- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் என்பது மொழி வல்லுநர்களின் பணிக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகும். மொழிபெயர்ப்புகள் நாடுகளை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன். மொழிபெயர்ப்பால் நாடுகளுக்கிடையே உரையாடல் சாத்தியமாகிறது; புரிதல் ஏற்படுகிறது; ஒத்துழைப்பும் வளர்ச்சியில் பங்களிப்பும் ஏற்படுகிறது.
இது உலக அமைதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது. இலக்கியம், அறிவியல் படைப்பு, தொழில்நுட்பப் பணி உட்பட, ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றுவது அனைவரும் ஒரு விஷயத்தியப் புரிந்துகொள்ள இன்றியமையாதது. இது தகவல் பரிமாற்றத்தின் ஒரு முக்கியமான அங்கம்.
எனவே, 24 மே 2017 அன்று, ஐ.நா பொதுச் சபை தீர்மானம் எண் 71/288 மூலம் செப்டம்பர் 30ஆம் நாளை சர்வதேச மொழிபெயர்ப்பு தினமாக அறிவித்தது.
ஏன் செப்டம்பர் 30?
செப்டம்பர் 30 மொழிபெயர்ப்பாளர்களின் முன்னோடியும், பைபிளை மொழிபெயர்த்தவருமான செயின்ட் ஜெரோம் அவர்களின் பண்டிகையாகும்.
செயின்ட் ஜெரோம் வடகிழக்கு இத்தாலியைச் சேர்ந்த ஒரு பாதிரியார் ஆவார், அவர் புதிய ஏற்பாட்டின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் இருந்து பைபிளின் பெரும்பகுதியை லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கும் முயற்சியால் அறியப்படுகிறார்.
ஜெரோம் 30 செப்டம்பர் 420 இல் பெத்லகேமுக்கு அருகில் இறந்தார். 2005ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், ஐக்கிய நாடுகள் சபை தனது அனைத்து ஊழியர்களையும், நிரந்தரப் பணியாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குதாரர் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களை ஐ.நா. ஜெரோம் மொழிபெயர்ப்பு போட்டியில் பங்கெடுக்கச் சொல்கிறது.
அரபு, சீனம், ஆங்கிலம், பிரஞ்சு, ரஷியன், ஸ்பானிஷ், மற்றும் ஜெர்மன் ஆகிய மொழிகளில் சிறந்த மொழிபெயர்ப்புகளை வெகுமதி அளிக்கும் ஒரு போட்டியினை நடத்துகிறது.
மேலும் பன்மொழி பேசுவதை கொண்டாடுவதையும் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் பல மொழி இராஜதந்திரத்தில் மற்ற மொழி வல்லுனர்களின் முக்கிய பங்கை முன்னிலைப் படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.