உள்ளங்களைக் காட்டிக் கொடுத்த வெள்ளம்!

தனி ஒருவனாய் என்ன செய்துவிட முடியும்?

ஊரே தவிக்கிறது. முடங்கிப் போன பொதுப் போக்குவரத்து. ஆட்டோ, கார், டாக்ஸி இத்யாதிகள் எல்லாம் முடக்கிப் போட்டுவிட்டார்கள். ஒன்றிரண்டு ஆட்டோக்காரர்களும்கூட ஐநூறும் ஆயிரமும் வசூலித்து தங்கள் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்திக் கொண்டார்கள்.

டிச.1 இரவு முழுவதும் தாம்பரம் – பொத்தேரி நடந்து சென்றதில், மக்களின் தவிப்பைப் புரிந்து கொண்டிருந்தேன். எப்படியாவது சுற்று வட்டத்தில் உள்ள தங்கள் கிராமங்களுக்கு, ஊர்களுக்கு சென்று சேர்ந்துவிட வேண்டும் என்று துடியாய்த் துடித்தார்கள் ஒவ்வொருவரும்.

எதிர் ப்ளாட் பையனை செங்கல்பட்டில் இருந்து அழைத்து வந்து விட்டதும் எண்ணம் தீவிரமடைந்தது. வண்டியில் பெட்ரோல் குறைவாக இருந்தது. பங்க் போனால்… கயிறு கட்டப்பட்டிருந்தது. வேறு வழி… மறைமலைநகருக்கு ஓட்டினேன். இல்லை… சிங்கப்பெருமாள் கோவிலுக்கு முன்னுள்ள பங்க்கில் கிடைத்தது. 5 லிட்டர் போட்டுக் கொண்டு வெளியில் வந்தேன்.

அருகில் கிராமத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கையை நீட்டினார். தம்பி… என்னை கூடுவாஞ்சேரியில் விட்டுடுங்களேன்…

அதில் இருந்து துவங்கிய பயணம்… அடுத்த நாள் மதியம் வரை தொடர்ந்தது. சின்னச் சின்ன இடைவேளைகளைக் கடந்து!

எஸ்.ஆர்.எம். பல்கலை விடுதி மூடப்படுவதாக வந்தது அறிவிப்பு! வாட்ஸ் அப் மெசேஜ் வந்தது. நெடுஞ்சாலை வழியாகச் செல்பவர்கள் தங்குவதற்கு எஸ்.ஆர்.எம். பல்கலை திறந்துவிடப்பட்டிருக்கிறது என்று. ஆனால்… பாவம்… தங்கியிருந்த மாணவர்கள் வெளியே துரத்தியடிக்கப்பட்டிருந்தார்கள். தவித்து நின்றனர் மாணவர்கள். முதல்முறையாக போக்குவரத்து விதியை மீறி மூன்று பேர், நான்கு பேர் என மாணவர்களுடன் பெருங்குளத்தூருக்கும் செங்கல்பட்டுக்கும் நாலைந்து முறை சென்று வந்தேன்!

தனி ஒருவனால் உடனடியாகச் செய்யமுடிந்தது இதுதான்!

அடுத்த நாள் தொடங்கி ஊரெல்லாம் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப் பட்டிருந்தன. உதவும் உள்ளங்கள் வெளியூர்களில் இருந்தெல்லாம் அனுப்பி வைக்க, கடைகளில் இருப்பில் இருந்த பொருள்கள், காய்கறிகளை அநியாய விலைக்கு விற்றுக் கொண்டிருந்தனர் அடையாறு ஆற்றின் கரையோர கடைக்காரர்கள் பெரும்பாலோர்… பால் பாக்கெட் ஒரு நாளில் கெட்டுப் போய் விடும்தான்! ஆனால் கிடைத்ததை நேர்மையாக விற்க இந்தக் கடைக்காரர்களுக்கு மனசில்லை! அரை லிட்டர் நூறு ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தார்கள். தயிர், பிஸ்கட், கறிகாய் எல்லாம் விலை எகிறிக் கொண்டிருந்தது.

வெவ்வேறு ஊர்களில் இருந்து வரும் நிவாரணப் பொருள்களில் அம்மா படம் ஒட்டுவதில் அக்கறையாய் அதிமுக.,வினர்.

டிவி கேமராக்களையும் ஸ்டூடியோக்களையும் ஆக்கிரமிக்கும் ஒரே நோக்கத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள்!

குட்டியானை வண்டியில் இரண்டு அண்டாக்களில் உணவைக் கொண்டு வந்து… அதில் இயக்கத்தின் கொடியை ஏழு அடிக்குப் பறக்கவிட்டபடி அண்ணாசாலையில் அங்கும் இங்கும் அலைபாய்ந்தவர்கள்…

மதம் கடந்த மனிதம் என்று எப்படியாவது ஒரு காட்சியைக் காட்டி, அழ வைத்து விட வேண்டும் என்ற நோக்கில் சீரியல் இயக்குனர்களாகிவிட்ட டிவி செய்தியாளர்கள்…

பின்னணியில் சோகம் இழையோடும் அழுகை இசையைக் கொடுத்து காட்சித் தொகுப்புகளை அளித்து… சோகத்தில் தவிக்கும் மக்களை மேலும் சோகத்தில் அழ வைத்து விடும் ஒரே நோக்கத்தில் செய்தி சேனல்கள்…

இயல்பு நிலைக்கு திரும்பியது என்று ஒரு சேனல்… சென்னையே இடுகாடாகிவிட்டதாக ஒரு சேனல்…

ஆனால்…

ஜாபர்கான்பேட்டை, எம்.ஜி.ஆர்.நகர், சைதை, கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில்… நான் கண்ட காட்சி பெரும் நம்பிக்கையைத் தந்தது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை. விளையாடிக் கொண்டிருக்காமல்… கிரிக்கெட்டும் சினிமாவும்தான் எங்கள் அடையாளம் என்று வைத்திருந்த அடையாளங்களை உடைத்துக் கொண்டு… 20 வயதுக்குக் குறைந்த இளைய திலகங்கள் அங்கும் இங்கும் பரபரப்பாய் ஓடி ஓடி… சாப்பாட்டுப் பொட்டலங்களையும் பாய், போர்வை, நாப்கின், கொசுவர்த்தி, தீப்பெட்டி, மெழுகுவர்த்தி இத்யாதிகளை வாங்கிக் கொண்டு… வயதானவர்களுக்குக் கொண்டு சென்று கொடுத்துச் சென்ற உற்சாகக் காட்சிகள்…

டி.வி. கேமராக்களை ஒரு பொருட்டாக மதிக்காமல்… தங்கள் போக்கில் உதவிகளைச் செய்து கொண்டிருந்த முகம் காட்ட விரும்பாத தன்னார்வ மனிதர்கள்…

எல்லாம்தான் பார்த்தாயிற்று!

சென்னை வெள்ளம், பல உள்ளங்களை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது!

பேனர் கலாசாரத்தை வளர்த்து… கட் அவுட் கலாசாரத்தை வளர்த்து… சுவர் விளம்பர கலாசாரத்தை வளர்த்து… சுவர்களில் பஞ்ச் டயலாக் பட கலாசாரத்தை வளர்த்து… இப்போது ஸ்டிக்கர் கலாசாரத்தையும் வளர்க்கின்ற தமிழ் நாட்டில்…

எனக்கும் கூட ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு இந்தப் பணிகளை செய்ய உந்துதலை ஏற்படுத்திவிட்டார்கள்! சற்று குனிந்து பார்த்தேன்… என் பைக்கிலும்கூட ஒரு ஸ்டிக்கர் ஒட்டப் பட்டிருக்கிறது! அது PRESS !