இதுதான் அடியேன் எழுதப் புகுந்த வியாசத்தின் தலைப்பு. எவ்வளவோ எழுதலாம் தான். ஆனால் உண்மையை அறிந்து கொள்ளும் ஆவலைக் காட்டிலும் பொய்களையே மென்றுகொண்டு வாட்ஸ்அப்பில் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கும் மூடர்கூட்டமே நம்மைச் சுற்றி அதிகம் இருக்கின்ற காரணத்தால், இந்த வியாசத்தால் விளையப் போவது ஒன்றுமில்லை என்று என் சுவாசத்தைச் சற்றே எனக்குள் சுருக்கிக் கொண்டேன்.
செங்கோட்டை நகரில் பேருந்து நிலையம் முன்னுள்ள வீரவாஞ்சி சிலை, 1986ம் ஆண்டில், (வாஞ்சி உயிர்த்தியாகம் செய்த 75ஆண்டில் அவன் நினைவாக) இங்கே நிறுவப் பெற்றது. அப்போதே அது வெங்கலச் சிலை என்று தெளிவாகக் குறிப்பிடப் பட்டிருந்தது. அது குறித்த செய்திப் பதிவுகளிலும் வெங்கலச் சிலை ஒன்று வாஞ்சிக்காக தமிழக அரசால் அப்போது நிறுவப் பெற்றது என்று நாமும் எழுதியிருக்கிறோம்.
ஆனால் பின்னாளில் அந்த வெங்கலத்தின் மினுமினுப்பை நாம் பார்க்கவில்லை. கனத்த வாகனப் போக்குவரத்தின் அடர்த்தியான புகை மண்டலத்தினூடே நின்று கொண்டு, கையை உயர்த்தி, “வந்தேமாதரம், பாரதமாதாவுக்கே வெற்றி” என்று சதாசர்வ காலமும் முழங்கிக் கொண்டிருக்கும் வீரனின் முகத்தில் கட்டுக் கதைகளால் இந்த சமூகம் கரியைப் பூசிக் கொண்டிருக்க , காட்சிப் பொருளாய் நிற்கும் இந்த வெங்கலச் சிலையும் கரி படர்ந்து பொலிவு குன்றி ஏதோபோலானது..!
தற்போது செங்கோட்டை நகர்மன்றத் தலைவி திருமதி ராமலட்சுமியின் சொந்தச் செலவில் இந்தச் சிலையை சுத்தம் செய்து, கசடு நீக்கி, கரியைப் போக்கி, வெங்கலத்தின் இயல்புத் தன்மைக்குக் கொண்டு வந்து, மேற்படி வண்ணம் பூசி இப்போது பசும்பொன்னாய் ஜொலிக்கிறது இந்த பாரதீயனின் முழு உருவச் சிலை.
பல நாட்களாய் திரையிட்டு மூடிக் கிடந்த இந்தச் சிலை, பாரதத்தின் 74ம் ஆண்டு குடியரசு தினத் தொடக்கத்தை முன்னிட்டு, இன்றைய நாளில் புதுப்பொலிவுடன் திறந்து வைக்கப் பட்டது. காலை நேரத்தில் இந்தப் பகுதியைக் கடந்து சென்றபோது கவனம் ஈர்த்தது. கவனத்தைத் தன்மீதே இழுத்துக் கொண்டது.
வாஞ்சியின் ஆக்ரோஷம் வெளிப்படும் முஷ்டி உயர்த்திய கையும் கனல் தெறிக்கும் கண்களின் கூர்மையும் நன்கு தெரியும் படியாய் இருப்பது சிறப்பு. தனிப்பட்ட வகையில் நகர்மன்றத் தலைவிக்கு நம் நன்றிச் செய்தியை செல்பேசியில் அனுப்பி வைத்தேன்!
அன்பன்
செங்கோட்டை ஸ்ரீராம்