September 19, 2021, 10:18 pm
More

  ARTICLE - SECTIONS

  வீரவாஞ்சி சொன்ன அந்த இறுதி வார்த்தை!

  பிள்ளைவாள்! உலகில் பிறப்பதும் இறப்பதும் அவரவர்களுடைய கர்ம வினை. இதைப் பற்றி கவலைப்படவே கூடாது! நம் சுதேச முயற்சி எப்படி இருக்கிறது?

  vanchinathan
  vanchinathan art by j.prabhakar

  தினசரி வாட்ஸ்அப் குழுவில் இந்த வீடியோவை ஒருவர் பகிர்ந்திருந்தார். இதைப் பார்த்ததும் தான், எனக்கு வாஞ்சிநாதன் குறித்த வரலாற்றுத் தகவல் பிழை ஒன்று நினைவுக்கு வந்தது.

  சில நாட்களுக்கு முன், சென்னை வானொலியில் இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு. விஜய திருவேங்கடம் ஏதோ விஷயமாக தொலைபேசியில் அழைத்தார். முன்பெல்லாம் அடிக்கடி பேசுவார். தற்போது சற்று தொடர்பு இடைவெளி ஏற்பட்டு விட்டது.

  எனது வாஞ்சிநாதன் குறித்த கட்டுரையைப் படித்து விட்டு… ஒரு விஷயத்தை நினைவு கூர்ந்தார்.

  47 வருடங்களுக்கு முன், (1973இல்) வானொலிக்காக சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த நினைவலைகளைப் பதிவு செய்ய செங்கோட்டைக்கு வந்திருந்தாராம். வாஞ்சி குறித்த தகவல்களை பலரிடம் தேடித் தேடிப் பார்த்துப் பதிவு செய்திருக்கிறார்.

  அப்போது அழகப்பபிள்ளையை சந்தித்திருக்கிறார். முதிர்ந்த வயதுக் காலத்தில் இருந்த அழகப்ப பிள்ளை சில தகவல்களை நினைவு கூர்ந்து சொல்லியிருக்கிறார்.

  அழகப்ப பிள்ளை அன்றைய செங்கோட்டையை மையமாக வைத்து செயல்பட்ட புரட்சிகர இயக்கமான பாரதமாதா சங்கத்தின் தீவிர உறுப்பினர். சாவடி அருணாசலம் பிள்ளை, ஹரிஹர ஐயர் என செங்கோட்டை உள்ளூர் வாசிகளுடன் நீலகண்ட பிரமசாரி உள்ளிட்ட வெளியூர்வாசிகளும் உறுப்பினர்களாக இருந்து தீவிரமாக செயல்பட்டனர். இவர்கள் எல்லோரும் ஆஷ் கொலை வழக்கில் குற்றவாளிகள்!

  வாஞ்சிநாதன் 1911இல் தன் வாழ்வை முடித்துக் கொண்டார். சாவடி அருணாசலம் பிள்ளை உடல்நலக் குறைவால் 1938இல் காலமானார். அழகப்ப பிள்ளை தமது 80 வயது கடந்து இங்கே வசித்து வந்த காலத்தில், அவரிடம் பேட்டிக்காக ஒரு குழுவுடன் வந்து முதலில் பேசியுள்ளார் விஜய திருவேங்கடம் அவர்கள்.
  அவரும் சிலவற்றைப் பேசியுள்ளார். பின்னர் அவரிடம் நான் நாளை வருகிறேன்… ஒலிப்பதிவுக் கருவிகளுடன். தயாரா இருங்க என்று சொல்லி வந்தாராம்.

  மறுநாள் போனபோது… அதான் நேத்தே சொல்லிட்டேனே எல்லாத்தையும் என்றாராம் அழகப்ப பிள்ளை. அவரிடம் அது உங்களிடம் நான் அனுமதி வாங்க வந்தபோது பேசிக் கொண்டிருந்தது… இனிமேல்தான் அதிகாரபூர்வமாக ஒலிப்பதிவு செய்யணும்.. வானொலியில் ஒலிபரப்ப… என்றாராம்..
  ஆனாலும், அவர் முதல்நாள் பேசிய பல விஷயங்கள் மறதியால் மறுநாள் விடுபட்டுப் போனதாம்!

  அப்படி அவர் சொன்ன விஷயம் தான்… வாஞ்சிநாதன் தாம் அமெரிக்கா போக ஆசை கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டு பதிவான விஷயம்.

  உண்மையில், அவர் தாம் மரிக்கப்போயி என்று சொன்னதாகவும், அதை தவறாகப் புரிந்து கொண்டு, அமெரிக்க போயி என சிலர் சொல்லிவிட்டதாகவும் அழகப்ப பிள்ளை பதிவு செய்திருக்கிறார்.
  செங்கோட்டையில் இப்போதே சில சொற்கள் மலையாளம் கலந்து வருகிறது. ஒரு நூற்றாண்டு முன்னால் எப்படி இருந்திருக்கும்… அதுவும் திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த போது..?! இந்த மலையாளச் சொல்… இப்படி ஒரு அர்த்தத்தை கேட்பவருக்குக் கொடுத்திருக்கிறது!

  இந்த வீடியோ அதைத்தான் நமக்குக் காட்டுகிறது.


  இனி… நான் என் மறந்து போன பக்கங்கள் – நூலில் பதிவு செய்த அந்தத் தகவல்..!


  ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். அந்தக் கனவை நிறைவேற்ற ஒவ்வொருவருமே ஏதேனும் செய்து வருகிறோம். ஆனால் நாட்டைப் பற்றிய சிந்தனையும் வீட்டைப் பற்றிய எண்ணமும் இருந்தால், அதை மீறி தம் சுயநலன் பற்றியே சிந்தித்தால் உலகு அவர்களை எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்காது. அவர்கள் வரலாற்றிலே பதியப்படாமல், பிறந்து மறைந்து போன கோடிக்கணக்கான ஜனத்திரளில் அவர்களும் சேர்ந்து விடுவர். வீட்டைப்பற்றி சிந்திக்காது ஒவ்வொரு கணமும் நாட்டின் நினைவாகவே இருந்த வாஞ்சிக்கும் ஆசைகள் இருந்திருக்கின்றன. அவற்றை அவரே ஒரு சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

  ஒருமுறை செங்கோட்டை அழகப்ப பிள்ளையை வாஞ்சி, திருநெல்வேலியில் வைத்து சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது, வாஞ்சிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்து போனதை எண்ணி வருந்தி அவருக்கு ஆறுதல் சொன்னார் அழகப்ப பிள்ளை.

  அதற்கு வாஞ்சி, “பிள்ளைவாள்! உலகில் பிறப்பதும் இறப்பதும் அவரவர்களுடைய கர்ம வினை. இதைப் பற்றி கவலைப்படவே கூடாது! நம் சுதேச முயற்சி எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.
  “வாஞ்சி நாம் எடுத்துக் கொண்ட பிரமாண வாக்கைக் காக்க ஒவ்வொருவரும் துடிக்கிறார்கள். ஆனால் நீலகண்ட சுவாமிகளிடமிருந்தோ உன்னிடமிருந்தோ சங்கத்தாருக்கு எந்தவித உத்திரவும் வரவில்லையே என்றுதான் காத்திருக்கிறார்கள்” என்றார் அழகப்ப பிள்ளை.

  “பிள்ளைவாள்! நீலகண்டனிடமிருந்து எவ்விதமான பதிலும் வராது. அவன் வடக்கே சென்றுவிட்டான். அவன் உத்திரவுக்குக் காத்திருந்து பயன் இல்லை. நாம் பிரமாணங்கள் எடுத்துக் கொண்டதுபோல், வெள்ளையரை நாட்டை விட்டு ஒழித்துக் கட்ட அவரவர் மனச்சாட்சி படி தீவிரமாக இருக்க வேண்டும்” என்றார்.

  அதற்கு பிள்ளை, “வாஞ்சி ஆரம்பம் முதல் இன்றுவரை நாம் ஒற்றுமையாக இருந்துதான் எல்லாக் காரியங்களையும் செய்து வருகிறோம். இனியும் அப்படித்தான் நடப்போம்” என்றார்.
  அப்போது வாஞ்சி செங்கோட்டை நண்பர்களைப் பற்றி, விசாரிக்கும்போது சாவடி அருணாசலம்பிள்ளையைப் பற்றி விசாரித்தார்.

  அருணாசலம் பிள்ளை டாக்டர் படிப்பிற்காக கல்கத்தாவிற்குச் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும், தானும் பரோடா கலாபவனில் எஞ்சினீரிங் படிப்புக்குச் செல்ல விரும்புவதையும் கூறினார் அழகப்ப பிள்ளை.

  மனத்திற்குள் சிரித்துக் கொண்ட வாஞ்சிநாதன்… எல்லோருமாகச் சேர்ந்து நம் பாரத தேசம் சுதந்திரம் அடைந்ததும் தொடர்ந்து தேசத்திற்காகப் பாடுபடுவார்கள் என்று எண்ணினேன். ஆனால் நாடு விடுதலை அடைவதற்கு முன்பாகவே நமது தோழர்கள் தனித் தனியாகப் பிரிந்து, உத்தியோகத்திற்கும் படிப்பிற்குமாகச் சென்று விட்டால், பிறகு நாட்டிற்காக யார் எப்படி உழைக்க முடியும்? ஆகவே நானும் காளிதேவியின் முன்பு எடுத்துக் கொண்ட பிரதிக்ஞைப்படி, ஆங்கிலேயர்களை ஒழித்துவிட்டு, எங்கேயாவது போய்வர முடிவு செய்யப்போகிறேன்! அது அமெரிக்காவாக இருக்கும்…” என்று தன் ஆசையை வெளிப்படுத்தினார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,430FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-