
அடியேன் தீபம் இதழாசிரியராக இருந்தபோது, 2015ல் பழக்கமானவர் ஹைதராபாத்தில் வசித்து வரும் திருமதி ராஜி ரகுநாதன். தஞ்சைத் தமிழர். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகத் திறன் வாய்ந்தவர். சிறுகதை, கட்டுரை, செய்திக் கட்டுரை என (தெலுகு மொழியில் இருந்து தமிழுக்கு) மொழிபெயர்ப்புத் தளத்தில் சிறப்பாக இயங்கி வருகிறார்.
நம் தினசரி இணையத்துக்கு ரிஷிபீடம் எனும் இதழில் இருந்து கட்டுரைகள், தலையங்கங்களை மொழி பெயர்த்து அனுப்பிய போது, ஆச்சரியமாகவும் மகிழ்வாகவும் இருந்தது. பாரதத்தின் பாரம்பரிய மணம் கமழும் தெளிவான, தீர்க்கமான, தைரியமான கருத்துகளுடன் அமைந்திருந்த கட்டுரைகள் அவை. எழுதியவர் சாமவேதம் சண்முக சர்மா என்று குறிப்பிட்டு அனுப்பிய போதுதான், அவர் குறித்து தெரிந்து கொள்ளும் ஆவலில் தேடத் தொடங்கினேன். மிகச் சிறந்த தேச பக்தர். அது ஒன்றே போதும் நம் மனம் ஈடுபாடு கொள்ள!
பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா – வாக்தேவியின் வரபுத்திரர், சமன்வய சரஸ்வதி போன்ற பல விருதுகளைப் பெற்றவர். தேச பக்தியையும் தெய்வ பக்தியையும் வளர்க்க 1999ல் ‘ருஷிபீடம் பாரத மானச பத்திரிக்கை’ என்ற பெயரில் மாத இதழைத் தொடங்கி, நடத்தி வருகிறார். இவரின் உபந்யாசங்கள் பாரத தேசம் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் நிறைவாக நடந்து வருகிறது. மகாபாரதம், சுந்தரகாண்டம், லலிதா சஹஸ்ரநாமம், ராமாயணம் என, பாரதத்தின் இதிகாச, புராணங்களுடன், அத்தனை பக்தி இலக்கியங்களும் பக்தர்களின் வரலாறுகளும் இவரின் உபந்யாசங்களில் பரிமளிக்கிறது!
இவரின் சொற்பொழிவுகளை ஆதாரமாகக் கொண்டு வெளிநாடுவாழ் பக்தர்கள் ஐந்து முதல் பதினெட்டு வயது வரை உள்ள குழந்தைகளிடம் பாரதப் பண்பாட்டையும் நல்லொழுக்கத்தையும் பேணும் விதமாக ‘துருவ ஞானம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, சிறப்பாக நடத்தி வருகிறார்கள். சிவ ஞானம், குரு ஞானம் ஆகிய அமைப்புகள் மூலம், இளைய தலைமுறைக்கு பாரத பண்பாட்டை பதியவைத்து வருகிறார்.
ருஷிபீடம் சாரிடபிள் டிரஸ்ட் மூலம் கோசாலைகள் அமைத்து பசுக்களை பராமரித்து வருவது, ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்வது, சிறந்த மாணவர்களுக்கு பரிசளித்து உற்சாகப்படுத்துவது, வேத பண்டிதர்களுக்கும் கலைஞர்களுக்கும் ஆண்டு தோறும் விழா எடுத்து கௌரவிப்பது, சிதிலமடைந்த கோவில்களை புனரமைத்து, தூப தீப நைவேத்தியத்திற்கு வசதி செய்வது என நம் பாரம்பரியத் தளத்தில் இயங்கி வருபவர்.
இதன் காரணத்தால், இவருடைய கட்டுரைகள் தமிழ்த் தளத்தில் தொடர்ந்து நம் தளம் வழியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. நிற்க!
மூன்று மாதங்களுக்கு முன், இவருடைய சம்ஸ்க்ருத கவிதை / பாடல்களின் தமிழாக்கத் தொகுப்பை (தெலுகு -> தமிழ்) அனுப்பி, இதை நூலாக்கித் தர முடியுமா என்று கேட்டார் நூலின் மொழிபெயர்ப்பாளரான திருமதி ராஜி ரகுநாதன். உடனே சரி என்றேன். காரணம் – சம்ஸ்க்ருதம் – தமிழ்.
பல்வேறு பணிகளுக்கும் இடையே இதை நூல் வடிவாக்கி, சம்ஸ்க்ருத பாடல்களின் பிழைகள் சரிபார்த்து, தமிழில் ஆர்வமுள்ள அனைவரும் படிக்கும் வகையில் வடிவமைத்து, அட்டையும் தயார் செய்து அனுப்பி வைத்தேன். ‘சிவபதம் – நடராஜ கீர்த்தனைகள்’ சம்ஸ்க்ருதம் – தமிழ் – தமிழில் விளக்கம் என இந்நூல் அச்சாகி வந்துள்ளது.
இந்த நூலின் வெளியீட்டு விழா சிதம்பரத்தில் கடந்த ஜன.20ம் தேதி, சிதம்பரம் தீட்சிதர் பெருமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் இந்தப் பிரதிகள் அங்கிருந்தோர் அனைவருக்கும் விலையில்லா வெளியீடாக அன்புடன் வழங்கப்பட்டுள்ளது.
ஆக, ஆக… இப்பணி, தில்லையம்பலத்தான் திருவடிக்கு, இந்த ஸ்ரீராமானுஜ தாஸன் செய்த சிறுதொண்டு!