4 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை:
ரூ.3.50 கோடிக்கும் அதிகமாக புத்தகங்கள் விற்பனை:
மதுரை தமுக்கம் மைதானத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற மதுரை புத்தகத் திருவிழாவில் ரூ.3.50 கோடிக்கும் அதிகமாக புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.
மதுரை தமுக்கம் மைதானத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசி ஒருங்கிணைப்பில் மதுரை புத்தகத் திருவிழா மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர பி.மூர்த்தி , கடந்த செப்டம்பர் 6ஆம் நாள் தொடங்கி வைக்கப்பட்டது. தமுக்கம் மாநாட்டு மையத்தில் குளிரூட்டப்பட்ட வசதியுடன் 230க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.
தினந்தோறும் மாலை 6.00 மணியளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்குபெற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், தலைசிறந்த எழுத்தாளர், முன்னணி பட்டிமன்ற பேச்சாளர்கள் பங்கேற்ற சிந்தனை அரங்கம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
புத்தகத் திருவிழாவை பார்வையிட வருகை தரும் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப் பட்டிருந்தன.
”புத்தகத் திருவிழா – 2024” தொடங்கிய 06.09.2024 முதல் இன்று (17.09.2024) வரை 700க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சார்ந்த 42,000 மாணவ மாணவியர்கள் உட்பட 4 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர்.
மாணவ மாணவியர்கள் வசதிக்காக , மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. ரூ. 3.50 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
”புத்தகத் திருவிழா – 2024” நிறைவு நாளான இன்று மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல் பங்கேற்று, கடந்த 12 நாட்கள் கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற மாணவ, மாணவியர்கள், கிராமிய கலைஞர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், ரெட் கிராஸ் அமைப்பினர் மற்றும் பொறுப்பாளர்களின் பணியினை பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.