நம் பண்டைய மருத்துவத்தில், சிகிச்சை முறையில் இதை கட்டாயம் சொல்வார்கள். வள்ளுவப் பேராசான் சொல்லியிருப்பதும் இதைத்தான். அது என்ன? ஒரு நோயாளியை மருத்துவர் சோதிக்கும் முன் அவரது நோய் என்ன என்பதைக் கண்டறிந்து, நோய்க்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்து, அதன் பின் மருந்துவம் செய்ய வேண்டும் என்கிறது.
ஆனால், நோய் நாடி… நோய் முதல் நாடி..க்கு முன் வேறு ஒன்றை இன்றைய மருத்துவ உலகம் அவசியம் பார்க்க வேண்டியுள்ளது. பெருகிவிட்ட நோய்கள், மருத்துவர்கள்.. அதற்கு ஏற்ப கிளினிக் செண்டர்கள், மெஷினுடன் கழியும் வாழ்க்கை… நவீன மருத்துவ உபகரணங்கள் என எல்லாம் இருந்தும், சில மனிதத் தவறுகளால்… இந்த நவீன மருத்துவத்தின் மீது சிலருக்கு வெறுப்பு ஏற்பட்டு விடுகிறது. அதை ஏன் என்று என் அனுபவத்தை வைத்து இங்கே பகிர்கிறேன்…
என் 77 வயது பெரியப்பா கடந்த ஓரிரு வருடங்களாக கடும் மூட்டுவலி, கால் வீக்கத்தால் அவதிப் படுகிறார். அவரை அழைத்துக் கொண்டு மதுரையில் உள்ள குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை பெற சென்றிருந்தேன். அவர் எல்லா பயிற்சிகளையும் செய்யச் சொல்லிவிட்டு… இவர் கீழே விழுந்திருக்கிறார். கை இருக்கும் பலத்தில் ஊன்றி மெதுவாக கால் வைத்து மன திடத்தால் நகர்ந்து வருகிறார். முதுகுத் தண்டுவட பாதிப்பு. ரத்த ஓட்டம் இல்லை என நினைக்கிறேன். டிஸ்க் கொலாப்ஸ் ஆகியிருக்கும். எதுக்கும் ஸ்கேன் எடுத்துவிடலாம் என்று ஆர்த்தி ஸ்கேன் செண்டரில் முழு கன்சஸன் போட்டு எழுதிக் கொடுத்தார்.
பெரியப்பாவை அழைத்துக் கொண்டு ஆர்த்தி ஸ்கேன் செண்டருக்கு போனேன். கடித சீட்டைக் கொடுத்து பதிவு செய்து வரவேற்பில் அமர்ந்தேன். அங்கும் இங்குமாய் சிறுபெண்கள் … வளையவந்தார்கள். கேலியும் கிண்டலும் அவ்வப்போது தலைதூக்க…
ஒரு பெண் அருகே வந்தாள். பெரியப்பாவை கையைக் காட்டி அழைத்துச் சென்றாள். உடன் சென்றேன். ஒரு டிப்டாப் டாக்டர் உள்ளே (விசிட்டிங் போலும்) வேகவேகமாக வந்தார். அறைக்குள் சென்றார். அந்த அவசர கதியில் பெரியப்பாவையும் அழைத்துக் கொண்டு உள்ளே போனார்கள். அந்த நபர், வாங்கப்பா.. உக்காருங்கப்பா… சட்டையை கழட்டுங்கப்பா என்று ஏதோ ஸ்நேக பாவத்தில் சொல்லிக் கொண்டே… சொல்யூஷனை தடவி நெஞ்சில் வைத்து ஸ்க்ரீனில் செக் செய்தார். பின்னர்.. ”உங்களுக்கு ஒன்றுமில்லை… ஹார்ட் பெர்ஃபக்ட். நல்லா வேலை செய்யறது. நீங்க இவரை கூட்டிட்டுப் போகலாம்” என்றார்.
சரிங்க.. ஆனா ரெஃபர் பண்ண டாக்டர் இவருக்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் சிடி ஸ்கேன் எடுக்க சொல்லியிருந்தாரே… அதை எப்போ பாப்பீங்க என்று இழுத்தேன்.
இல்லையே.. இவருக்கு இதான் பண்ணச் சொல்லியிருக்கு! இதைத்தான் ரெஃபரன்ஸ் பண்ண டாக்டர் பண்ணச் சொல்லியிருக்கார்…. என்றவர், யம்மா… அந்த ரெஃபரன்ஸ் சீட்டை காண்பிங்கம்மா… என்றார்.
அந்தப் பெண் கையில் அடுக்கி வைத்திருந்த சீட்டுகளில்… பரபரபவென ஏதோ தேடிக் கொண்டே… விழி பிதுங்கி நின்றாள். அந்த குறுகிய இடைவெளியில் நான் ஸ்க்ரீனைப் பார்த்தேன். மேலே ஒரு மூலையில் ‘பெருமாள்’ என்று எழுத்து தெரிந்தது. அப்போதுதான் எனக்கும் இவர்கள் செய்த தவறு புரிந்தது.
அவரிடம் சார்… இவர் பேர் கண்ணன். 77 வயசு. ஸ்க்ரீன்ல பெருமாள்னு போட்டிருக்கு! சரியா பாருங்க.. என்றதும், ஒரு பரபரப்பு அவர்களுக்குள்.
அப்படியே பெரியப்பாவை வெளியே சக்கர நாற்காலியில் அழைத்துக் கொண்டு வந்து, சற்று நேரம் கழித்து, எம்.ஆர்.ஐ., சிடி.,ஸ்கேன்கள் எடுத்துக் கொண்டு (அப்போது வந்த இன்னொரு சிறு பெண் பொறுமையாக பெயர், விவரங்கள், ஏன், எதற்கு ஸ்கேன், என்ன விவரம் எல்லாவற்றையும் கேட்டு குறித்துக் கொண்டு… சிறப்பாக தன் பணியைச் செய்தாள்) பிறகு வேறு ஒரு மூளை, நரம்பியல், வலிப்பு நோய் மருத்துவரிடம் நம் குடும்ப மருத்துவர் காட்டச் சொன்னதால், அவரிடம் வந்து காட்டி… யதில்… இப்படி ஒரு பிரிஸ்க்ரிப்ஷன்…!
அவரது க்ளினிக் அருகில் ஒரு பெண்மணி மருந்துக் கடை வைத்திருக்கிறாள். அவளுக்காக இந்த நல்ல மனம் கொண்ட மருத்துவர் மருந்துகளை எழுதிக் கொடுத்து… வாங்க வேண்டிய சூழல் போலும்!
இரவு 9 மணி…சுமார் என்பதால்… அவசர கதியில் அங்கிருந்து வெளியே வர வேண்டிய சூழல். மறுநாள் வர இயலாது என்ற நிலையில்… சீட்டைக் கொடுங்க.. எங்க ஊர்ல மருந்து வாங்கிக்கறேன்… என்று சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டோம்.
ஊரில் உள்ள கடைகளில் காட்டினால்… ஸார்… எழுத்து புரியல சார்… என்றார்கள். எழுத்து எனக்கும் புரியவில்லை! மெடிக்கல் ரெப்- பணி செய்த காலத்தில் படித்த மருந்துகள் இல்லை இப்போது! 20 வருடங்களில் மருத்துவ உலகம் மாறி விட்டது. உங்களில் யாருக்காவது இந்தக் கையெழுத்து புரிந்தால்… சொல்லுங்கள்..!
பின்குறிப்பு: இன்று ஆர்த்தி ஸ்கேனின் கஸ்டமர் கேரில் இருந்து ஒரு பெண்மணி பேசினார். ஸார்.. சர்வீஸ் எப்படி இருந்தது என்று! அவரிடம் இந்த முழு விருத்தாந்தங்களையும் சொல்லி… தயவு செய்து, நோயாளியின் பெயர், வயசு கேட்டுவிட்டு… ஸ்கேன் எடுக்க லோஷனைத் தடவி நெஞ்சில் அந்த கருவியை வைக்கச் சொல்லுங்கம்மா.. என்றேன்! அவருக்கும் சிரிப்பு தாளவில்லை!
எனவே..நோய் நாடி, நோய் முதல் நாடி … நாடி பிடிப்பதற்கு முன்… நோயாளியின் பெயரையும் வயதையும் கேட்டுவிட்டு… மருத்துவ உபகரணம் அருகே அழைத்துச் செல்வது, எப்பவும் நல்லது!




