பாரதியாரின் கண்ணன் பாட்டு
பகுதி – 15, கண்ணன் – என் சீடன்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
கண்ணன் என் சீடன் பாடலின் தொடர்ச்சி. .
கண்ணனும் தனது கழிபடு நடையில்
மிஞ்சுவா னாகி, வீதியிற் பெரியோர்
கிழவிய ரெல்லாம் கிறுக்கனென் றிவனை
இகழ்ச்சியோ டிரக்கமுற் றேளனம் புரியும்
நிலையும் வந்திட்டான். நெஞ்சிலே யெனக்குத் … 50
தோன்றிய வருத்தஞ் சொல்லிடப் படாது.
முத்தனாக் கிடநான் முயன்றதோர் இளைஞன்
பித்தனென் றுலகினர் பேசிய பேச்சென்
நெஞ்சினை அறுத்தது; நீதிகள் பலவும்
தந்திரம் பலவும் சாத்திரம் பலவும் … 55
சொல்லிநான் கண்ணனைத் தொளைத்திட லாயினேன்.
தேவ நிலையிலே சேர்த்திடா விடினும்,
மானுடந் தவறி மடிவுறா வண்ணம்,
கண்ணனை நானும் காத்திட விரும்பித்
தீயெனக் கொதித்துச் சினமொழி யுரைத்தும், … 60
சிரித்துரை கூறியும், செள்ளென விழுந்தும்,
கேலிகள் பேசிக் கிளறியும், இன்னும்
எத்தனை வகையிலோ என்வழிக் கவனைக்
கொணர்ந்திட முயன்றேன்; கொள்பய னொன்றிலை.
கண்ணன் பித்தனாய்க் காட்டா ளாகி, … 65
எவ்வகைத் தொழிலிலும் எண்ணமற் றவனாய்,
எவ்வகைப் பயனிலுங் கருத்திழந் தவனாய்,
குரங்காய்க் கரடியாய்க் கொம்புடைப் பிசாசாய்
யாதோ பொருளாய், எங்ஙனோ நின்றான்.
இதனால், … 70
அகந்தையும் மமதையும் ஆயிரம் புண்ணுற;
யான்கடுஞ் சினமுற்று ‘எவ்வகை யானும்
கண்ணனை நேருறக் கண்டே தீர்ப்பேன்’
எனப்பெருந் தாபம் எய்தினே னாகி,
‘எவ்வா றேனும் இவனையோர் தொழிலில் … 75
ஓரிடந் தன்னில் ஒருவழி வலிய
நிறுத்துவோ மாயின் நேருற் றிடுவான்’
என்றுளத் தெண்ணி இசைந்திடு ஞ் சமயங்
காத்திருந் திட்டேன். ஒருநாள் கண்ணனைத்
தனியே எனது வீட்டினிற் கொண்டு, … 80
”மகனே, என்பால் வரம்பிலா நேசமும்
அன்பும்நீ யுடையை; அதனையான் நம்பி,
நின்னிட மொன்று கேட்பேன்; நீயது
செய்திடல் வேண்டும்; சேர்க்கையின் படியே
மாந்தர்தஞ் செயலெலாம் வகுப்புறல் கண்டாய். … 85
சாத்திர நாட்டமும், தருக்கமும் கவிதையில்
மெய்ப்பொரு ளாய்வதில் மிஞ்சிய விழைவும்
கொண்டோர் தமையே அருகினிற் கொண்டு
பொருளினுக் கலையும் நேரம் போக
மிஞ்சிய பொழுதெலாம் அவருடன் மேவி … 90
இருந்திட லாகுமேல் எனக்குநன் றுண்டாம்;
பொழுதெலாம் என்னுடன் போக்கிட விரும்பும்
அறிவுடை மகனிங் குனையலால் அறிந்திடேன்.
ஆதலால்,
என்பயன் கருதி, எனக்கொரு துணையாய் … 95
என்னுடன் சிலநாள் இருந்திட நின்னை
வேண்டி நிற்கின்றேன், வேண்டுதல் மறுத்தே
என்னைநீ துன்பம் எய்துவித் திடாமே,
இவ்வுரைக் கிணங்குவாய்” என்றேன். கண்ணனும்,
”அங்ஙனே புரிவேன். ஆயின் நின் னிடத்தே … 100
தொழிலிலாது யாங்ஙனம் சோம்பரில் இருப்பது?
காரிய மொன்று காட்டுவை யாயின்,
இருப்பேன்” என்றான். இவனுடைய இயல்பையும்
திறனையுங் கருதி, ”என் செய்யுளை யெல்லாம்
நல்லதோர் பிரதியில் நாடொறும் எழுதிக் … 105
கொடுத்திடுந் தொழிலினைக் கொள்ளுதி” என்றேன்
நன்றெனக் கூறியோர் நாழிகை யிருந்தான்;
‘செல்வேன்’ என்றான்; சினத்தொடு நானும்
பழங்கதை யெழுதிய பகுதியொன் றினையவன்
கையினிற் கொடுத்துக் ”கவினுற இதனை . … 110
பாடலின் தொடர்ச்சியை நாளை காணலாம்