
கட்டுரை: ஜெயஸ்ரீ எம்.சாரி, நாக்பூர்.
முண்டாசு கவிஞன் பாரதியின் பிறந்த நாள், தமிழ் நல்லுலகம் கொண்டாடும் சிறப்பு நாள்.
பாரதி தன் கண்ணம்மாவான செல்லம்மாவிற்கு கொடுத்த சம அந்தஸ்து, பறவைகளிடம் காட்டிய பரிவு என்பன பல விஷயங்கள் நிழலாய் நம்முடன் பயணிப்பதை விளக்கும் ஒரு முயற்சியே இந்தக் கட்டுரை.
பாரதி அவர் காலத்தில் செல்லம்மாவின் தோளில் தைரியமாக கைப்போட்ட படி இருக்கும் இந்தப் புகைப்படத்துக்கு அடிகோடியவரே சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா தான் இருக்குமோ எனத் தோன்றுகிறது.

ஒருமுறை பாரதியார் நிவேதிதாவை அப்போதைய கல்கத்தாவில் சந்தித்த சமயத்தில் நிவேதிதா பாரதியை நோக்கி, ” நீங்கள் ஏன் உங்கள் மனைவியை அழைத்துக் கொண்டு வரவில்லை?” என்று வினவிய போது, பாரதியாரோ, ” எங்களின் சமூக வழக்கப்படி பெண்களை வெளியில் அழைத்துச் செல்வதில்லை.
அதுமட்டுமல்லாமல் என் மனைவிக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது” என்றாராம். அதற்கு நிவேதிதா, “உங்கள் மனைவிக்குச் சம உரிமை கொடுக்காத நீங்கள் எப்படி நாட்டுக்கு விடுதலைப் பெற்றுத் தருவீர்கள்? என்றதும் தான் பாட்டுக்கவிக்கே மனதில் உரைத்ததாம். அதன் பின்னரே மனைவியையும் சரிசமமாக அழைத்து வரத் தொடங்கினாராம் வீதிகளில்.
பாரதியார் ஒருமுறை வீட்டிலிருந்த தானியங்களை எல்லாம் அங்கு வந்த காக்கை, குருவிகளுக்கு போட்டுக் கொண்டிருந்தாராம். அங்கு வந்த செல்லம்மாள், பாரதியாரை கோபித்துக் கொண்டபோது, பாரதியோ, ” காக்கை, குருவிகளுக்கும் நாம் கொடுக்கமல் யார் கொடுப்பார்கள்?”, என்று கூறியவராலே தான், கிளியைப் பற்றியும், குயிலைப் பற்றியும் எழுத முடிந்ததோ?
பாரதியைப் பற்றியும் விமர்சிப்பவர்கள், பாரதி ,” மெல்ல தமிழ் இனி சாகும்’ என்று கூறியுள்ளாரே என்று சொல்வதை பலமுறை நாம் கேட்டிருக்கிறோம். பேராசிரியர் கு. ஞானசம்பந்தன்
ஒருமுறை பாரதியின் வரலாற்றில் இருந்து குறிப்பிடும் போது ” பாரதியார் கணித வகுப்பில் இருந்த போது ஆசிரியர் சொல்வதைக் கேட்காமல் தமிழில் ஏதோ எழுதிக் கொண்டிருந்ததைப் பார்த்த ஆசிரியர் கோபமுற்று கூறியதை தேசியக்கவி பாரதியார் பின்வரும் வரிகளால் விளக்கினாராம்.
“சொல்லவும் கூடுவ தில்லை-அவை சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்”
என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ!”.
பாரதியாரின் பார்வையில் பேதையாய் தெரிந்த கணித ஆசிரியர் தான் ‘தமிழ் இனி மெல்லச் சாகும்’, என்று சொன்னாரே தவிர பாரதி அன்று என்று பேராசிரியர் ஞானசம்பந்தன் விளக்கினார்.
இவ்வாறு சுப்ரமணி பாரதியார் மறைந்தாலும் அவரின் வாழ்வியல் தமிழ் நல்லுலகத்துடன் நிழலாகவே தொடர்கிறது.