
- ஜெயஸ்ரீ எம்.சாரி, நாக்பூர்.
‘நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்று இரண்டு எழுத்தினால்’- என்ற கவிச்சக்கரவர்த்தி கம்பனின் வரிகளே இப்போதைய சூழலில் நேர்மறை எண்ணங்களை நமக்குள் விதைக்கிறது.
கம்ப நாட்டாழ்வார் எழுதிய ராம காதையை ஆன்மீக சொற்பொழிவாளர்களான மதிப்புக்குரிய டாக்டர் சரஸ்வதி ராமநாதன், டாக்டர் இரா.செல்வகணபதி, கலைமாமணி திருச்சி கல்யாணராமன் போன்றோரின் அருமையான விளக்கத்துடன் எங்களுக்கு கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது.
அப்பெரியவர்களின் கருத்துகளை நினைவில் கொண்டு இராமனின் சில குணங்களை இந்தக் கட்டுரையில் கூறும் முயற்சியே இது.
நமக்கு எப்பொழுதெல்லாம் தடங்கலோ, துன்பமோ வரும், அப்போதெல்லாம் நாம் அடுத்தவரை குறை கூறுவதே வழக்கம். இலக்குவனும் அவ்வாறே இராம்பிரானின் பட்டாபிஷேகம் நிறுத்தப்பட்ட போது, இலக்குவன் அனைவரையும் குறைகூறும் போது, இராமரோ,
“”நதியின் பிழையன்று
நறும்புனல் இன்மை அற்றே
பதியின் பிழையன்று,
பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழையன்று, மகன்
பிழையன்று மைந்த
விதியின் பிழை; நீ இதற்கு என்னை
வெகுண்டது?” என்று கூறுவதாக கம்பர் பாடல் இயற்றியுள்ளார்.
”இலக்குவனே, ஒரு நதியில் நீர் இல்லை என்றால் அது நதியின் குற்றமா? மலையில்
மழை பெய்தால் தானே நதியில் நீர் வரும்? அதே போல இந்த முடிசூட்டு விழா நடக்கவில்லை யென் றால் அதற்காக அன்னை, தந்தை, பரதன் இவர்களைக் கோபிப்பதால் ஒன்றும் பயன் இல்லை. இது விதியின் பிழையப்பா. இதை விதியின் பிழையாகக் கொள்ள வேண்டுமே தவிர யாருடைய மதியின் பிழையும் இல்லை” என்கிறார் இராமர்.
அயோத்தியா காண்டத்தில், குகப் படலத்தில் படகோட்டியான குகனின் அன்பினில் மூழ்கிய இராமன்
“அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்,” என்றுக் கூறி குகனையும் சேர்த்து ஐந்து சகோதரனாக்கி சமத்துவத்தை விளக்குகிறார்.
கிட்கிந்தா காண்டத்தில் அனுமன் படலத்தில், அனுமனை ராமன் பாராட்டி, இலக்குவனிடம்
“மாற்றம் அஃது உரைத்தலோடும் வரிசிலைக் குரிசில் மைந்தன்
தேற்றம் உற்று, இவனின் ஊங்குச் செவ்வியோர் இன்மை தேறி
ஆற்றலும் நிறைவும் கல்வி அமைதியும் அறிவும் என்னும்
வேற்றுமை இவனோடு இல்லை, ஆம்! என விளம்பலுற்றான்!”
அனுமனின் தோற்றம், பண்பு, பேசும் முறை ஆகிய பண்புகளால் ஈர்க்கப்பட்ட இராமன், இலக்குவனிடம் கல்வி, கேள்வி, ஞானம் இவற்றில் இவனுக்கு இணையானவர் உலகில் எவரும் இல்லை என்று மனதில் எண்ணிக் கொள்கிறார். அனுமனுக்கு சொல்லின் செல்வன் எனப் புகழ்ந்தும் கூறுகிறான்.
“இல்லாத உலகத்து எங்கும் ஈங்கு இவன் இசைகள்கூற
கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே! ‘யார்கொல் இச் சொல்லின் செல்வன்?’
வில்லார் தோள் இளைய வீர! விரிஞ்சனோ? விடைவல்லானோ?”
“எனதருமை தம்பியே! இவன் வேதக் கடல் எனும்படியாக ஒளி நிறைந்து காணப்படுகிறான். ஆராய்ந்து தேர்ந்தெடுத்துப் பேசும் சிற்சில சொற்களிலேயே இவன் மேன்மை வெளிப்படுகிறதே. யாரப்பா இந்த ‘சொல்லின் செல்வன்’? பிரம்ம தேவனோ அல்லது சிவபெருமானோ? ,” என்கிறார் இராமர்.
“லக்ஷ்மணனே!இவன் ஒரு பிரம்மச்சாரி வடிவத்தில் மாணாக்கனாகத் தோன்றுகிறான் அல்லவா? இது இவனது உண்மைத் தோற்றம் இல்லை. இவன் இந்த உலகுக்கே ஓர் அச்சாணி போன்றவன். இவன் பெருமைகளை எல்லாம் நான் உணர்ந்து கொண்டேன். நீயும் அவைகளைப் புரிந்து கொள்வாய்” என்றான் இராமன்.
அறிமுகம் இல்லாதவரைப் பற்றி நம் மனதில் நல்ல, உயர்ந்த மதிப்பினைக் கொண்டால் தான் அறிமுகம் ஆகப்போகிறவரிடம் நாம் சுமூகமான தொடர்பு வைக்க முடியும் என்றப் பாடத்தை நமக்கு வலியிறுத்துகிறார்.
இலங்கையில் விபீஷணிடம், இராமன்,
“குகனொடும் ஐவரானோம் முன்பு;
பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனோம்;
எம்முழை அன்பின் வந்த
அகமர் காதல் ஐய!
நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகலரும் கானம் தந்து புதல்வரால்
பொலிந்தான் நுந்தை!”
கம்பராமாயணத்தின் சிறப்பு மிகு பகுதியாகவே இந்தப் பாடலானது கருதப்படுகிறது.
ராமன், இலக்குவன், பரதன், சத்ருக்னன் ஆகிய நால்வரோடு குகன் ஐந்தாவதுசகோதரனாகவும் சூரியன் மகன் சுக்ரீவன் ஆறாவது சகோதரனாகவும் தம் எதிரியானஇராவணன் தம்பியான விபீஷணனை ஏழாவது சகோதரனாகவும் ஆக்கிக் கொண்டான்.
இலங்கையில், நிராயுரதபாணியான நின்ற இராவணனைப் பார்த்து” இன்றுப் போய் போர்க்கு நாளை வா,” என்று கூறி அருளினார், இராமர்.
.
“நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடுஇயல் வழி அது ஆக்கும் வேரி அம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டு அழிய வாகை
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவார்க்கே” – என்பதை நினைவில் கொண்டு இராமபிரானை வழிபட்டு, வாழ்வில் ஏற்படும் தடைகளை தாண்ட மன உறுதியை பிரார்த்திக்கும் நேரமிது.