January 21, 2025, 4:03 AM
23.2 C
Chennai

புண்ணியம் செய்த மாநிலம் தமிழ்நாடு!

ஹைதராபாத்தில் வசிக்கும் டாக்டர் ப்ரொபசர் முதிகொண்ட சிவபிரசாத் அவர்கள், ‘சாரித்ரிக நாவலா சக்கரவர்த்தி’ என்ற விருது பெற்றவர். இவர் உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியாகப் பணிபுரிந்து பதவி ஓய்வு பெற்றவர். இவருக்கு எண்பத்து நான்கு வயதாகிறது. இதுவரை நூற்று நாற்பத்திரண்டு சரித்திர நாவல்கள் எழுதியுள்ளார். இன்னும் எழுதுகிறார். ஒரே நேரத்தில் மூன்று பேருக்கு வெவ்வேறு தலைப்புகளில் டிக்டேஷன் செய்து எழுதச் செய்யும் ஆற்றல் கொண்டவர். அது தவிர மிகப் பல ஆண்டுகளாக தினமும் காலை நான்கு மணிக்கே எழுந்து குறைந்தது இரண்டு பக்கங்களுக்குக் குறையாமல் எழுதும் பழக்கம் கொண்டவர். தற்போது சிறிது கண்பார்வை குறைந்திருந்தாலும், இன்று வரை அந்த வழக்கத்தைத் தொடர்வதாகக் கூறுகிறார்.

ப்ரொபசர் முதிகொண்ட சிவபிரசாத் அவர்களின் சில கட்டுரைகளை நான் தமிழில் மொழிபெயர்த்தேன். அவை நம் தினசரி தளத்தில் வெளிவந்து பலருக்கும் உபயோகமாக இருந்தது. அண்மையில் அயோத்தி ராமர் கோவில் அமைக்க, சுதந்திர பாரதத்தில் நடந்த போராட்டங்களைப் பற்றி அவர் எழுதிய கட்டுரையை மொழிபெயர்த்தேன்.  தினசரி தளத்தில் வெளிவந்த அந்த கட்டுரையையும் அதற்கும் முன் வெளிவந்த அவருடைய  கட்டுரைகளையும் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு, அவரைச் சென்று பார்த்து வந்தோம்.

ALSO READ:  சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் – 46: உத்யம ராகவந்யாய:

அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் கூறிய ஆர்வம் மிகுந்த கருத்துகளை அவருடைய அனுமதியோடு பதிவு செய்தேன். அதையே இந்த கட்டுரையில் தமிழில் தருகிறேன். 

“தமிழ்நாடு மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த மாநிலம். ஆன்மீகச் செழிப்பு நிரம்பிய மாநிலம். ஏனென்றால் ஒரே காலத்தில் உலகப் புகழ்பெற்ற உயர்ந்த மகான்களின் அவதாரம் தமிழ்நாட்டில் நிகழ்ந்தது. அது தமிழ்நாட்டிற்குக் கிடைத்த அற்புதமான வரம்.

மகான்கள் அவதரித்த மாநிலம் –

அவர்களுள் ஒருவர் கும்பகோணம் சுவாமி. அவரை மாஸ்டர் ஸி.வி.வி. என்று அழைப்பார்கள். இவர் வாழ்ந்து வந்த காலத்திலேயே காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ. சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாசுவாமியும் வாழ்ந்து வந்தார். அவரை ‘நடமாடும் தெய்வம்’ என்று போற்றுகிறோம். அடுத்து ஸ்ரீ அரவிந்தர். அரவிந்தர் பூரணயோகத்தை நமக்கு அளித்தார். அடுத்து, மகான் ஸ்ரீ ரமண மகர்ஷி. இவ்விதம் ஒரே காலத்தில் நான்கு மகாத்மாக்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தது ஆச்சர்யத்தை அளிக்கிறது. இது தமிழ்நாடு செய்த புண்ணியம் எனபதில் எவ்வித ஐயமும் இல்லை.

ஸ்ரீ அரவிந்தரின் சித்தாந்தம் அமிர்தத்தைப் போன்றது. நான் அதனை நன்றாகப் படித்துப் பயின்றுள்ளேன். பாண்டிச்சேரிக்குப் பலமுறை சென்று வந்துள்ளேன். அடுத்து, திருவண்ணாமலை. துரதிருஷ்டவசமாக ஸ்ரீரமண மகரிஷியை அவர் தேகத்தோடு வாழ்ந்த காலத்தில் தரிசிக்க முடியவில்லை. ஆனால் ஸ்ரீ ரமணாஸ்ரமத்தோடு எனக்கு நல்ல பழக்கம் உள்ளது.

ALSO READ:  கார்த்திகை முதல் நாள்; சபரிமலை பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ஏற்பு!

தமிழ்நாட்டில் நாயன்மார்களும் ஆழ்வார்களும் பிறந்தார்கள். திருக்குறளை இயற்றிய  மகான் திருவள்ளுவர் பிறந்தார். நாம் பாராயணம் செய்யும் திருப்பாவை பாசுரங்களை இயற்றிய ஆண்டாள் நாச்சியார் அவதரித்தார். திருவெம்பாவை இயற்றிய மாணிக்கவாசகர் அவதரித்தார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறந்த அவ்வையார்  அருளிய செய்யுட்கள் நமக்கு இன்றும் கிடைக்கின்றன. இன்னும் பலப்பல ஆன்மீக இலக்கியங்களை அருளிச் செய்த மகான்கள் அவதரித்த தலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

இவ்விதம் தமிழ்நாடு ஆன்மீகத்திலும் இலக்கியத்திலும் செழுமை நிறைந்த மாநிலமாகத் திகழ்கிறது. அதனால் என் மதிப்பில் தமிழ்நாடு வெறும் சுற்றுலாத் தலம் மட்டுமல்ல. உயர்ந்த தீர்த்த யாத்திரைத் தலமும் கூட. நான் அந்த சிறந்த ஆன்மீக பூமியை தலை வணங்கி சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன்.

இன்னுமொரு செய்தி. நம் பாரதத் தாய்நாடு கன்யாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை விரிந்து பரந்துள்ளது. இதில் எந்த ஒரு இடத்தையும் ஃபெடரலிசம் என்ற பெயரால் பிரிப்பதற்கு இடமில்லை. உடலில் இருந்து கால்களையும் கைகளையும் பிரிப்பதற்கு இடமில்லை அல்லவா? அனைத்தும் ஒன்றாக இணைந்திருந்தால்தானே மனித உடல் என்று ஆகிறது? அதே போல் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை உள்ள தேசம் எல்லாம் சேர்ந்தால்தான் அகண்ட பராத தேசமாகும். இது போன்ற பாரத உணர்வும் தேச பக்தியும்  உடையவரே பாரத தேசக் குடிமகன்.

ALSO READ:  மதுரை மாவட்ட கோவில்களில் நாளை சனி மஹா பிரதோஷம்!

சனாதனம் –

‘சனாதனம்’ என்ற சொல்லுக்கான பொருளை ஒரு முறை பார்ப்போம். சனாதனம் என்றால் புராதனம் என்று கூறுகிறார்கள். அது தவறல்ல என்றாலும் சனாதனம் என்றால் ‘எடர்னல்’. சாஸ்வதமானது என்று பொருள். சூரியன் கிழக்கே உதிக்கிறான். இது ஒரு ‘எடர்னல்’ சத்தியம். மா விதை நட்டால் மா மரம் முளைக்கும். இது என்றுமுள்ள  உலகளாவிய உண்மை. இதனை நாம் மாற்ற முடியாது. ‘சனாதனம்’ நேற்று, இன்று, நாளை, மூன்று காலங்களிலும் நித்தியமானது, நிலையானது. முக்காலங்களுக்கும் உரியது. சனாதனம் என்பது அனைத்துலும் வியாபித்துள்ள சத்தியம். நம் பண்டைய  ரிஷிகளின் சிந்தனை முறை அது. சனாதனம் என்பது வேதங்களும் உபனிஷத்துகளும் நமக்கு அளித்த உயர்ந்த தர்மம்.

ஆனால் குறுகிய மனப்பான்மை கொண்ட சிலரால் நேர்ந்த சில தீய வழக்கங்களையும் சிறு தவறுகளையும் சனாதன தர்மத்தின் மீது சுமத்துவது கூடாது. இவை இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்ள வேண்டும். இந்த சிறு கருத்தை உங்களோடு பகிந்து கொண்டது குறித்து நான் மகிழ்கிறேன். வணக்கம்”.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.21- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்!

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார்.

சபரிமலையில்… காணிக்கை நாணயங்களை எண்ண, கைகொடுத்த ஏற்பாடுகள்!

சபரிமலை மண்டல மகரவிளக்கு மஹோத்சவத்திற்கு முந்தைய நாள், நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட அனைத்தும் எண்ணப்பட்டு இன்று கருவூலம் பூட்டப்பட்டது.

சபரிமலை கோயில் நடை அடைப்பு!

இனி சபரிமலை ஐயப்பன் கோவில் மாசி மாத பூஜைக்காக நடை திறக்கப்படும் சபரிமலையில் இந்த ஆண்டு மகரஜோதி மகர விளக்கு

பஞ்சாங்கம் ஜன.20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...