spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்உங்களோடு ஒரு வார்த்தைபூஜ்யஸ்ரீ கிரித் பாய் ஜியுடன் ஒரு பேட்டி

பூஜ்யஸ்ரீ கிரித் பாய் ஜியுடன் ஒரு பேட்டி

சென்னை, ஆழ்வார்பேட்டை Tag centerல் செப்டம்பர் மாத கடைசி பத்து தினங்கள் மாலை வேளையில் நிகழ்ச்சி…
ஒரு வித்தியாசம், நிகழ்ச்சி முழுவதும் ஆங்கிலத்திலேயே நடைபெற்றது. கூடவே, ஹிந்தியில் ஒரு பஜனை கோஷ்டி, இடையிடையே வாந்தியக் கருவிகளுடன் நம்மை இசையில் தோய்ந்துபோக வைக்கிறார்கள். பகவத்கீதை சுலோகங்கள் பாடல் வடிவில் நம்மை மகிழ்விக்கின்றன.

கீதா ஞான யக்ஞம் என்ற பெயரில் இந்த உபந்நியாசத்தை நிகழ்த்தியவர் பூஜ்யஸ்ரீ கிரித்பாய்ஜி.1962, ஜூலை 21-ல், குஜராத் மாநிலம் போர்பந்தரில் பிறந்தவர். வல்லபாசார்ய சம்பிரதாய வைணவக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு, வல்லபகுரு கோஸ்வாமி ஸ்ரீ கோவிந்தராய்ஜி உபதேசம் நல்கினாராம். அப்போது கிரித்பாய்ஜிக்கு வயது ஏழு. பாரதப் பாரம்பரியம், மத சம்பிரதாயம், கலாசாரம் ஆகியவற்றைக் கற்றுள்ளார்.அதன்பிறகு ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீராமசரித மானஸ், ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம், ஸ்ரீமத் பகவத்கீதை ஆகியவற்றை இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு உகந்த முறையில் பாமரருக்கும் எளிமையாகப் புரியும் வண்ணம் கொண்டு செல்ல எண்ணி, செயலில் இறங்கினாராம்.

1987&ல் ஸ்ரீஹனுமத் ஜயந்தி அன்றுதான் இவரது முதல் உரைநிகழ்ச்சி நடந்தது. 90&ல் ராமாயாணமும், 91&ல் ஸ்ரீமத் பாகவதமும் சொல்லத் தொடங்கியிருக்கிறார்.லண்டனில் இவர் தங்கியிருந்தபோது, இவரது உரைகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. மொரிஷியஸ், தென் ஆப்பிரிக்கா, கென்யா, பாகிஸ்தான், இத்தாலி, ஹாலந்து போன்ற நாடுகளுக்குச் சென்று, நமது நாட்டின் பாரம்பரியச் சிறப்புகளை எளிமையான முறையில் எடுத்துச் சென்ற பெருமை பெற்றார்.முதன்முறையாக தென் இந்தியாவில் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்ததாம்; அதுவும் ஒரு பஜனை கோஷ்டியாக இணைந்து!

஑஑குஜராத்தி மற்றும் ஹிந்தி பேசும் மக்கள் மட்டுமல்லது, தமிழ் மக்களும் அதிகளவில் கலந்துகொண்டது இந்த நிகழ்ச்சியை வெற்றியடையச் செய்ததுஒஒ என்றார் ஸ்ரீகிரித்பாய்ஜி. அவருடன் பேசக் கிடைத்த சந்தர்ப்பத்தில் நான் பெற்றதிலிருந்து…. கேள்வி&பதில் பாணியில் தருகிறேன்.

* படித்தவர்களே சிரமப்பட்டு அறிந்துகொள்ளும் கீதைத் தத்துவங்களை நீங்கள் எப்படி எளிமையாக்கிக் கூறுகிறீர்கள்..!

# துன்பங்கள் நம்மை வந்து துரத்துவது இந்த உலக வாழ்வில் சகஜம்தான், ஆனால் அவற்றைக் கண்டு துவண்டு விடாமல் நம்மை நாமே தேற்றிக் கொண்டு அடுத்த இலக்கை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டும். இழப்பு ஏற்படுவது கண்டு வருத்தப்படக்கூடாது. ஑தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்றேஒ என்ற எண்ணம், மன உறுதியைக் குலைக்காது இருக்கும்.

அர்ஜுனனைக் கொல்ல வந்தது கர்ணன் எய்த சக்தி ஆயுதம். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தமது கால் விரலால் தேரை அழுந்தச் செய்து, அர்ஜுனன் தலையை நோக்கி வந்த அம்பு, தலைக் கிரீடத்தோடு போகும்படி செய்துவிடுகிறார். அர்ஜுனன் தலை தப்பிவிடுகிறது. இறைவனை நம்பும் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் கஷ்டங்களும் இழப்புகளும் ஏதோ சிறிய அளவிலேயே ஏற்படுகிறது.

பெரிய ஆபத்திலிருந்து இறைவன் காப்பாற்றுகிறார்.50 ரூபாயை பிக்பாக்கெட்காரனிடம் பறிகொடுத்தவன் நல்லவேளை 500 ரூபாய் போகாமல் இருந்ததே என்று தேற்றிக் கொள்வது, அவனைச் சோர்வடையச் செய்யாமல், அடுத்த பணிக்குத் தயாராக்கும். வாழ்க்கையை இப்படி நோக்கப் பழகிக் கொண்டால் துன்பமும் இழப்பும் ஒரு பொருட்டாகத் தெரியாது.

பீஷ்மர் போன்ற பெரியவர்களை, போர்க்களத்தில் கண்ட அர்ஜுனன் அறிவு மயங்குகிறான். கிருஷ்ணர் அவனுக்கு உபதேசிக்கிறார். அவன் தெளிவடைகிறான். வாழ்க்கை சங்கிலித் தொடர் போன்றது. பரம்பரையும் அத்தகையதே. கிட்டத்தட்ட கோகோ விளையாட்டு போன்றது. எதிரும் புதிருமாக, வரிசையாக விளையாடுபவர்கள் உட்கார்ந்திருப்பர். ஒருவர் எழுந்து ஓடினால், அடுத்தவர் அங்கே உடனடியாக அமர்ந்துவிடுவார். காலியாக ஒரு இடம் இருக்காது, எப்போதும் அந்த வரிசை நிரம்பியே இருக்கும். அதுபோல் எந்த இடத்திலும், எப்போதும் எதுவுமே காலியாக இருப்பதில்லை. ஒருவர் போனால் வேறொருவர் அந்த இடத்தை நிரப்புகிறார். தாத்தா இடத்தில் அப்பா; அப்பா இடத்தில் நாம்; நம் இடத்தில் நாளை நமது குழந்தைகள்…

இப்படி பரம்பரை சென்று கொண்டிருக்கும். இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் மனத்தில் துன்பத்திற்கு இடமில்லை.

* இறைவனை அடைய எத்தனையோ மார்க்கங்கள் நம் மரபில் உள்ளதே! அதை எப்படி சரியாகத் தேர்ந்தெடுப்பது?

#ஒவ்வொரு பூட்டுக்கும் ஒவ்வொரு சாவி உள்ளது. ஒரே சாவி நிறையப் பூட்டுகளைத் திறப்பதானால், அங்கே பூட்டும் தேவையில்லை; சாவியும் தேவையில்லை. பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், கர்ம மார்க்கம் என்று எத்தனையோ வழிகள் இருந்தாலும், அந்தந்த வழிமுறையில் சரியான தேர்ச்சியுடன் அந்தந்த மார்க்கங்களைப் பின்பற்ற வேண்டும். பக்தி செலுத்துபவருக்குக் கர்மம் ஒத்துவராமல் இருக்கலாம். கர்மத்தில் மட்டுமே கரைகண்டவருக்கு ஆழ்ந்த பக்தி கைவராமல் போகலாம். பக்தி மார்க்கத்திற்குப் பொருந்தும் வழிமுறை, கர்மத்திற்கோ, ஞானத்திற்கோ வழியாகாது.

* சம்பிரதாயம் ஒன்றாக இருந்தாலும் ஒருவரின் செயல்பாடுகள் மற்றவருக்கு பைத்தியக்காரத்தனமாகத் தோன்றுகிறதே!

#தமது குழந்தையின் மீது ஒரு தாய் செலுத்தும் அன்பை சாதாரண மனிதர் புரிந்து கொள்வது கடினம். குழந்தையின் மீதான அன்பால் தாய் செய்யும் செயல்கள், பார்க்கின்ற நமக்கு பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும். சுவாமி சைதன்யர், பக்த மீராபாய் போன்றவர்கள் கிருஷ்ணன் மீது செலுத்திய பக்தி நமக்குப் பார்க்க வித்தியாசமாகத் தோன்றும். ஆனால் அவர்களுக்குத்தானே தெரியும், இறைவன் மீது அவர்கள் கொண்டிருக்கும் அன்பின் வலிமை! கிருஷ்ணரிடம் முழுவதுமாகச் சரண் அடைந்தால் மட்டுமே, நமக்கு அனைத்தும் புரியும்! நமது மரபில்தான் இத்தகைய வித்தியாசமான வழிபாடுகளுக்கு இடமிருக்கிறது.

* இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், ஆன்மிக எண்ணத்தை மனத்தில் வைத்துக் கொண்டு, குடும்பத்திலும் லௌகீக வாழ்க்கையிலும் ஈடுபட ஏது நேரம்? எப்படி ஈடுபடுவது?

#கம்பி மீது நடப்பவன், கீழே விழுந்துவிடாமல் இருக்க, பெரியகம்பு ஒன்றை வைத்துக்கொண்டு நடப்பான். ஒரு பக்கத்தில் சாய்வதுபோல் தோன்றினால், கம்பை வைத்துக்கொண்டு சமன்படுத்திக் கொள்வான். ஆன்மிகமும் வேண்டும்; பரம்பரை தழைக்க குடுபத்திலும் கவனம் வேண்டும். எல்லாவற்றுக்கும் அளவுகோல் இருக்கிறது. அப்போதுதான் கம்பி மீது நடக்கும் வாழ்க்கைப் பயணத்தில் இலக்கை அடையமுடியும். எனவே ஆன்மிகத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என்று சொல்லாதீர்கள். நமது வாழ்க்கையின் ஒவ்வொரு செயல்களிலுமே ஆன்மிகம் அடங்கியுள்ளது.ஒரே அறையில் இருவர் வாழ்கிறோம். கணவன் & மனைவி என்று கொள்ளலாம். ஒருவருக்கு ஆன்மிக நாட்டம்; மற்றவருக்கு இல்லை. எனில் ஒருவர் கருத்தை மற்றவரிடம் திணிக்க முயலாதீர்கள். உங்கள் செயல்பாடுகளை நீங்கள் சரியாகச் செய்யுங்கள். உங்கள் ஆன்மிகச் செயல்பாடுகளை தினமும் கவனித்துக் கொண்டிருக்கும், அடுத்த நபர் நிச்சயம் அவராகவே உங்கள் வழிக்கு வந்துவிடுவார். ஆன்மிகத்திற்கு அத்தகைய சக்தி உண்டு.

– கிரித்பாய்ஜியின் வித்தியாசமான பார்வை மனத்தை ஈர்த்தது. கீதைத் தத்துவ சாரத்தை, இன்றைய வாழ்வியலுக்கு ஏற்ப மக்களுக்குத் தந்த பாங்கு, தமிழன்பர்களையும் ரசிக்க வைத்தது.

interview by sri. sriram

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe