spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்புத்தூர் ஸ்ரீவைஷ்ணவ சுதர்ஸனம் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் நினைவாக!

புத்தூர் ஸ்ரீவைஷ்ணவ சுதர்ஸனம் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் நினைவாக!

- Advertisement -
puthur swami article

1992. தென்காசி ஐ.சி.ஈஸ்வரன் பிள்ளை பள்ளியில் +2 படித்துவிட்டு, திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரியில் கணிதம் பயில சேர்ந்திருந்தேன். தென்னூர் பழைய அக்ரஹாரத்தில் மாமா வசித்து வந்தார். அங்குள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் கைங்கர்யம் செய்து கொண்டு, சிம்கோ மீட்டரில் வேலையாயிருந்தார். அவருக்கு உதவியாக சந்நிதி கைங்கர்யமும் செய்து கொண்டு, கல்லூரிக்கு சைக்கிளில் சென்று வந்தேன். விடுமுறை, விசேஷ நாட்களுக்கு என அடிக்கடி, செங்கோட்டைக்கு பெற்றோருடன் இருக்க வந்து விடுவேன். 

செங்கோட்டையில் எங்கள் தெருவில் கிருஷ்ணன் கோயிலை ஒட்டிய வீட்டில் இருந்தார் மாதவன் ஸ்வாமி. வங்கியில் பணி. அமைதி தவழும் முகம். நிறுத்தி நிதானமாக, பொறுமையுடன் பேசுவார். சிறிது கூட பதட்டமோ, கோபமோ அவர் முகத்தில் இதுவரையிலும் கண்டதில்லை. அவர் மனைவி கல்யாணிக்கா குற்றாலம் கல்லூரியில் ஆசிரியப் பணி. தெருவில் எங்கள் இருவர் குடும்பம் மட்டுமே வைணவக் குடும்பம். அடியேனுக்கு அப்போது சமாஸ்ரயனமும் ஆகி, கோயில் நித்யாநுசந்தானமும் பாடமாகியிருந்தது. இருபதைக் கடக்காத அந்த வயதில், பெருமாள், கிருஷ்ணன் கோயிலில் சாத்துமுறை ஒத்தை ஆளாய் கணீர் என சொல்லுவேன். அதனால் அடியேன் மீது மாதவன் ஸ்வாமிக்கு கரிசனமும் ஈர்ப்பும் அதிகமிருந்தது. 

ஊருக்கு வந்திருந்த ஒரு நாள், ஒரு பட்டியலைக்  கொடுத்தார். “நீ காலேஜ் போகும் போது, புத்தூர் அக்ரஹாரத்துக்குப் போ. இந்தப் புத்தகங்களை வாங்கிக் கொள். அடுத்த முறை ஊருக்கு வரும்போது கொண்டு வா” என்றார். அவருக்காக, முதல் முறை புத்தூர் அக்ரஹாரத்துக்குச் சென்றேன். கொடுத்த முகவரியில் ‘வைஷ்ணவ சுதர்ஸனம்’ அச்சுக் கூடம் இருந்தது. பட்டியலைக்  கொடுத்தேன். அந்தப் புத்தகங்களை எடுத்துவரச் சென்ற கால இடைவெளியில், அச்சுக்கூடத்தை முழுதும் சுற்றிப் பார்த்தேன். கட் செய்த பேப்பர்கள் ஒவ்வொரு பாரம்களாக அடுக்கப் பட்டிருக்க, சிலர் ஒவ்வொரு மூலையில் அமர்ந்து கொண்டு, படுவேகமாக அடுக்கிக் கொண்டிருந்தார்கள். அச்சு இயந்திரத்தின் பணியையும், அச்சு மையின் வாசனையையும் முதல் முதலாக அனுபவித்தேன். ஆர்வம் பெருக்கெடுக்க, அங்கிருந்தவர்களிடம் விவரம் கேட்டேன். சலிப்புத் தட்டாமல், சொன்னார்கள். பாரம்களை அடுக்குவது, பின் செய்து பைண்ட் போடுவது வரை அந்த ஒரே நாளில் பார்த்துத் தெரிந்து கொண்டு, புத்தகங்களை வாங்கி வந்தேன்.

(இன்று நினைத்துப் பார்த்தால் சரியாக, முப்பது வருடங்கள் கடந்து விட்டன. பின்னாளில் பத்திரிகை உலகுக்கு வந்து, அச்சுக்கூடங்களுக்குச் செல்லும் போதும், விகடனின் பிரஸ்ஸிலும், தினமணி/எக்ஸ்பிரஸின் பிரிண்டிங் பிரஸ்ஸிலும் நின்று வேடிக்கை பார்க்கும் போதெல்லாம், அந்த ‘முதல் முதல்’ அனுபவமாய் ஸ்ரீவைஷ்ணவ சுதர்ஸனம் அச்சுக் கூடத்தில் நின்று சுவாசித்த அநுபவம் நினைவில் ஒட்டிக் கொள்ளும்!) 

அந்த புத்தகங்களுடன் புதுப்பிக்கப்பட்ட நூல் பட்டியலையும் வாங்கிக் கொண்டு, ஊருக்கு வந்தேன். மாதவன் ஸ்வாமி மீண்டும் ஒரு பட்டியல் கொடுத்தார். மறு முறை வாங்கி வர. இப்படியே நாலைந்து முறை புத்தூர் அக்ரஹாரத்துக்குப் போய் வந்ததில், அங்கிருந்தோருக்கு அடியேன் முகம் பரிச்சயமாகிவிட்டது. அப்படியே ஒரு நாள், “இந்த புத்தகத்தில் எழுதறாரே, இந்த ஸ்வாமி எங்கே இருக்கிறார்?  பார்க்க முடியுமா?” என்று விசாரித்தேன். இரு வீடு தள்ளி, கைகாட்டினார்கள். போனேன். மாடியில் இருந்தார். தண்டனிட்டேன். விவரம் சொன்னேன். தென்னூர் பழைய அக்ரஹாரத்தில் இருக்கிறேன் என்றதும், ஓரிருவரைப் பற்றி விசாரித்தார். கல்லூரிப் பருவம் என்பதால், கொஞ்சம் கலகலவென நகைச்சுவை தெறிக்கப் பேசுவேன் என்பதால் அச்சமின்றி உரையாடிக் கொண்டிருந்தேன். 

குறிப்பாக, ஆசார்யன் குறித்து விசாரித்தார். அடியேனது சிக்கல்  நிலையைச் சொன்னேன். சந்நிதி திருவாராதனக் கைங்கர்யம் செய்ய வேண்டிய தேவை இருந்ததால், என் மாமா, என் அப்பாவிடம் ஃபோனில் குடும்பத்து ஆசார்யன் குறித்து கேட்க, அவரும் ஸ்ரீரங்கம் அண்ணன் ஸ்வாமி என்று சொல்ல, அதை வைத்து எவரிடமோ விசாரித்து, ஸ்ரீரங்கம் கீழ உத்தர வீதி, கோயில் கந்தாடை அண்ணன் திருமாளிகைக்கு அழைத்துச் சென்று, ஒரு நன்னாளில் சமாஸ்ரயணம் (பஞ்ச சம்ஸ்காரம்) செய்து வைத்தார். ஆனால் பின்னாளில் குடும்ப ஆசார்யன் சிறுபுலியூர் சுத்தஸத்வம் திருவாழி அண்ணன் என்று தெரிந்தது. இப்போது என்ன செய்வது? அடியேன் எங்கே போய் ஆச்ரயிப்பது, இங்கா? அங்கா? 

இப்படி நகைச்சுவையாகக் கேட்டபோது ஸ்வாமி சொன்னார், “யாரிடம் முத்ராதிகளையும் உபதேசங்களையும் பெற்றுக் கொண்டாயோ, அங்கே தானே ஆச்ரயித்து ஆசார்யன் எனக் கொள்ள முடியும்!” என்றார். அப்போதே அடியேன் குடும்பத்தில் இருந்து தனித்து வந்துவிட்டதாய் ஓர் எண்ணம் எழுந்தது. 

இப்படி கல்லூரிக் காலம் முடிந்த 95 வரையிலும், பின் திருச்சி சேஷபுரத்தில் தங்கி ’மெடிக்கல் ரெப்’ பணி செய்த இரு வருட காலத்திலும் என அந்த நான்கு வருடங்களில் சில முறை ஸ்வாமியிடம் தண்டனிட்டு உரையாடும் பாக்கியம் அமைந்தது. சேமித்த பணத்தில், வார்த்தாமாலை, முமுக்ஷுப்படி வ்யாக்யானம், திருப்பல்லாண்டு, திருப்பாவை வியாக்யானங்கள், ஸுதர்ஸனர் பதில்கள் என சில புத்தகங்களை வாங்கிப் படித்தேன். பின் ஊர் திரும்பி, சென்னை சென்று, விஜயபாரதம், கலைமகள்/மஞ்சரி என இதழ்களில் பணி செய்துவிட்டு,  விகடன் பிரசுரத்தில் பொறுப்பாசிரியராக இருந்தபோது, சுமார் பத்து வருடங்கள் கழித்து 2007ல் மீண்டும் புத்தூர் அக்ரஹாரம் சென்றேன்.  

ஸ்வாமியை தண்டனிட்டேன். பழைய விருத்தாந்தங்கள், கலைமகள், விகடன் அனுபவங்கள் என்று பேசிக் கொண்டிருந்தேன். இரண்டு இதழ்களுக்கும் அவர் எழுதிய கண்டனங்கள், வைணவ உலகில் பிரசித்தம். குறிப்பாக காஞ்சி மடம் குறித்த பிரசார உத்திகள், திருமாலை இகழ்ச்சியாகக் காட்டும் கட்டுக் கதைகள், தல புராணங்கள் இவற்றுக்கு அவர் அளித்த பதில்களை எல்லாம் அவ்வப்போது படித்து வந்தேன். இன்று பலரும் சொல்வது போன்ற ‘சமரசமில்லாப் போராளி’ என்ற வாக்கியத்தின் ஒரே உண்மை உருவாக  அடியேன் கண்களில் புத்தூர் ஸ்வாமியே தெரிந்தார்!

அப்போது அடியேன் எழுதியிருந்த இரண்டு புத்தகங்களை அவரிடம் அளித்தேன். ஒன்று, ஸ்ரீ சுதர்ஸன வழிபாடு. அடுத்தது தமிழ் மறை தந்த பன்னிருவர். இரண்டையும் பார்த்துக் கொண்டே வந்தார். தயாரிப்பு நன்றாக இருக்கு. நல்ல அச்சு. வரைபடங்கள், எல்லாம் தேவைதான். வெகுஜனங்களுக்கு ஆர்வமாயிருக்கும். ஆனால் முக்யமான அர்த்த விசேஷத்தில் கோட்டை விட்டுவிட்டாய். இதுபோன்ற வழிபாடுகளை எல்லாம் ப்ரபன்னர்கள், முமுட்சுகள் என ஸாதனை செய்வோர் விலக்குதல் நலம். ஆழ்வார் பாசுரங்களில் சுஜாதா டைப் விளக்கங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. நீ ஸ்ரீவைஷ்ணவன். நம் சம்பிரதாயத்தை ஒட்டி எழுத வேண்டும். அதை பிறகு சொல்கிறேன்” என்றார்.  அப்போதே அவர் உடல் தளர்ந்து ஓய்வில் இருந்தார். மேற்கொண்டு தொந்தரவு செய்யக் கூடாதென விடைபெற்றுத் திரும்பினேன். 

பின்னர் வெளிவந்த இரு இதழ்களில் (பிப்.2008, மே 2008) நூலுக்கான மதிப்புரைகளை எழுதியிருந்தார். அவருக்கேயுரிய பாணியிலான விமர்சனம். எங்கே குட்ட வேண்டுமோ அங்கே குட்டி, என்ன அடியேனுக்குப் படிப்பிக்க வேண்டுமோ அதைத் தெளிய வைத்து தம்மை ஆசான் என்ற நிலையில் அழகாகப் பொருத்திக் கொண்டார். 

வைணவனாயிருந்தாலும், அடியேன் பள்ளிப் பிராயத்திலேயே சங்கத்தின் ஷாகாக்களுக்கு அதிகம் சென்றதனாலும், ராம ஜன்ம பூமி இயக்கத்தில் பெரிதும் ஈடுபாட்டுடன் கரைத்துக் கொண்டதாலும், சமரச மனப்பான்மை உள்ளளவில் ஊறியிருந்தது. ஆனால், அதனை சமய அர்த்த விசேஷங்களுக்குள் புகுத்திப் பார்க்கக் கூடாது என்ற பிரக்ஞை, ஸ்வாமியின் ‘மெல்லக் கடிதோச்சி’ மிளிர்ந்த சொற்களால் அடியேனுக்கு மீண்டு வந்தது. 

தற்போது ஒரு புத்தகம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அதற்காக மீண்டும் ஸ்வாமியின் எழுத்துகளைப் படித்தேன். சங்கரரும் வைஷ்ணவமும் என்ற அவர் தொகுப்பு, அவர் அளித்த அர்த்தபஞ்சகமாகிய ஐம்பொருள் அறிவு விளக்கம் இவற்றை மீண்டும் சம்ப்ரதாய நோக்கில் ஊன்றிப் படித்தேன்.  அடியேன் எழுதும் நூலில், ஓர் அத்யாயத்தில் ஸ்வாமியின் விளக்கத்தை பிழையில்லாமல்  குறைதலின்றி பயன்படுத்திக் கொண்டேன். 

இப்போது புத்தூர் ஸ்வாமியின் நூற்றண்டு விழா நிகழ்ச்சிகள் குறித்த செய்திகள், படங்களைப் பார்த்த போது, கலந்து கொள்ள ஆசையாகத்தான் இருக்கிறது. ஸ்வாமியின் கருத்துகளை கற்றறிந்தோர் வாயிலாகக் காதாரக் கேட்கும் பாக்கியம் மிகப் பெரிது. காலச் சூழல் அதனைக் கிட்டாது கடத்திக் கொண்டிருக்கிறது.   


 அடியேனின் இரு நூல்களுக்கும் ஸ்வாமி, சுதர்ஸனத்தில் எழுதிய விமர்சனத்தை அடிக்கடி படித்து ஸ்வாமியை நினைவில் கொள்வேன். அவை… 


தமிழ்மறை தந்த பன்னிருவர்
பக்கங்கள்: 192 விலை ரூ.55,
நூலாசிரியர்: செங்கோட்டை ஸ்ரீராம்
விகடன் பிரசுரம் 757, அண்ணா சாலை, சென்னை 2

விசதவாக் சிகாமணிகளான மணவாளமாமுனிகள் அருளிய உபதேச ரத்னமாலையை அனுசரித்து ஆழ்வார்கள் அவதாரம் ஏன் ஏற்பட்டது? பொய்கையாழ்வார் தொடக்கமாக திருமங்கையாழ்வார் ஈறாக ஆழ்வார்கள் வரலாறு, ஆழ்வார்கள் பாசுரங்களைத் தொகுத்துத் தந்த நாதமுனிகள் முதலிய பதினான்கு தலைப்புகளில் ஆழ்வார்களின் வரலாறும் அவர்கள் அருளிய பாடல்களின் பொருட்செறிவும் மிகவும் எளிய இனிய தமிழில் இந்நூலில் தரப்பட்டுள்ளது. ஆழ்வார்களின் திருவுருவப்படங்களைக் கொண்ட வண்ண அட்டைப்படம், ஒவ்வொரு ஆழ்வாரின் வரலாற்றை விளக்கும் அத்தியாயத்தில் அவரது திருவுருவப் படம் ஆகியவற்றோடு உயர்ந்த தாளில் சிறப்பாக அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

நூலாசிரியரின் முகவுரையில், “திருச்சியில் கல்லூரியில் படித்த காலத்தே என்னுள் எழுந்த ஐயங்களைத் தீர்க்கும் அருமருந்தாக விளங்கியவர் வைணவப் பெரியவர் புத்தூர் ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார்” (ஸுதர்ஸனர்) என்று எழுதியுள்ளதும் குறிக்கொள்ளத் தக்கது. விகடன் போன்ற பிரபல பதிப்பகத்தின் ஆதரவில் இந்த நூல் வெளிவந்துள்ளது ஆயிரக்கணக்கான வாசகர்கள் வைணவ ஆழ்வார்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை. நூலாசிரியரின் முயற்சி பாராட்டுக்குரியது.

இருப்பினும் ஒரு விஷயத்தை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. பக்கம் 25ல் பொய்கையாழ்வாரை “சைவ வைணவ ஒற்றுமை பேசியவர்” என்று குறிப்பிட்டுள்ளதும், அதற்குச் சான்றாக அவர் அருளிய முதல் திருவந்தாதியில் அரன் நாரணன் நாமம்(5) என்னும் பாட்டுக்கு ஒரே தெய்வத்துக்கு (அரன் நாரணன் ஆகியவை உனது) பெயர்கள், எருது கருடன் உமது வாகனங்கள், ஆகமமும் வேதமும் உன் பெருமை பறை சாற்றும் நூல்கள், கைலாய மலையும் திருப்பாற்கடலும் உன் இருப்பிடங்கள் என்று பொருள் உரைத்திருப்பது பொருந்தாது.

இப்பாசுரம் சிவனின் தாழ்ச்சியையும் அவனோடு ஒப்பிடும்போது ஸ்ரீமந் நாராயணனின் மேன்மையையும் விளக்குகிறது. அதாவது ஒருவனுக்கு அரன் என்று பெயர், அவனுக்கு ஞானமற்ற எருது வாஹனம், அவனைச் சொல்லும் நூல் வேத விருத்தமான அர்த்தங்களையும் சொல்லும் சைவாகமம். அவன் வசிக்கும் இடம் கடினத் தன்மையுடைய கைலாய மலை. அவனது தொழிலோ அழிப்பது. ஆயுதமோ வேல், அவனுடைய வடிவு எரிக்கும் நெருப்பு போன்றது என்று சிவனுடைய தாழ்ச்சியை வர்ணிக்கிறார்.

பொய்கையாழ்வார் அதுபோல் சிவனுள்ளிட்ட அனைத்துலகையும் படைத்த பரம்பொருளுக்குப் பெயர் நாராயணன், அவனுக்கு வாஹனம் வேதமயமான கருடன். அவனைப் பேசுவது அநாதியான வேதம். அவன் வசிக்கும் இடம் குளிர்ந்த கடல், அவனுக்குத் தொழிலோ அனைவரையும் ரட்சிப்பது, அவனுடைய ஆயுதம் அருளார் திருச்சக்கரம். அவனது வடிவு களைப்புகளை ஆற்றும் கார்மேகம் போன்றது.

இப்படிப்பட்ட இருவரில் அனைத்துலகையும் போலே சிவனும் எம்பெருமானுக்கு சரீரம் என்பதே இப்பாசுரத்தின் உண்மைப் பொருள். “வியவேன் திருமாலையல்லாது தெய்வம் என்றேத்தேன் வருமாறென் நம்மேல் வினை” (64) என்று பாடிய ஆழ்வார் மீது தற்காலத்தில் பிரசாரம் செய்யப்பட்டு வரும் சமரசவாதத்தை ஏறிடுவது தகாது.

நூலாசிரியர் ஆழ்வார் சமரசம் பேசுவதாக எடுத்துக்காட்டியிருக்கும் மற்ற பாடல்களுக்கும் எம்பெருமான் சரீரத்தையுடையவன் (சரீரி) ஏனைய உலகமனைத்தும் அவனுக்கு சரீரம் என்ற விசிஷ்டாத்வைத வேதாந்தக் கருத்துக்கு இணங்கப் பொருள் கொள்ள வேண்டும். அடுத்த பதிப்பில் இக்குறைகள் நீக்கப் பட்டு, ஆழ்வார் பாசுரங்களுக்கு முன்னோர் மொழிந்த முறையில் உண்மைப் பொருள் உரைப்பார் என்று நம்புகிறோம்.

– ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம் – பிப்ரவரி 2008


மகா சுதர்ஸன வழிபாடு:

உலகனைத்தையும் ஆக்கி அளித்து அழிக்கும் எம்பெருமானான ஸ்ரீமந்நாராயணனையே அடையும் பேறாகவும், அவனை அடைவதற்கு அவனையே உபாயமாகவும் எண்ணியிருக்கும் சரணாகதி நிஷ்டர்களுக்கு இம்மை மறுமை நலன்களை அவனே நல்குவான்.

இத்தகைய உறுதியான நிலையை எட்டாதவர்கள் தங்களது இம்மைப் பலன்களுக்காக அவனால் படைக்கப்பட்ட சிறு தெய்வங்களின் காலில் விழாது, அவனது கையார் திருச்சக்கரத்தை வழிபடும் பழக்கமும் பெருகியுள்ளது.

அத்தகையோருக்கு வழிகாட்டும் வண்ணம் வடிவார் சோதி வலத்துறையும் திருச்சக்கரத்தாழ்வாரின் மகிமை, அவரைப் பற்றிய புராண வரலாறுகள், தத்துவங்கள், ஸுதர்சனரைப் பிரதானமாகக் கொண்டு வழிபடும் ஸந்நிதிகள் அமையப் பெற்ற திருத்தலங்கள், ஆழ்வார்கள் தங்கள் பாசுரங்களில் ஸுதர்சனாழ்வானைப் பாடியுள்ள இடங்கள், ஸுதர்சன ஹோமம், பலன் தரும் ஸுதர்சன மந்திரங்கள், ஸுதர்சனரைப் பற்றிய துதி நூல்கள் ஆகியவை இந்நூலில் ஆசிரியரால் மிகவும் இனிய, எளிய தமிழில் விளக்கப்பட்டுள்ளன. இந்நூலைப் பெற்றுப் படித்து ஸுதர்சனரின் அருளுக்கு அன்பர்கள் இலக்காகலாம்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe