ஆலயப் பராமரிப்பு: எங்கே செல்கிறோம் நாம்?

தமிழகத்தை ஆலயங்களின் கோட்டை எனலாம். தமிழகத்தில் கலையும் கலாசாரமும் வளர்ந்த பண்பாட்டுக் கேந்திரங்கள் ஆலயங்கள். இங்கே மன்னர்களால் கட்டி வைத்த கோயில்கள் இன்றும் அவர்களின் புகழைத் தாங்கிக் கொண்டு, காலத்தை வென்று நின்றுகொண்டிருக்கின்றனர்.
ஓர் ஆச்சரியத்தை நான் கவனிப்பதுண்டு. வடக்கே அரசர்கள் கட்டிக் கொண்ட மாளிகைகளும் அரண்மனைகளும் பெருத்துக் கிடக்க, தென்னகத்திலோ, மன்னர்களின் பெயர் சொல்லும் ஒரு அரண்மனையைக் கூட நம்மால் பார்க்க முடிவதில்லை. மாறாக, அவர்கள் ஆண்டவனுக்குக் கட்டிவைத்த ஆலயங்கள் இன்றளவும் அவர்களின் பெயர்களைச் சொல்லிக் கொண்டு புகழ் பாடிக் கிடக்கின்றன.
அந்த அளவுக்கு ஆலயங்களை நம் மன்னர்கள் மட்டுமல்லாது, மக்களும் போற்றி வந்துள்ளனர். அவை காலத்தால் நிமிர்ந்து நிற்கும் பொக்கிஷங்கள். வளரும் காலத்துக்கு ஏற்ப அவற்றின் உறுதித் தன்மையைக் குலைக்காமல் புனரமைத்து, வழிவழியாய் கொண்டு வந்துள்ளனர் நம் முன்னோர். அவர்கள் பழைமையைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்தினர்.
ஆனால் இன்றோ, எல்லாம் நவீனம். ஆலயத்தைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் இந்து சமய அறநிலையத்துறை எனும் அரசு சார் அமைப்பு. இந்த நிலையில், கோயில்களின் பரமாரிப்பில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.
உண்மையில், கோயில்களில் பழைமையான பல விஷயங்களை (கல்வெட்டுகள், ஓவியங்கள், உள்பட) கும்பாபிஷேகத்தை ஒட்டிய புனரமைப்பின்போது, சிதைத்து விடுகிறார்கள்.
நவீனங்களைப் புகுத்தி விடுகிறேன் பேர்வழி என்று, பல பழைமையானவற்றை திரித்து, மாற்றி, ஆலயத்தை கைமாற்றும் போக்கே கூட நடந்துவிடுவதுண்டு.
அதற்காகத்தான், இந்தப் பழமையைப் பாதுகாக்க, ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு பக்தர் குழு அமைத்து, திருப்பணி நடக்கும்போது, தினமும் கண்காணிக்கச் செய்ய வேண்டும். பெருமான் மீதும், வழிபாட்டு நடைமுறைகளின் மீதும் அத்யந்த பக்தி கொண்டு, எந்த எதிர்பார்ப்பும் இன்றி தன்னலமற்று உழைக்க எல்லா ஊரிலும் ஒரு பக்தர் கூட்டம் உண்டு. உழவாரப்பணி அமைப்புகள் உண்டு. அவர்களையும், இந்து இயக்கங்களைச் சேர்ந்த ஆலயப் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர்களையும் சேர்த்து ஒரு கண்காணிப்புக் குழு, ஒவ்வொரு ஆலய புனரமைப்பின் போதும் போட்டு, கண்காணிக்க வேண்டும்.
இந்து சமய அறநிலையைத் துறையை எக்காரணம் கொண்டும் நம்ப முடியாது. அவர்கள் அரசுக் கட்டுப்பாடு என்பதால் ஏனாதானோ வென்று வேலை செய்வார்கள். நேர்மையாளர்கள் மிகக் குறைவு!
எனவே… இது நடைமுறை சாத்தியமே!
ஆனால், அதற்காக, யுனெஸ்கோ என்ற வெளி நாட்டு நிறுவ்னத்தின் தலையீட்டுடன், அல்லது அனுமதியுடந்தான் திருப்பணிகள் நடத்தப்படவேண்டும், அல்லது அதற்காகக் காத்திருக்க வேண்டும், அல்லது தடை ஏற்படுத்தப் படும் என்னும் அளவுக்கு எடுத்துச் சென்றது, நமது உறக்கத்தின் கொடுமையைச் சொல்கிறது. இது தவிர்க்கப் பட வேண்டும். திருப்பணிக்கு யுனெஸ்கோவா உதவி செய்கிறது?
முன்னதாக உயர்நீதிமன்றம் அமைத்த குழு தேவையற்றது எனும் ரீதியில் அறநிலையத்துறை அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் இந்தக் கருத்தும் முன் மொழியப் பட்டிருக்கிறது அறநிலையத்துறையால்.
இந்த விஷயத்தில் நீதிமன்றம் தனது நிலையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, நமது ஆலயங்களின் பழைமையும் புனிதமும் அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லப்பட உதவும் வகையில் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்…. குறைந்த பட்சம், இந்த அளவுக்காவது கேள்வி கேட்டு, அக்கறை காட்டும் நீதிமன்றத்துக்கு ஒரு சபாஷ்!