்லக்கிய வேந்தன் நா.ஆண்டியப்பனின் ‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் வெளியீடு நேற்று உமறுப் புலவர் தமிழ் அரங்கில் இடம்பெற்றபோது, ஒர் இலக்கிய மாநாடு நடந்து முடிந்த களை கட்டியது. காரணம், நிகழ்ச்சியில் பேசிய பெருமக்கள் ஒவ்வொருவரும் நூலில் இடம்பெற்ற கதைகளை தங்கள் பாணியில் இலக்கிய நயத்தோடு பார்த்த பார்வை!
தலைமை தாங்கிய நம் ஆசான் முனைவர் திண்ணப்பன், நாடகம், சுயசரிதம், கவிதை என்ன அனைத்தையும் தொட்ட ஆண்டியப்பன் அவர்களின் எழுத்தாழத்தை அழுத்தமாக உணர்த்தினார். பாரதியின் பாஞ்சாலி சபதத்தை எளிய நாடகமாக்கிய துணிவைப் பாராட்டினர். கம்பனின் காவியத்தில் துன்பவியல் பாத்திர ராமனை வெற்றித் திருமகனாகக் காட்டியதை வியந்தார். நூலாசிரியரின் சொந்த ஊர் ராங்கியம், ராஜலிங்கமங்கலமாக இருந்து பின் கரைந்து சுருங்கி ராங்கியமாக நிற்பதை செய்யுள் வரிகளோடு உணர்த்தினார். சிறுகதைகளின் உள் சிறப்புகளையும் சுருங்கச் சொல்லத் தவறவில்லை நம் இலக்கிய மணி.
உயிரியல் படித்து உயர் போதனைத் துறையில் ஈடுபட்டிருக்கும் முனைவர் இளவழகன் முருகன், உயிரினும் மேலான தமிழுக்கும் நேரம் ஒதுக்கி , சிங்கையின் தமிழ் வளர்ச்சிக்குத் தன் பங்கை செலுத்துபவர். அவரது இதிகாச, சரித்திர நாடகங்கள் இன்று நம் மேடைகளில் அரங்கேறி வருகின்றன. அன்னார் நூலை ஆய்ந்தார். அழகாகவே ஆய்ந்தார்.
சிறுகதை சிறியதாகத் தான் இருக்க வேண்டும்-வார்த்தையை சுருக்கு, நீ நினைத்ததை எழுது என்ற மென்மொழியுடன் தொடங்கிய இளவழகன், 12 கதைகளில் காப்பியக் கதைகள், விலங்கின உருவகம் ஆகிய கதைகள் அல்லாத மற்றவை மனிதம் பற்றிய கதைகள் எனக் கூறினார், அதனை செம்மைப் படுத்தும் விதத்தில் கதை மாந்தர்கள், எழுத்தமைப்பு, எளிமை, புரிதல் போன்ற அம்சங்களைப் புரியும்படி விளக்கினார்.
இந்து அறக் கட்டளை வாரியத் துணைத் தலைவரும், சிங்கப்பூர் தமிழ் மேடைகளில் புதிய விழிப்புணர்வைத் தந்து வரும் ஆர்வலருமான இரா.தினகரன் அவர்கள் நூலை நன்கு படித்து வந்ததோடல்லாமல், ஆசிரியரிடம் சில விளக்கக் கேள்விகளையும் கேட்டார். சிங்கப்பூர் கலாச்சாரம், இன ஒற்றுமையை விளக்கும் சிறுகதையை எடுத்துக் காட்டி, நூலாசிரியாரை வெகுவாகப் பாராட்டினார்.
எழுத்துப் படைப்பு , மரணத்தை வெல்லக் கூடியது என்ற பல்சுவைப் பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமார், எழுத்தின் பெருமை, எழுத வேண்டியதன் அவசியம், ஒவ்வொன்றையும் ஆவணப் படுத்துவதன் முக்கியம் என அடுக்கடுக்காகத் தொடர்புபடுத்திப் பேசினார், முதல் சிறுகதையை எழுதியவர் வா.வே.சு அய்யரா-பாரதியா எனக் கூட முடிவு செய்ய இயலாத நிலையுடன் . சிறுகதைகளுக்கான நூறாண்டு காலக் கொண்டாட்டம் கொண்டாடும் நேரத்தில் நா.ஆண்டியப்பன் இந் நூலை வெளியிட்டிருப்பதை வரவேற்றார்.
உலக ம்காகாவியத்திற்கு மிக வெற்றிகரமாக மறுகதை எழுதிய எழுத்து மன்னன் புதுமைப்பித்தன், அகலிகை கதையை சிறுகதையாக்கி மக்களை ஏற்கச் செய்தவர். அக் கால கட்ட கதை நிகழ்வுகளை மறுகதையாக் கற்பனை செய்த புதுமைப்பித்தனைப் போல், மகாபாரதக் கதையம்சங்களை மறுகதையாக்கிய நூலாசிரியரின் திறனைப் பாராட்டினார். கர்ணன் இறக்கும் தருவாயில் தன் புண்ணியங்கள் அனைத்தையும் அந்தணரக வந்த கண்ணனிடம் அர்க்கியம் செய்து கொடுத்ததை விவரித்த கிருஷ்ண குமார், புண்ணியங்களை உவந்தளித்ததன் வழி கிடைக்கும் புண்ணியங்கள் ஏன் கர்ணனை காப்பாற்றவில்லை எனக் கேட்டார். இந்தக் கேள்விக்கு இடமில்லாமல், ஸ்ரீவில்லிப்புத்தூரார், ‘செய் புண்ணியம் யாவும் தந்தேன்’ என முக்காலத்துப் பு ண்ணியங்களையும் தத்தம் செய்வதாகக் குறிப்பிட்டதை வார்த்தை ஜால பாரதி கிருஷ்ணகுமார் பொருத்தமாகக் குறிப்பிட்டார்.
அறங்கள் பேசுவது இலக்கியம்- சமூக நெறிகளை உணர்த்துவது இலக்கியம் நாம் வாழ்ந்த நிலைகளை உணர்த்துவது இலக்கியம் என்ற பேச்சாளர், எதையும் ஆவணப் படுத்துங்கள், புலம் பெயர்ந்த நம் இனம் எதிர் காலத்தில் உணரப்பட உங்கள் எந்த எழுத்தும் பயன்படும் என்றார். அண்மையில் நான் எழுதி வெளியான ‘சிங்கப்பூரில் தமிழும் தமிழரும்’ நூலைக் குறிப்பிட்ட பாரதி கிருஷ்ணகுமார், சிங்கப்பூருக்கு இதுபோன்ற தகவல்கள் நூல்கள் தேவை-நிறைய எழுதுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.
தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் – நூலாசிரியர் நா.ஆண்டியப்பன் தன் ஏற்புரையில் , தன்னோடு நீண்ட காலச் செயலாளராகப் பணியாற்றிப் பெருமை சேர்த்த சுப.அருணாசலம் அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் நன்றி கூறினார். நிகழ்வு நெறியை தெளிந்த நீரோட்டமாக எடுத்துச் சென்றார் சுப.அருணாசலம்.
தகவல்: – ஏ.பி.ராமன், சிங்கப்பூர்





